பிருகு மகரிஷி யார் என்பது பற்றியும் அவரின் வாழ்க்கை வரலாறு

உலகம் தோன்றிய காலத்தில் படைக்கும் கடவுளான பிரம்மதேவரால் உருக்கப்பட்டவர் பிருகு முனிவர். பிருகு என்னும் சொல்லுக்கு, கடுமையான தவசக்தியால் பாவங்களைப் பாசுக்குபவர் என்று பொருள். பஞ்சபூதங்களில் அக்கினியுடன் பிருகு மகரிஷி பிறந்ததாக வேதங்கள் கூறுகின்றன.

மகரிஷி பிருகு, சப்தரிசிகளுள் ஒருவர். பிரம்மதேவரால் தன் படைக்கும் தொழிலில் உதவி புரிவதற்காக உருவாக்கப்பட்ட பிரஜாபதியில் ஒருவர்.

அவரது மானசபுத்திரராகவும் கருதப்படுகிறார்.

ஏறக்குறைய கி.மு 3000 ஆம் ஆண்டு, திரேதா யுகத்தில், இவர் எழுதிய பிருகு சம்ஹிதா எனும் நூலே சோதிட சாஸ்திரத்தின் முதல் நூலாகக்கருதப்படுகிறது.

இவரது துணைவியின் பெயர் கியாதி ஆகும். இவர் தக்க்ஷனின் மகளாவார். இவர்களுக்கு ததா, விததா, சுக்ரன், சியவனர் என்ற மகன்களும், ஸ்ரீ என்ற மகளும் உண்டு.

பிருகு மகரிஷி சிவபெருமான் பிரணவப் பொருள் மறக்கக் காரணமாக இருந்தவர்.

பிருகு மகரிஷி ஜீவன் முக்தனாக விரும்பி கடும்தவம் இருந்தபோது தம் தவத்திற்கு இடையூறு ஏற்படாமலிருக்க விரும்பினார்.

எனவே தம் தவத்தை தடுப்பவர்கள் பிரம்மஞானத்தை மறக்க வேண்டும் என்று சாபமிட்டுவிட்டு தவம் இயற்றினார்.

அவருடைய தவ அக்னி தேவர்களை தாக்கியது. தேவர்கள் திருமாலுடன் வந்து சிவபெருமானிடம் பிரார்த்திக்கவே, தமது திருக்கரத்தை பிருகு முனிவரின் சிரசில் வைத்து அவரது தவாக்னியை அடக்கினார் சிவபெருமான்.

சிவபெருமான் பிருகு முனிவரது விருப்பம் நிறைவேறும் என்று ஆசிர்வதித்தார்.

சிவ தரிசனம் பெற்று மகிழ்ந்த பிருகு முனிவர் தமது சாபத்தால் சிவபெருமான் பாதிக்கப்படுவாரே என்று வருந்தி தம்மை மன்னிக்க வேண்டினார்.

பிருகு முனிவரின் சாபத்தைத் தாம் மகிழ்வுடன் ஏற்பதாகக் கூறினார் சிவபெருமான்.

இதனாலேயே பின்னர் சுவாமிமலையில் தமது புத்திரன் முருகரிடம் உபதேசம் பெற்றார் சிவபெருமான்.

பிருகு முனிவன் மனைவி கியாதி. இவள் அரக்கன் (தக்கன்) மகள்.

இந்த தம்பதிக்கு மகாலட்சுமியே மகளாகப் பிறந்தாள்.
பின் விஷ்ணுவை மணந்து கொண்டாள்.

இதனால் உலகத்தைக் காக்கும் ஸ்ரீவிஷ்ணுவுக்கு மாமனார் என்ற பெருமை பெற்றவர் இவர்.

பிருகுவின் பெயரால் தான் லட்சுமிக்கு பார்கவி என்ற பெயர் ஏற்பட்டது.

மகாபாரதத்தில் பிருகு மகரிஷிக்கும் பரத்வாஜ முனிவருக்கும் நடந்த வாக்குவாதம் மிகவும் சிறப்பானது. இதற்கு பிருகு பரத்வாஜ சம்வாதம் என்று பெயர்.

இப்பகுதி தத்துவக் கருத்துக்களை எடுத்துச் சொல்லும் பகுதியாக அமைந்துள்ளது.

கடவுளைப் பற்றி சொல்வதில் இவர் தனிப்பெயர் பெற்றவராக இருக்கிறார்.

சூதபவுராணிகர் என்ற முனிவர் புராணக் கதைகளை உலகிற்கு வழங்கினார். இந்தக் கதைகளைக் கேட்டு உலகிற்கு தந்தவர் பிருகு வம்சத்தில் பிறந்த சவுனகர் என்பவர் ஆவார்.

இவர் இல்லாவிட்டால் புராணக்கதைகளே நமக்கு கிடைத்திருக்காது. என்றும் பதினாறு வயது என்ற பெருமைக்கு உரிய மார்க்கண்டேய மகரிஷியும் பிருகு வம்சத்தவர் தான்.

விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் பரசுராமரும் இவரது வம்சத்தில் தான் அவதரித்தார்.

பிருகு எனப்படும் பார்கவ வம்சத்தில் அவதரித்ததால் பரசுராமருக்கு பார்கவ ராமன் என்ற பெயரும் உண்டு.

விருத்திராசுரனைக் கொல்ல தன் முதுகெலும்பினையே இந்திரனிடம் கொடுத்து, தன்னையே மாய்த்துக் கொண்ட ததீசி முனிவரும் பிருகுவம்சத்தில் தோன்றியவரே. ஜனமேஜயர் செய்த சர்ப்பயாகத்தை நடத்தி வைத்த உதங்கமுனிவர் இவ்வம்சத்தவர் தான்.

இப்படி புராணங்களில் இடம்பெற்ற எத்தனையோ மகரிஷிகள் பிருகுவம்சத்தில் அவதரித்துள்ளனர்.

பிருகு மகரிஷி புலோமா என்ற பெண்ணையும் மணந்தார் .

இவள் குழந்தையாக இருந்தபோது மிகவும் சுட்டியாக இருந்தாள். அவளைக் கட்டுப்படுத்த எண்ணிய பெற்றோர், அதோ பார்! அந்த மரத்தில் இருக்கும் பிரம்மராட்சதனிடம் உன்னைக் கொடுத்துவிடுவோம் என்று சொல்லி பயமுறுத்தினர். விளையாட்டாக சொன்ன சொல்லை அவர்கள் மறந்து விட்டனர்.

ஆனால், மரத்தில் இருந்த பிரம்மராட்சதன் இந்நிகழ்வை மறக்காமல் தக்க தருணத்திற்காகக் காத்திருந்தான்.

புலோமாவிற்கு திருமணவயது வந்தது. பிருகு மகரிஷிக்கும் புலோமாவுக்கும் திருமணம் சிறப்பாக நடந்தது.

இதை அறிந்த ராட்சதனுக்கு கடும் கோபம் உண்டானது.

புலோமா இருந்த பிருகுவின் ஆஸ்ரமத்திற்கு அருகில் வந்து ஒரு மரத்தில் தங்கிக் கொண்டான்.

இவ்விஷயத்தை அறிந்த பிருகு தன் மனைவிக்கு பாதுகாப்பு தேடினார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த புலோமாவை, தான் இல்லாத நேரத்தில் பாதுகாக்கும்படி தன்னோடு பிறந்த தன் சகோதரன் அக்னிதேவனுக்கு உத்தரவிட்டார்.

அதனால் அவன் ஆஸ்ரமத்திலேயே தங்கவேண்டியிருந்தது.ஒருநாள் பிருகு மகரிஷி ஆசார அனுஷ்டானங்களுக்காக நதிக்கரைக்கு கிளம்பினார்.

அக்னிதேவன் ஆஸ்ரமத்தில் காவல் காத்துக் கொண்டிருந்தான் .

இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணிய ராட்சதன், ஆஸ்ரமத்தின் உள்ளே நுழைந்தான்.

எதிர்ப்பட்ட அக்னியிடம் பவ்யமாக பணிந்து, சுவாமி! நீங்களே எனக்கு நியாயத்தைச் சொல்லுங்கள்.

புலோமாவின் பெற்றோர் தன் பெண்ணை எனக்கு தருவதாக வாக்களித்துவிட்டு உமது சகோதரருக்கு திருமணம் செய்துவைத்தது சரியா? இவள் குழந்தையாக இருந்த போதே என்னுடையவளாகி விட்டாள் ! என்று நியாயம் பேசினான்.

அவனது விதண்டாவாதத்தைக் கேட்ட அக்னி, தன் அண்ணியார் பிருகு மகரிஷிக்குத் மட்டுமே உரியவள், திருமணமான பெண்ணை அவனுடன் அனுப்ப இயலாது, என்று மறுத்து விட்டார்.

பிரம்ம ராட்சதன் கோபாவேசமாக எழுந்தான். இவள் என் மனைவி! நான் இவளைத் தூக்கிச் செல்வேன்! என்று புலோமாவைப் பலவந்தப்படுத்தினான்.

அந்த சமயத்தில் பயத்தில் புலோமா அலறித் துடித்தாள். அவள் ராட்சதனின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஓரிடத்தில் போய் விழுந்தாள்.

அப்போது பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் முகம் மின்னலைப் போல இருந்தது.

அந்த ஒளியை தாங்க முடியாத பிரம்மராட்சதன் அந்த கணமே சாம்பலானான்.

பிருகு தன் அனுஷ்டானங் களை முடித்துக் கொண்டு ஆஸ்ரமம் திரும்பினார்.

நடந்த விஷயங்கள் அவருடைய ஞானதிருஷ்டியில் தெரிந்தன.

தன் மனைவி புலோமாவையும், தேஜஸ் நிறைந்த குழந்தையும் வந்து பார்த்தார்.

தன் மனைவியைப் பாதுகாக்கத் தவறிய அக்கினிதேவன் மீது கோபம் உண்டானது.

ஏ! அக்னி! நீ யாகத்தீயாகவும், அடுப்புத் தீயாகவும் இருந்து நற்பெயர் பெற்றாய். இனி ஆங்காங்கே திடீர் திடீரெனப் பிடித்து அகப்பட்டவர்களை எல்லாம் பஸ்பமாக்கி தன் இரையாக்கிக் கொள்ளும் இழிந்த நிலையை அடைவாய்.

மக்கள் உன்னைத் திட்டித் தீர்ப்பார்கள், என்று சாபமளித்தார்.மனம் வருந்திய அக்னிக்கு ஆறுதல் சொல்ல ஓடோடிவந்தார் பிரம்மா. அக்னியே! உனக்கு கிடைத்த சாபம் பற்றி கவலைப்படாதே.

இவ்வுலகில் நீ பற்றி அழிக்கப்போகும் பொருட்களும், மனிதர்களும் உலகத்திற்கு தேவையில்லாதவர்களாகவே இருப்பர்.

அவரவர் முன்வினை மற்றும் செய்த பாவத்தின் அடிப்படையில் உன்னால் பொருட்களையும், உயிரையும் இழப்பர்.

எனவே உலகத்தைத் தூய்மைப்படுத்தும் பணியை விருப்பத்தோடு செய். உன்னால் உலகம் நன்மை பெறுவதாக, என்று ஆறுதல் சொல்லி தேற்றினார்.

புலோமாவிற்குப் பிறந்த குழந்தைக்கு சியவனர் என்று பெயரிட்டு வளர்த்தனர்.

சிசுவாக இருந்தபோதே தேஜஸால் பிரம்ம ராட்சதனைக் கொன்ற இவருக்கு தனிச் சிறப்பிடம் உண்டு. ஒருமுறை பிருகு மகரிஷி, மும்மூர்த்திகளில் சாந்த குணம் கொண்ட மூர்த்தி யார் என்பதை அறிய பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் காணச் சென்றார்.

பிரம்மாவும், சிவனும் பிருகு மகரிஷி வைத்த சோதனையில் தோற்றதால் சாபம் பெற்றனர்.

பிரம்மாவுக்கு கோயில் இல்லாமல் போனது. சிவன் லிங்கவடிவம் பெற்றார். ஆனால், விஷ்ணு பிருகு மகரிஷி காலால் உதைத்த போதும் கோபப்படாமல் புன்சிரிப்புடன் பிருகுவின் பாதங்களைப் பணிந்து நின்றார். அதனால், மும்மூர்த்திகளில் விஷ்ணுவே சாந்தமூர்த்தி என்ற முடிவுக்கு வந்தார் பிருகு.

ஜோதிடம், ஆயுர்வேதம் போன்ற சாஸ்திரங்களில் பிருகு மகரிஷியின்ப அரிய நூல்கள் பல காணப்படுகின்றன.

பிராமண சமுதாயத்தில் ஸ்ரீவத்ஸ கோத்ரம் என்ற கோத்திரத்திற்கு மூலபுருஷராக இருப்பவர் இவர்.

அரக்கர்களை கொல்ல ஸ்ரீ மகாவிஷ்ணு  துரத்தி வர
அரக்கர்களுக்கு பிருகு மனைவி அடைக்கலம் கொடுக்கவே
பிருகு மனைவியை கொன்றார்.

பிருகு முனிவரின் மனைவியை விஷ்ணு அழித்தார் அதனால், அவரை ஏழுமுறை மனிதனாக பூமியில் பிறக்கும் படி பிருகு சபித்தார். இதனால் தத்தாத்ரேயர், பரசுராமர், இராமர், வியாசர், கிருஷ்ணன், உபேந்திரன், கல்கி முதலிய சப்த அவதாரங்கள் ஏற்பட்டன.

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...