ஒரு சிலர் தியானத்தில் அமர்ந்திருப்பதைப் பார்க்கும் பொழுதே, அவர்கள் உள்ளுக்குள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பது தெரிந்து விடும். முகம் தீவிரமாக எதையோ எட்டிப்பிடித்து விட வேண்டும் என்கிற பாவனையை வெளிப்படுத்தும். கண்கள் அசைந்து கொண்டேயிருக்கும். உடல் ஒரே நிலையில் இருக்காது. தன் இருப்பை மாற்றிக் கொண்டேயிருக்கும். கடுமையான போராட்டம் நடக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்து விடும். ஆனால், இவ்வளவு விரைப்புத் தன்மையும், போராட்டமும் தேவையில்லை. பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு, தியானத்தில் அமரும் பொழுது, குருவானவர் உடலையும், மனதையும் தளர்வாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதை கேட்கலாம். அதுதான் தியானத்திற்கான சரியான நிலையாகும். இறுக்கமாக, கட்டுண்டு கிடக்கும் எந்த ஒரு இயக்கமும் சீராக நடைபெறாது.
யோகாசனம், உடற் பயிற்சிகள் எல்லாம் செய்து நன்றாக முறுக்கேறி விட்ட பிறகு, நாடி நரம்புகளை இளக்கி அதாவது நன்றாகத் தளர்த்தி விட வேண்டும் என்று சொல்வது இதற்காகத்தான். அப்பொழுதுதான் இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், உயிர் ஓட்டம் எல்லாம் சீராக நடைபெற்று, பயிற்சியின் பலன் நமக்கு முழுமையாகக் கிடைக்கும். அதைப் போலவே தியானம் செய்யும் பொழுது நம் அறிவையும் தளர்த்தி வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். பலதரப்பட்ட பற்றுகளால், உபாதைகளால், எண்ணங்களால் கட்டுண்டு கிடக்கின்ற அறிவை தளர்த்தி இயல்பான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அதன் இயக்கம் சீரான இயக்கமாக விளங்கும்.
நம் அறிவுதான் நம்மை பல்வேறு விஷயங்களில் கட்டிப் பிடித்து வைத்திருக்கிறது. எனவே அது சதா சர்வ காலமும் இறுக்கமான கடின நிலையிலேயே இருக்கிறது. நாம் எப்பொழுதும் நமது இந்த தேகத்தைதான் நாம் என்று எண்ணி வருகிறோம். அப்படிப்பட்ட எண்ணம் வலிமை அடைவதற்கு அறிவுதான் காரணமாக இருக்கிறது. நம்மை இந்த உலகாய விவகாரங்களில் பிணைத்து வைப்பது உடல் பற்றுதான். இந்த உடலை நான் என்று எண்ணுபவனுக்கு ஒரு நாளும் மனம் வசப்படாது, ஒரு நிலைப்படாது. இப்பொழுது ஒரு கேள்வி வருகிறது. தேகத்தை கவனிக்காமல் விட்டு விட்டால் துன்பங்கள் ஏற்படுமல்லவா ? உண்மைதான், உங்களை யார் தேகத்தை கவனிக்க வேண்டாம் என்று சொன்னது. உடலைப் பராமரிப்பது மிகவும் அவசியமாகும். ஆனால், அதன் மீது பற்று வைக்காதே என்றுதான் சொல்கிறார்கள்.
பற்றுதல் என்றால் விடாமல் பிடித்துக் கொள்ளுதல் என்பது பொருள். புலன்களைப் பற்றிக்கொண்டு மனதை அவற்றின் போக்கில் போக விடாதே என்று சொல்கிறார்கள். படகு போன்றது உடல். வாழ்க்கை எனும் பெருங்கடலைக் கடக்க பேருதவி செய்வது இந்த உடல்தான். எனவே அதை நன்றாகப் பராமரிக்க வேண்டும். அதில் ஓட்டை விழுந்தால் நம் பயணம் முற்றுப் பெறாமல் போய் விடும். அதற்காக படகை எப்பொழுதும் தலையில் தூக்கி வைத்துக் கொள்ள வேண்டுமா என்ன ? அதுதான் பற்று. தரைக்கு வரும் பொழுது படகை தண்ணீரில் விட்டு விட்டுதானே வீடு திரும்ப வேண்டும் ? இங்கே நிலைமையே வேறு. நாம் அனைவருமே படகைத் தலையில் சுமந்து கொண்டு திரிபவர்களாகவே இருக்கிறோம்.
இந்த வாழ்க்கை என்பதே உடலின் சௌகர்யத்திற்காக மட்டுமே என்று ஆகி விட்டது. வானத்திலிருந்து பூமி மீது விழுகின்ற நீரானது, அது விழுகின்ற இடத்தின் தன்மையை அடைகின்றது. உதாரணமாக ஆற்று நீர், கடல் நீர், சாக்கடை நீர், செம்மண்ணில் விழுவது சிகப்பாக இருக்கிறது, வண்டல் மண்ணில் விழுவது அது ஒரு நிறத்தில் இருக்கிறது. கரிசல் மண்ணில் விழும் நீர் அது ஒரு தன்மையை அடைகிறது. இது போல இடத்தின் தன்மையை நீர் பெற்றுக் கொள்கிறது. ஆனால், சூரியனின் கதிர் பட்டு ஆவியாகும் பொழுது அது இந்தத் தன்மைகள் அனைத்தையும் விட்டு விட்டு தூய நன்னீராக மேலே போய் விடுகிறது. அதற்குப் பிறகு தண்ணீருக்கு எந்த வித தன்மைகளோ, பேதங்களோ கிடையாது.
அது போலவே நாமும். பரமாத்மாவிடம் இருந்து வருகிறோம். ஜீவிப்பதற்காக இந்த உடலைப் பெற்று வந்தோம். உதவி வேண்டும், துணை வேண்டும் என்பதற்காக உறவுகளைப் பெற்றிருக்கிறோம். போகும் போது அனைத்தையும் விட்டு விட்டு தூய மனதுடன் போக வேண்டும்தானே ? ஆனால் அவ்வாறு போக முடிகிறதா ? முடியவில்லையே ? சொந்த இடம், சொந்த ஊர், சொந்த வீடு, மனைவி, மக்கள், உறவுகள் என்று பட்டியல் போய்க் கொண்டேயிருக்கிறது. இவற்றை எல்லாம் விட்டு விட்டு எப்படிப் போவது ? இதுதான் பற்று. அந்தந்த நிலையில் நம் கடமையை பற்றற்ற நிலையில் சிறப்பாக செய்ய வேண்டும். வாழ்க்கை எனும் நாடகம் முடியும் பொழுது வேசத்தை கலைத்து விட வேண்டும். பல்வேறு பற்றுகள், எண்ணங்கள், உபாதிகளில் சிக்குண்டு கிடக்கிற மனமானது இவற்றில் கட்டுண்டு, இறுகிக் கிடக்கிறது. அதைத் தளர்த்தி, இளகிய மனமாக ஆக்க வேண்டும் என்பது கோட்பாடு.
அதன் தளைகளை தளர்த்தி விட வேண்டும். தளைதல் என்றால் பிணைத்தல் என்று பொருள். அந்தக் கட்டுகளைத் தளைகளை அறுத்து அறிவைத் தளர்த்தி விடும் பொழுது, இந்த ஊரும், பேரும், உற்றார், உறவினரும், இனமும் எல்லாம் தனக்குரியது என்று எண்ணிக் கொண்டிருந்த அறிவும் இளகி விடுகிறது. அதற்குப் பிறகு அதைப் பற்றிப் பிடித்துள்ள பொருளற்ற பல்வேறு எண்ணங்களை எளிதில் நீக்கி விடலாம். பூமியில் விழுந்து அசுத்தமான நீர் மீண்டும் தூய நீர் ஆவது போல, அறிவும் இளகி தூய்மை பெறும் பொழுது அது ஆனந்த சொரூபமாக வடிவெடுக்கிறது. அழுக்கு படிந்த அறிவு துன்பத்தை ஏற்படுத்திக் கொள்கிறது. அழுக்குகள் நீங்கிய தூய அறிவு ஆனந்த சொரூபமாக ஆகி விடுகிறது. ஆக அறிவைத் தூய அறிவாக ஆக்குவதே ஆத்ம சாதனமேயன்றி, வேறில்லை. அறிவு பேரறிவாகத், தூய அறிவாக ஆவதே ஆனந்தம். அறிவு தூய்மை அடைந்து அடைந்து ஆனந்த சொரூபமாக மாறி மாறி முடிவில் பேரறிவு நிலையை எட்டும். அதுவே இணைத்தல். அதுவே யோகம். அதுவே வீடுபேறு.
No comments:
Post a Comment