குரு_பக்தி

#குரு_பக்தி!!

#கறுப்பு_நூலும்_வெள்ளை_நூலும்

ஆசார்யார் வேதன், ஒருநாள் அதிகாலை ஆசிரமத்தை விட்டுப் புறப்பட்டார். அருகேயுள்ள தேசத்து அரசன், அவரை யாகம் நிகழ்த்த அழைத்திருந்தான்.

பொதுவாக அவர் ஆசிரமத்தை விட்டு எங்கும் வெளியே செல்வதில்லை. கோயில் குளங்களைத் தேடிக்கூடப் போனதில்லை. இருக்கும் இடத்திலேயே தியானம் செய்து இறைவனை மனத்திற்குள் காண முடிகிறபோது, எதற்கு வெளியே செல்ல வேண்டும் என்பது அவரது சித்தாந்தம்.

என்றாலும் யாகத்தை முன்னிருத்தி மன்னனின் அழைப்பைத் தட்ட முடியவில்லை. தம் சீடன் உத்தங்கனை அழைத்தார். தாம் திரும்பி வரும்வரை, குரு பத்தினியையும் பிற சிஷ்யர்களையும் பாதுகாப்பாக கவனித்துக் கொள்ள வேண்டியது பிரதான சீடனான அவன் பொறுப்பு என்பதை அறிவுறுத்தினார். பின் புறப்பட்டார்.

குருநாதர் திரும்பி வரும்வரை அக்கறையாக ஆசிரமத்தையும் குருபத்தினியையும் பிற சீடர்களையும் கவனித்துக் கொண்டான். ஆசிரமத்துக் கொட்டிலில் கட்டியிருந்த பசுமாடுகளுக்குத் தீவனம் போடுவதிலிருந்து ஆசிரமத்தைப் பெருக்கித் தூய்மை செய்வதுவரை அவன் செய்த பணிகள் பலப்பல.

ஆசார்யர் திரும்பி வந்ததும் குரு பத்தினி, உத்தங்கனின் செயல்பாடுகளை மன நிறைவுடன் பாராட்டினாள். ஆசார்யார் மனம் மகிழ்ந்தார், ‘‘உத்தங்கா! நீ எல்லா நலங்களும் பெற்று வாழ்வாய். உன் குருகுலவாசம் நிறைவடைந்தது. கற்க வேண்டிய அனைத்தையும் கற்றுவிட்டாய்.

ஓர் ஆசிரமத்தைத் தனியே நிர்வகிக்கும் பொறுப்புணர்வும் உனக்கு வந்துவிட்டது. இனி நீ செல்லலாம்!’’ என உத்தங்கனுக்கு விடை கொடுத்தார்.

தயங்கியவாறே நின்றான் உத்தங்கன். ‘‘சுவாமி. தங்களுக்கு ஏதேனும் குருதட்சிணை கொடுக்க விரும்புகிறேன். தாங்கள் எது கேட்டாலும் தரச் சித்தமாய் இருக்கிறேன்’’ என்றான்.

‘‘எனக்கு எதுவும் தேவையில்லை, குழந்தாய். நான் இல்லாத காலத்தில் ஆசிரமத்தைச் சிறப்பாக நீ கவனித்துக் கொண்டதே எனக்களிக்கப்பட்ட குருதட்சிணைதான்!’’ ‘‘குருதட்சிணை கொடுத்தாலன்றி, கற்ற கல்வி ஒரு மாணவனுக்குப் பயன்படாது என்பது சாத்திரம்

. தாங்கள் விரும்பும் குருதட்சிணை எதுவென்று சொன்னால் மகிழ்வேன்.’’
குரு யோசித்தார். பின் சொன்னார்: ‘‘நல்லது. எனக்கு எதுவும் தேவையில்லை. என் மனைவிக்கு ஏதாவது தேவையா என்று கேள். அதைக் கொடுத்து, உன் மனமும் தட்சிணை தந்த வகையில் திருப்தி அடையட்டும்!’’

உத்தங்கன் குருபத்தினியிடம் தட்சிணையாக என்ன வேண்டும் எனக் கேட்டான். அவள் சற்று யோசித்துப் பின் சொன்னாள்: ‘‘பௌஷ்ய மன்னனின் மனைவியிடம் விசேஷமான இரண்டு குண்டலங்கள் இருக்கிறதாம்.

அவை கற்புக்கரசியான அவள் செவிகளில் ஒளிவீசியவாறே ஆடுகின்றன என்கிறார்கள். அவற்றை எனக்காகக் கேட்டு வாங்கி வா! ஆனால் ஒன்று. நான்கு நாட்களில் குண்டலங்களோடு வரவேண்டும் நீ!’’
மனைவி சொல்வதைக் கேட்ட குரு, தானும் சீடனைச் சோதிக்க விரும்பினார்.

‘‘உத்தங்கா! என் மனைவி என்ன தட்சிணை என்பதைச் சொல்லிவிட்டாள். நான்கு நாட்களுக்குள் குண்டலங்களோடு நீ வரவில்லையென்றால், சொன்ன சொல் தவறிய உனக்கு நீ கற்ற கல்வி பயன்படாமல் போகலாம். நாலே நாட்களில் வந்துவிடுவாய் அல்லவா?’’ ‘‘நிச்சயமாக வருவேன் குருவே.

உங்கள் ஆசியால் என்னால் அதை சாதிக்க முடியும்!’’விடைபெற்று, பௌஷ்ய மன்னனைத் தேடிப் புறப்பட்டான் உத்தங்கன். வானிலிருந்து இந்த உரையாடலைக் கேட்ட தேவேந்திரன், உத்தமமான சீடனான உத்தங்கனுக்கு உதவ முடிவு செய்தான்.

உத்தங்கன் சென்ற வழியில் கம்பீரமான ஒரு மாட்டின் மீது ஒரு பெரிய மனிதர் அமர்ந்து சென்றுகொண்டிருந்தார்.
ஒளிவீசும் முகம். அவரைப் பார்த்தாலே அவர் சொல்லுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று தோன்றியது.

அவர், உத்தங்கனிடம், மாட்டின் சாணம், சிறுநீர் ஆகியவற்றைக் கலந்து சிறிது அருந்திச் செல்லுமாறு பாசத்தோடு கூறினார். நெடுந்தூரம் செல்லும் அவனுக்கு அது உடல்வலு கொடுக்கவல்லது என்றார்.

தான் நெடுந்தூரம் செல்வது அவருக்கு எப்படித் தெரியும் எனக் கேட்க நினைத்தான் உத்தங்கன். ஆனால் கேட்கவில்லை. அவர் சொன்னபடியே மாட்டின் சாணத்தையும் சிறுநீரையும் சிறிதளவு கலந்து உட்கொண்டான்.

ஆசிரமத்தில் மாட்டின் பொருட்களால் செய்யப்படும் பஞ்சகவ்யத்தை அவன்தான் அருந்தியிருக்கிறானே! கண்மூடித் தியானம் செய்தபடி அதை சாப்பிட்டுவிட்டு, விழி திறந்தவன், மாட்டையோ அதன் மேல் அமர்ந்துவந்த மனிதரையோ காணாமல் திகைத்தான்.

அவர் போயிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டான். தானும் வேகமாகச் சென்று பௌஷ்ய மன்னனை அடைந்தான்.

குருதட்சிணைக்கு ராணியின் குண்டலங்கள் தேவை என்று மன்னனிடம் சொன்னதும், ராணியையே அந்தப்புரத்தில் போய்ப் பார்த்துக் கேட்கச் சொன்னார் அரசர்.
என்ன சங்கடம்! அந்தப்புரமெங்கும் தேடித் தேடிப் பார்த்தும் அவனால் ராணியைக் காண இயலவில்லை. அரசரிடம் வந்து சொன்னதும் அரசர் நகைத்தார்.

ராணி மகாபதிவிரதை என்றும் குளித்துத் தூய்மையாகச் சென்றால்தான் அவள் தரிசனம் கிட்டும் என்றும் சொன்னார். அதன்படி உத்தங்கன் நீராடி, அந்தப்புரம் சென்றபோது, தாய்மைக்கே உரிய கனிவோடு அவனை வரவேற்றாள் அரசி

. அவன் சொன்னதனைத்தையும் கேட்ட அவள், ‘‘குழந்தாய், உத்தங்கா! குண்டலங்கள் விசேஷமானவைதான்.

ஆனால் அவை வெறும் அலங்காரம்தானே அன்றி அவற்றால் என்ன பயன்? தர்மத்தை அனுசரிப்பதால் வரும் சாந்தியை இந்த வெற்று அலங்காரப் பொருள் எங்கே தரப் போகிறது?
உணவால் நா தித்திக்கிறது.

ஆனால் குண்டலங்களை அணிவதால் காது தித்திக்கிறதா என்ன? காதுக்கு என்ன சுகம் கிடைக்கிறது? எனக்குக் குண்டலங்கள் மேல் அக்கறை எதுவும் இல்லை! உனக்கு அவை குருதட்சிணையாகப் பயன்பட்டால் அதைவிட எனக்கு மகிழ்ச்சி வேறில்லை!’’ என்று சொன்ன ராணி, அவற்றைக் கழற்றி உத்தங்கனின் கைகளில் வைத்தாள்.

குண்டலங்களின் ஸ்பரிசம் பட்டதும் உத்தங்கனின் உள்ளங்கை குளுமை பெற்றது. குண்டலங்களின் ஒளியால் அந்தப் பிரதேசமே வெளிச்சமடைவதைப் பார்த்து உத்தங்கனிடம் வியப்பு ஏற்பட்டது. ராணி செய்த உபகாரத்திற்கு நன்றி தெரிவித்து அவன் விடைபெற்றபோது, இந்தக் குண்டலங்களின் மேல் பலருக்குக் கண் இருக்கிறது என்றும் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிக அவசியம் என்றும் அறிவுறுத்தினாள் ராணி.

அவன் ஆசிரமம் நோக்கி நடக்கத் தொடங்கியபோது, தன்னை மனித உருவில் தட்சகன் என்கிற நாகம் தொடர்வதை அவன் கவனிக்கவில்லை.

குண்டலங்களை ஒரு மரத்தடியில் வைத்துவிட்டு, குளத்தில் முகம் கழுவி இறைவனைப் பிரார்த்தித்து, பின் மீண்டும் தன் பயணத்தைத் தொடர எண்ணி மரத்தடிக்கு வந்தான். என்ன ஆச்சரியம்! குண்டலங்களைக் காணோம்.

பதறிப்போய்ச் சுற்றுமுற்றும் பார்த்தபோது ஒருவன் கையை மூடிக்கொண்டு ஓடுவதும் அவன் கைவிரலின் இடுக்குகளிலிருந்து ஒளி கசிவதும் உத்தங்கனின் கண்களில் பட்டன. சந்தேகமில்லாமல் அவன்தான் குண்டலங்களைத் திருடியிருக்கிறான்.

வேகமாக ஓடினான் உத்தங்கன். ஆனால், அவனோ நாகமாக மாறி குண்டலங்களுடன் குளக்கரையில் இருந்த ஒரு பொந்தில் நுழைந்து பாதாள உலகத்திற்குச் சென்றுவிட்டான்.

இனி என்ன செய்வது? உத்தங்கன் திகைத்தவாறு ஒரு குச்சியை எடுத்து அந்தப் பாம்பு சென்ற பள்ளத்தைத் தோண்டிப் பார்க்கலானான். மறுகணம் அவனருகே தொப்பென்று ஏதோ வந்து விழும் சப்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால் அது ஓர் ஆயுதம்.

அந்த ஆயுதத்தால் பள்ளத்தைத் தோண்டலானான். கிடுகிடுவென்று பள்ளம் பெரிய சுரங்கப் பாதையாக உருவாகிக் கீழ்நோக்கிச் சென்றது. அதில் வேகமாக ஓடினான். பாதை அவனை மிக விரைவில் நாக உலகத்திற்குக் கொண்டு விட்டது. அங்கே கறுப்பு, வெள்ளை நூல்களால் இரண்டு பெண்கள் ஆடை நெய்துகொண்டிருந்தார்கள்

. அவர்கள் யார் என்று தெரியவில்லை. ஒரு கணம் கூட நிறுத்தாமல் அவர்கள் கறுப்பு நூலாலும் வெள்ளை நூலாலும் மாற்றி மாற்றி நெய்துகொண்டே இருந்தார்கள்.

அவர்கள் அருகே பன்னிரண்டு ஆரம் கொண்ட ஒரு பெரிய சக்கரம் இருந்தது. அது நிற்காமல் சுழன்றுகொண்டே இருந்தது. இவர்கள் நெய்வதற்கும் அந்தச் சக்கரங்கள் சுழல்வதற்கும் இடையே ஏதோ ஒரு தொடர்பிருந்தது போல் தோன்றியது உத்தங்கனுக்கு.

அவர்கள் அருகே ஒரு குதிரையும் ஒரு மனிதனும் தென்பட்டார்கள். அந்த மனிதனிடம் எனக்குக் குண்டலங்கள் வேண்டும் என்று கேட்டான் அவன். ‘‘அவற்றை நாகராஜன் கவர்ந்துகொண்டு இந்தப்புறம் ஓடியதைப் பார்த்தேன்.

உனக்குக் குண்டலங்கள் கிடைக்க ஒரே வழி, இந்தக் குதிரையின் பின்புறத்தை ஓங்கி உதைப்பதுதான்!’’ என்றான் அவன்!
குதிரையின் பின்புறத்திற்கும் பெண்கள் காதில் அணியும் குண்டலத்திற்கும் என்ன சம்பந்தம் என்று உத்தங்கனுக்குப் புரியவில்லை.

ஆனாலும் அவன் சொன்னபடி, வலிமையை எல்லாம் திரட்டி, குதிரையின் பின்புறத்தில் ஓங்கி ஓர் உதைவிட்டான். அடுத்த கணம் குதிரையின் மயிர்க் கால்களிலிருந்து பெரும் புகையும் நெருப்பும் எழுந்து நாக உலகம் முழுவதையும் சூழ்ந்துகொண்டது.

இதைக் கண்டு அதிர்ச்சியும் அச்சமும் அடைந்த தட்சகன் என்ற நாகம் உயிர் பிழைத்தால் போதும் என்று குண்டலங்களை உத்தங்கனிடம் திருப்பிக் கொடுத்து மன்னிப்பு வேண்டியது. குண்டலங்கள் கைக்கு வந்தும்கூட உத்தங்கன் கடும் வருத்தத்தில் ஆழ்ந்திருந்தான்.

அவன் ஏன் வருந்துகிறான் என்று அன்போடு கேட்டான் குதிரையின் அருகே இருந்த மனிதன். ஆசார்யர் வைத்த கெடுவில் இன்னும் ஐந்தே நிமிடங்கள்தான் மீதமிருக்கிறது என்றும் அதற்குள் தான் ஆசிரமம் செல்ல இயலாதென்பதால் வருந்துவதாகவும் சொன்னான் உத்தங்கன்.

‘‘இது சாதாரணக் குதிரை அல்ல. காலக் குதிரை. இதில் ஏறி இதன் கழுத்தைப் பிடித்து அமர்ந்துகொள். செல்ல வேண்டிய இடத்தை மனத்தால் நினைத்துக் கொள். மறுகணம் குதிரை உன்னை அங்கே கொண்டுவிடும்!’’ என்றான் அந்த மனிதன்

. அப்படியும் நடக்குமா? ஆச்சரியத்தோடு உத்தங்கன் குண்டலங்களைக் கைகளில் வைத்து மூடிக்கொண்டு குதிரை மேல் தாவி ஏறித் தான் கல்வி கற்ற ஆசிரமத்தை நினைத்துக் கொண்டான்.

மறுகணம் குதிரை ஆசிரம வாயிலில் இருந்தது! அவனை அங்கே இறக்கிவிட்ட அது ஒரே பாய்ச்சலாகத் தான் வந்த இடத்திற்குத் திரும்பிவிட்டது! குருதேவரும் அவர் மனைவியும் காலக்கெடு நெருங்குவதால், அவன் உரிய நேரத்தில் வந்துசேர வேண்டுமே எனக் கவலையோடு காத்திருந்தார்கள்.

அவர்களை வணங்கிய உத்தங்கன் குண்டலங்களை குருபத்தினியின் கரங்களில் சமர்ப்பித்தான். ஆசார்யர் அவனைப் பிரியத்தோடு வாழ்த்தினார்.
‘‘கடவுள் அருளாலும் உங்கள் ஆசியாலும் பல இடையூறுகளைக் கடந்து குண்டலங்களை உரிய நேரத்திற்குள் கொண்டுவந்து விட்டேன்.

ஆனால் வழியில் நடந்தவை எல்லாம் மர்மமாக இருக்கின்றன!’’ என்று நடந்த அனைத்தையும் சொல்லி குருநாதரிடம் விளக்கம் கேட்டான் உத்தங்கன். அவர் சிரித்தவாறே விளக்கம் சொன்னார்.

‘‘குழந்தாய்! மாட்டின் மீது வந்த பெரியவர் இந்திரன். அவர் உனக்குத் தந்தது அமிர்தம். உன் குருபக்தியை மெச்சித் தரப்பட்ட பரிசு அது. அதை அருந்தியிராவிட்டால் நாக உலகத்தின் கடும் விஷத்திலிருந்து நீ எப்படித் தப்பித்திருக்க முடியும்? நாக உலகத்தை அடைவதற்குப் பள்ளம் தோண்டினாயே?
அப்போது உன் அருகே வந்து விழுந்த ஆயுதம் இந்திரனின் வஜ்ராயுதம்.

அதனால்தான் ஒரு சிறிய பொந்தை உடனடியாக ஒரு சுரங்கப் பாதையாக உன்னால் தோண்ட முடிந்தது. கீழ் உலகில் கறுப்பு வெள்ளை நூல்களால் ஆடை நெய்த இளம்பெண்கள் இருவரைக் கண்டாய் அல்லவா? அவர்கள் கடவுளின் பணிப்பெண்கள். இடைவிடாமல் வெள்ளை நூலால் பகலையும் கறுப்பு நூலால் இரவையும் தொடர்ந்து நெய்துகொண்டே இருக்கிறார்கள்.

அவர்களால்தான் இரவும் பகலும் மாறி மாறி வருகின்றன. அவர்களின் அருகே பன்னிரண்டு ஆரங்களோடு சுற்றிக் கொண்டிருந்த சக்கரம்தான் காலச் சக்கரம். அந்த ஆரங்கள் பன்னிரண்டு மாதங்களைக் குறிப்பவை. அங்கே அமர்ந்திருந்த மனிதன் காலதேவன். குதிரை, சக்தியின் குறியீடு.

சக்தியோடு வேலை செய்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் ஏராளமான வேலை செய்து ஜெயிக்க வேண்டியதை யாரும் ஜெயிக்கலாம். இதோ நீ ஜெயித்ததைப் போல.’’ குருதேவரும் குருபத்தினியும் அவன் தலைமீது கைவைத்து ஆசீர்வதித்தார்கள். வானுலகிலிருந்து உத்தங்கன் மேல் மலர்மாரி பொழிந்தது.

(குருபக்தியின் மகிமையை விளக்கும் இக்கதை மகாபாரதத்தில் ஆதி பர்வத்தில் சொல்லப்பட்டுள்ளது.)

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...