எம்பிராட்டி காரைக்கால் அம்மையார் குருபூஜை

எம்பிராட்டி காரைக்கால் அம்மையார்  குருபூஜை வரும் 23-03-2019 அன்று திருவாலங்காடு திருத்தலத்தில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு அம்மையாருக்கு அபிஷேகமும், இரவு 9 மணிக்கு புறப்பாடும் அதைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கும் ஐக்கிய காட்சி நடைபெறும்.

"இம்மையிலே புவியுள்ளோர் யாரும் காண ஏழுலகும் போற்றிசைப்ப எமையாளும் அம்மை திருத் தலையாலே நடந்து போற்றும் அம்மையப்பர் ஆலங்காடாம்"

இது ஞானசம்பந்தப்பெருமான் எண்ணத்தில் உதயமான செய்தி அதனால் திருவாலங்காட்டை மிதிக்க அஞ்சி புறத்திலேயே மடத்தில் தங்குகிறார்.

காரைக்கால் அம்மையார் திருவாலங்காடு வரும்பொழுது இங்கு இருக்கும் கற்கள் எல்லாம் சிவலிங்கமாகவே அவருக்கு காட்சியாக இறைவன் கொடுத்தான்.

அதனாலேயே திருவாலங்காடு தலையாலேயே நடந்து வருகிறார். கைலாயத்திலும் அவருக்கு இவ்வாறே காட்சி கிடைத்தது கைலாயத்தையும் அவர் தலையாலேயே நடந்து செல்கிறார்.

அதனால் கைலாயமும் திருவாலங்காடும் ஒன்றே ஆகும். சிவனாரால் அம்மையே என்று அழைக்கப்பட்ட பெருந்தகையார் இவராவார். இவர் அடியார்களுக்கு தொண்டு செய்யும் பொழுது தம்மை  தாயாக பாவித்து தொண்டு செய்தார்.

அம்மையார் கணவனார் தனதத்தனிடம் ,ஓரிரண்டு மாங்கனிகள் அவரிடம், வந்தணைந்தோர் கொடுக்கின்றனர். இந்த மாங்கனிகளை இல்லத்திலே புனிதவதியாரிடம் (காரைக்கால் அம்மையார்)கொடுக்குமாறு கூறுகிறார்.

அம்மையாரும் அதை வாங்கி பத்திரமாக வைக்கிறார். அந்நேரம் பரமனார் திருத்தொண்டர் மிகவும் பசித்திருந்து வருகிறார். "வேதங்கள் மொழிந்த பிரான் மெய்த்தொண்டர் நாதன் அடியாரை பசி தீர்ப்பேன்"என எண்ணி பாதம் விளக்க  நீர் வைத்து உபச்சாரம் செய்கிறார்.

அவர் மிகவும் பசித்திருக்க கறியமுது செய்வதற்கு காலம் ஆகும் என்று தாய் போல உடனே பசி தீர்க்க தன் கணவனார் கொடுத்த மாங்கனி ஒன்றை  எடுத்து கொடுத்து வந்த திருத்தொண்டர் பசி ஆற்றுவார். தொண்டரும் மனமுவந்து போவார்.

இந்த இடத்தில் அம்மையார் கணவன் சொல்லை விட, (கற்பு நெறி) சிவனடியாரின் பசியைப் போக்குவதே (சிவநெறி) மிகப்பெரும் செயல் என்று அதை நிறைவேற்றுகிறார்.

சிவ புண்ணியத்திற்காக எந்த புண்ணியத்தையும் விலக்கலாம்.  வேறு தர்மங்களுக்காக சிவ தர்மத்தை விடக்கூடாது.
பிறகு கணவனார் மாங்கனி கேட்க இறைவனாரிடம் கேட்டு அம்மையார் மாங்கனி பெற்றுத் தருகிறார்.

பிறகு அம்மையார் தெய்வீக பிறவி என்று பரமதத்தன் ஒதுங்கி விடுகிறார். காரைக்கால் அம்மையாரும் பேய் திருவுருவம் பெற்று சிவனாருக்கு பதிகம் பாடி பூஜை செய்கிறார்.

எம்பிராட்டி காரைக்கால் அம்மையார் வட திசை எல்லாம் சென்று கைலாயம்  சென்றடைந்தார். கைலாயம் கண்டவுடன் கால்நடையை தவிர்த்து தலையாலே நடந்து செல்கிறார்.

அப்பொழுது இறைவனார் ஒரு பாகம் பெற்ற அந்த இமய வல்லி தன் திரு கண்ணால் நோக்குகிறாள். அம்பிகை அதிசயத்துடன்    பேய் உருவம் தாங்கி தலையினால் நடந்து வரும் அன்புதான் என்னே! என இறைவனிடம் கேட்க"

வரும் "இவள் நம்மைப் பேணும் அம்மை காண்
பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள்"என்று சொல்லி காரைக்கால் அம்மையாரை,உலக உயிர்கள் இன்பம் துய்க்க நான் மறையும் ஆகமங்களும் அருளிச்செய்த வாக்கால் "அம்மையே" என்று அழைக்கிறார்.

அம்மையாரும் அப்பா என பாதத்தில் வீழ்ந்தார். தேவதேவேசர் சிவபெருமான் அம்மையாரை எதிர்நோக்கி, நம்பால் வேண்டுவதென்ன? என்று கேட்கிறார். இந்த இடத்தில் நாம் நுணுக்கமாக ஒன்று சிந்திக்க வேண்டும்.

இறைவனே அம்மை என்று அழைக்கும் தவத்தையுடைய காரைக்கால் அம்மையாருக்கு இறைவன் என்ன கொடுக்க வேண்டும் என்று அவருக்கு தெரியாதா?ஏன் அம்மையாரிடம்  என்ன வேண்டும்? என்று கேட்கிறார் என்றால் உயிர்கள் விருப்பம் அறிந்துதான் இறைவன் எதுவும் கொடுப்பான்

ஏன் நம் பிறவி கூட நாம் தான் முடிவு செய்து வருகின்றோம். சிவஞானபோதம் இரண்டாம் நூற்பா அதிகரணம் மூன்றில்"உளம் அணுவாய்ச் சென்று தள்ள விழும் கருவில் தான்"அதாவதுஇறக்கும் தருவாயில் உயிர் தாம் அடையாத இன்பம் ஒன்றை மனம் பற்றும்.

உயிர்கள் என்ன நினைத்ததோ, இந்தப் பிறவியில் வீடு வாங்க வில்லையோ? வாகனம் வாங்க வில்லையோ?அல்லது அரசனாக வேண்டும் அல்லது பணக்காரனாக வேண்டாம் ஏழையாக நிம்மதியாக இருந்தாலே போதும் என்ன பல பலவாறு

  உயிர்கள் கேட்பதை இறைவன் மீண்டும் பிறவியாக கொடுப்பான். முற்பிறவியில் எதை விரும்பிக்  கேட்டதோ அதனால் வரும் துன்பத்தினால் இப்பொழுது வேறொன்று கேட்கும் ஒவ்வொரு பிறவியும் உயிருக்கு அனுபவமே ஆகும்.

அம்மையாரின் விருப்பம் தெரியாமல் நாம் எதுவும் கொடுத்துவிடக் கூடாது என்று சிவனார் காரைக்காலம்மையாரிடம் கேட்கிறார். காரைக்கால் அம்மையார் சுவாமியிடம் என்ன அருமையாக கேட்கிறார் என்பதை பாருங்கள்!

"இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார் "பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்; இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி அரவா! நீ ஆடும் போதுன் அடியின் கீழ் இருக்க"  என்றார்.

அதாவது முதலில் இறவாத இன்ப அன்பு கேட்கிறார். அதாவது உலக மாயையால் நாம் வைத்திருக்கும் அன்பு பசி வரும்போது தூக்கம் வரும்போது கவலை வரும்போது இறந்துவிடும்.

எப்பொழுதும் அவனையே நினைத்து இருக்கும் இறவாத இன்ப அன்பு வேண்டும் என்று கேட்கிறார். பிறகு பிறவாமை கேட்கிறார். பிறவாமை வேண்டும் என்று கேட்டவுடன்

நம் தகுதி தெரியாமல் சிவபெருமானை தர்மசங்கட நிலைக்கு ஆளாக்கி நாம் ஏதாவது கேட்டு விடக்கூடாது என்று, பிறவி  முடித்து மோட்சம் கொடுப்பது இறைவனின் சுதந்திரம் என்று,

"மீண்டும் பிறப்பு உண்டேல்"அதாவது ஒருவேளை மீண்டும் பிறந்தால் உன்னை என்றும் மறக்காமல் இருக்க வேண்டும் என்கிறார். இன்னும் வேண்டும் என்கிறார்.

நான் மகிழ்ந்து பாடி அரவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க வேண்டும் என்கிறார். இது அம்மையப்பருக்கு அம்மையான காரைக்கால் அம்மையார் விண்ணப்பம் இதுவாகும்.

அம்மையாருக்கு அப்பாவான இறைவனார் திருவாக்கு என்ன என்பதைப் பார்க்கலாம்.

"கூடுமாறு அருள் கொடுத்து குலாவு தென்திசையில் என்றும் நீடுவாழ் பலன மூதூர் நிலவிய ஆலங்காட்டில் ஆடும் மா நடமும் நீ கண்ட ஆனந்தஞ் சேர்ந்து எப்போதும் பாடுவாய் நம்மை"என்று சுவாமி அருள் செய்கிறார்.

அதாவது திருஆலங்காட்டில் யாம் ஆடுகின்ற நடனத்தை கண்டு ஆனந்தத்தோடு எப்போதும் நம்மை பாடிக் கொண்டே இரு என்று அருள் செயகிறார்.

அங்கு நடக்கும் கூத்து பரக்கூத்து ஆகும். எப்போதும் என்பதால் இந்த பிரபஞ்சங்கள் அனைத்தும் ஒடுங்கும் வரை சுவாமி ஆடிக்கொண்டே அம்மை பாடிக் கொண்டே திருவாலங்காட்டில் வீற்றி இருக்கிறார்கள்.

அம்மையார் கேட்ட அனைத்தும் இதில் அடங்கி விட்டது. எப்படி என்றால் எப்பொழுதும் காரைக்கால் அம்மை பாட சுவாமி ஆடுவதால்,

1 இறவாத இன்ப அன்பு அடங்கிவிட்டது2 பிறவாமையும் அடங்கிவிட்டது3 மீண்டும் பிறப்பு கிடையாது 4 நான் மகிழ்ந்து பாடி அரவா  நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க வேண்டும் என்பதும் அடங்கிவிட்டது.

காரைக்கால் அம்மையார் விருப்பமும் நிறைவேறிவிட்டது. எங்குமே சிவகாமசுந்தரி பாட சுவாமி ஆடுவார். இங்குதான் காரைக்கால் அம்மையார் பாட சிவபெருமான் நடனமாடுகிறார்

இதுபோல் சிறப்பு எங்கும் இல்லை.அம்மையாரின் அன்பும் அம்மையப்பரின் கருணையும் இதுவே ஆகும். இவ்வளவு பாக்கியம் பெற்ற

எம்பிராட்டி காரைக்கால் அம்மையார் குருபூசையில் அனைவரும் கலந்து கொண்டு தவ வாழ்வு பெறுவீர்களாக! என்றும் அடியார்கள் திருவடியில் சம்பந்த சரணாலயன்...

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...