மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில், தவசிமடை, திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு

மூலவர்: மகாலிங்கேஸ்வரர்
அம்மன்: மரகதவல்லி, மாணிக்கவல்லி 
தலமரம்: 
தீர்த்தம்: 
பழமை: யுகங்கள் தாண்டி நிற்கும் தலம்

பெருமை:
1. மூலவர் வசிட்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்
2. ஆரிட லிங்கம் உள்ள தலம்
3. பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமம் இருந்த தலம்
4. மேலும் கீழுமாக இரண்டு தனித்தனி தீபங்களாக இறைவன் காட்சிதரும் தலம்
5. ராமர், சீதை, லக்ஷ்மணன் மற்றும் ஆஞ்சநேயர் வந்த வரலாறு கொண்ட தலம்
 
பயண வழிகாட்டல்:
திண்டுக்கல்லிலிருந்து நத்தம் செல்லும் மார்கத்திலுள்ள விராலிப்பட்டி என்னும் ஊரிலிருந்து சுமார் 2.5 கிலோமீட்டர் தொலைவில் தவசிமடை உள்ளது. 

தலவரலாறு: மூலவர் வசிட்ட  மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அவரது மகன் பரத்வாஜ மகரிஷியால் பூஜிக்கப்பட்டவர். இத்தலத்திலேயே பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இராவணன் சீதையை கவர்த்தபிறகு, ஸ்ரீராமர் தன் தம்பி லக்ஷ்மணனுடன் சீதையைத் தேடிய வண்ணம் இத்தலத்திற்கு வந்து சேர்ந்தார். ராம லக்ஷ்மணரை அன்புடன் வரவேற்று உபசரித்த மகரிஷி, அவர்களை தன் ஆசிரமத்தில் அமுதுண்டு செல்லுமாறு கூறினார். சீதையைக் காணாத வருத்தத்திலிருந்த ஸ்ரீராமர், தான் சீதையை தேடி மீட்டபிறகு, மீண்டும் இவ்விடம் வருவதாகவும், அப்போது உணவருந்தி செல்வதாகவும் கூறி மகரிஷியிடம் விடைபெற்று சென்றார். பிறகு, ராவணனுடன் யுத்தம் செய்து, சீதையை சிறை மீட்டு, ராவணனின் தம்பி விபீஷணனின் வேண்டுகோளுக்கிணங்கி, ராவணனின் புஷ்பக விமானத்தில் அயோத்யா நோக்கி பயணமானார். விமானம் பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமத்தின் மேல் பறந்து செல்கையில், ஸ்ரீராமருக்கு தான் மகரிஷிக்கு தந்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது. உடனே, விமானத்தை இவ்விடத்தில் தரை இருக்குமாறு கூறினார். ஸ்ரீராமர், சீதை, லக்ஷ்மணன் மற்றும் ஆஞ்சநேயரை கண்டு ஆனந்தம் அடைந்த மகரிஷி, அவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்றார். தன்னுடைய ஆசிரமவாசிகளை அழைத்து போஜனத்திற்கு ஏற்ப்பாடு செய்யுமாறு கூறினார். பரத்வாஜர் ஆசிரமத்தில் சிறிது நேரம் தங்கி செல்ல வேண்டி இருந்ததால், ஸ்ரீராமர் ஆஞ்சநேயரை அழைத்து, அவரை அயோத்யாவிற்கு விரைந்து சென்று தன்னுடைய வருகையை தெரிவிக்குமாறு கூறினார். ஸ்ரீராமரின் அடிபணிந்த ஆஞ்சநேயர் உடனே அயோத்யாவிற்கு பயணமானார். ஸ்ரீராமர், சீதை மற்றும் லட்சுமணனுக்கு வாழை  இலையில் உணவு பரிமாறினார் பரத்வாஜ மகரிஷி. ஸ்ரீராமர் மேல் கொண்ட அதீத அன்பினால் அவருக்கு பரிமாறின இலையை இரண்டாக கிழித்து தானும் அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினர். இத்தகைய சிறப்பு மிக்க நிகழ்வு நடந்த இடமே இத்திருத்தலம். இக்காட்சியை மனக்கண்ணில் காணும் எவருக்கும் மெய் சிலிர்க்கத்தான் செய்யும்.

பரத்வாஜ மகரிஷியின் ஜீவசமாதி: பல வருடங்களுக்கு பிறகு, பரத்வாஜ மகரிஷி தன்னுடைய ஆசிரமம் இருந்த இந்த தலத்திலேயே ஜீவசமாதி அடைந்தார். பரத்வாஜ மகரிஷி 16 அடி உயரம் கொண்டவர். பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் தற்போது வாழும் நம்மை விட மிக உயரமானவர்கள் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. 16 அடி நீளமான பரத்வாஜ மகரிஷியின் ஜீவசமாதியை இத்தலத்தில் நாம் இன்றும் காணலாம். ஈசனை தரிசிக்கவரும் பக்தர்களின் காலடி தன் மேல் பட வேண்டும் என விரும்பிய மகரிஷி ஈசன் சன்னதிக்கு முன் சயன நிலையில் ஜீவசமாதியில் உள்ளார். தன்னுடைய ஜீவசமாதியின் மேல் கட்டிடம் எதுவும் எழுப்பக்கூடாது என்ற மகரிஷியின் கட்டளைக்கேற்ப இப்போதும் அவரின் சமாதி வெறும் மண் தரையாகவே காணப்படுகிறது. தெற்கில் தலை வைத்து வடக்கில் கால் நீட்டிய படி ஜீவசமாதியில் உள்ள பரத்வாஜ மகரிஷியை தரிசனம் செய்ய கண் கோடி வேண்டும். மகரிஷியின் உயரத்தை உணர்த்தும் வண்ணம் அவரது சிரம் மற்றும் திருப்பாதம் அருகில் லிங்க பிரதிஷ்டைக் காணப்படுகின்றன.

தீபரூபத்தில் அருளும் ஈசன்: மூலவர் கருவறையில் ஏற்றப்படும் கற்பூர தீபம் மேலும் கீழுமாக இரண்டு தனித்தனி சுடர்களாக எரிவதைக் காணலாம்.  இரண்டு சுடர்களுக்கும் இடையே போதிய இடைவெளி தென்படுவது குறிப்பிடத்தக்கது. இச்சுடர்கள் ஆவுடை மற்றும் அதன் மேல் உள்ள பாணத்தை குறிப்பதாக கூறப்படுகிறது. ஈசனின் இந்த திருக்கோலத்தை இத்தலத்தை தவிர வேறெங்கும் காண முடியாது.

ஒரே கருவறையில் இரு அம்மன்கள்: மூலவரின் வலதுபக்கத்தில் அம்மன் சன்னதி உள்ளது. கிழக்கு நோக்கி அமைந்த சன்னதியில், மரகதவல்லியும், மாணிக்கவல்லியும் அருகருகே நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்கள். இத்தகைய அமைப்பை இக்கோயிலை தவிர வேறெங்கும் காண முடியாது. கருவறைக்கு வெளியே அர்த்த மண்டபம் உள்ளது. அர்த்த மண்டபத்திற்கு வெளியே காணப்படும் மகா மண்டபம் இக்கோயிலில் இல்லை. இந்த இடத்திலிருந்து பார்த்தால் அம்மன்களின் திருவுருவைக் காண இயலாது. அர்த்த மண்டபத்திற்குள் சென்று கருவறைக்குள் எட்டி பார்த்தால் மட்டுமே தரிசனம் செய்யலாம். முற்காலத்தில் பெண்கள் பிற ஆண்கள் கண்களில் படாமல் வாழ்ந்த பண்பாட்டிற்கு ஏற்ப அம்மன்களின் திருவுருவங்களும் அமைய பெற்றிருப்பது வியப்பை அளிக்கிறது.

இத்தலத்தில் அருள்பாலிக்கும் அம்மன்கள் இருவரும் இச்சா சக்தி மற்றும் க்ரியா சக்தி சொரூபங்கள் ஆவர். இவர்களை வணங்கினால் ஞான சக்தியின் அருள் தானாகவே நமக்கு கிட்டும் என்பது சான்றோர்களின் வாக்கு.

சிறுமலை மகத்துவம்: தவசிமடைக்கு அருகில் சிறுமலை உள்ளது. இது ஆஞ்சநேயர் எடுத்துவந்த சஞ்சீவி மலையின் ஒரு பகுதி என கூறப்படுகிறது. மூலிகைகள் நிறைந்த இந்த மலைக்கு செல்லும் பாதை கரடுமுரடானது. முட்செடிகள் நிறைந்தது. போகும் வழியில் முட்செடிகளால் காயம் அடைந்தாலும், சிறுமலை எல்லையைத் தொட்டவுடன் அந்த நிமிடமே காயங்கள் முற்றிலும் குணமாகும் அதிசயம் இன்றுவரை நடக்கிறது என கூறப்படுகிறது. மான் போன்ற வனவிலங்குகள் சிறுமலையில் வாழ்வதாகவும், அவற்றிக்கு அடிபட்டாலும், சிறுமலை எல்லையை தொட்டவுடன் காயம் தானாகவே ஆறிவிடும் என்றும் கூறப்படுகிறது.

தலப்பெருமைகள்:
1. மூலவர் 'ஆரிட லிங்கம்'. இத்தகைய லிங்கத்தை ஒரு சில தலங்களில் மட்டுமே தரிசனம் செய்ய இயலும். 'ஆரிட லிங்கம்' என்பது மகரிஷியால் நிறுவப்பட்ட லிங்கம்.
2. மூலவருக்கு துவார பாலகர்கள் கிடையாது. துவார பாலகர்களுக்கு பதிலாக ஒருபுறம் விநாயகரும், மறுபுறம் முருகரும் அருள்பாலிக்கின்றனர்.
3. மூலவருக்கு நேர் எதிரில் கால பைரவர் மூலவரை நோக்கிய வண்ணம் அருள்பாலிக்கிறார். இவர் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். பொதுவாக ஈசான மூலையில் தெற்கு நோக்கி காட்சியளிக்கும் பைரவர் இக்கோயிலில் மூலவருக்கு நேர் எதிரில் காணப்படுவது தனி சிறப்பு.
4. மூலவர் திருவண்ணாமலையில் அருள்புரியும் அண்ணாமலையாரை விடவும் முதன்மையானவர். சித்தர்களும், ரிஷிகளும், தவசிகளும், ஞானிகளும், யோகிகளும், தேவர்களும் இத்தலத்திற்கு வந்து முதலில் மகாலிங்கேஸ்வரரை வணங்கிய பிறகே அண்ணாமலையாரை கிரிவலம் வந்து வணங்குகிறார்கள் என்பது ஐதீகம்.
5. பரத்வாஜ மகரிஷியை தவிர சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் ஜீவசமாதி அடைந்த மூன்று  சித்தர்களுக்கு தனித்தனி சன்னதிகள் இங்கு உள்ளன.
6. திருவண்ணாமலையை போலவே எண்ணற்ற சித்தர்களும், யோகிகளும் இங்கு தவநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
7. வேறெங்கும் இல்லாத வண்ணம் இக்கோயில் வளாகத்தில் நிறைய புளியமரங்கள் காணப்படுகின்றன.
8. பெரிய பாம்பு புற்று உள்ளது.
9. இத்தலம் மகம் நட்சத்திரத்துக்கு உரியது. எனவே மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை இத்தலத்திற்கு வந்து இறைவனை தரிசிப்பது மிகவும் நல்லது என கூறப்படுகிறது.
10. மற்ற சிவாலயங்களை போல் அல்லாது மிக எளிமையாக காணப்படும் இத்திருத்தலம், நம்மை, அக்காலத்தில் இருந்த பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமத்திற்கு அழைத்து செல்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...