உண்மையான ஞானம் பெற வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார் புத்தர். பல துறவிகளிடம் சீடராகச் சேர்ந்தார். பல இடங்களில் அலைந்தார். ஆண்டுகள் சென்றனவே அன்றி அவருக்கு ஞானம் கிடைக்கவில்லை. சலிப்பு அடைந்த அவர் ஞானத்தை தேடும் முயற்சியை விட்டுவிட்டு, நாடு திரும்பி விடலாமா என்று நினைத்தார்.
அவர் சென்று கொண்டிருந்த வழியில் குளம் ஒன்று இருந்தது. அதன் கரையில் இருந்த அணில் ஒன்று, தன் வாலைக் குளத்தின் தண்ணீரில் தோய்ப்பதும், பிறகு அந்த வாலை இழுத்து அதில் ஒட்டிக் கொண்டிருக்கும் தண்ணீரைத் தரையில் உதிர்ப்பதுமாக செய்து கொண்டிருந்தது.
இதைப் பார்த்து வியப்பு அடைந்த புத்தர், “”அணிலே! என்ன செய்கிறாய்? உன் வாலைக் குளத்திற்குள் விடுகிறாய். வாலில் ஒட்டி இருக்கும் தண்ணீரை வாலை ஆட்டி தரையில் வீசுகிறாய். நீ செய்வது எனக்கு விளங்கவில்லையே!” என்றார்.
அதற்கு அணில், “”நான் இந்தக் குளத்தை வற்ற வைக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். அதனால்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன்!” என்றது.சிரித்த அவர், “”அணிலே! நீ அல்ல, உன்னைப் போன்ற அணில்கள் கூட்டமே கோடி தடவை முயன்றாலும், இந்தக் குளத்தை வற்றச் செய்ய முடியுமா?” என்று கேட்டார்.””முடியுமா, முடியாதா என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் விடாமுயற்சி என்றேனும் ஒருநாள் எனக்கு வெற்றியைத் தேடித் தரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தக் குளம் வற்றும் வரை நான் இந்த முயற்சியை விட மாட்டேன்!” என்றது.
இதைக் கேட்ட அவர், “ஞானம் பெற இன்னும் முயற்சி செய்வோம். ஞானம் பெறும் வரை ஓய்வது இல்லை’ என்ற முடிவுக்கு வந்தார்.
No comments:
Post a Comment