ஈசனின் உடல்பாகங்கள் ஐந்தாக வர்ணிக்கப்படுகின்றன :
*கேதார்நாத்* ~ ஈசனின் உடல்;
*துங்கநாத்* ~ ஈசனின் புஜம்;
*ருத்ரநாத்* ~ ஈசனின் முகம்;
*மத்மஹேஷ்வர்* ~ ஈசனின் தொப்புள்;
*கபிலேஷ்வர்* ~ ஈசனின் தலைமுடி.
*கேதார்நாத்*
கேதார்நாத் கோயில், பஞ்ச கேதார தலங்களில் முதலாவதாகும்.
கேதார்நாத் கோயில் இந்தியாவின் 12 ஜோதிர்லிங்க சிவத்தலங்க தலங்களில் ஒன்றாகும்.
இது உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் மாவட்டத்தில்., கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளது.
இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் மாதம் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும்.
குளிர் காலங்களில் கோயிலில் உள்ள விக்கிரகங்கள் *குப்தகாசியின் உகிமத் மடத்திற்கு* கொண்டுவரப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன.
இக்கோயிலில் சிவபெருமான் கேதார்நாத் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
இக்கோயிலை நேரடியாக சாலை வழியாக அணுக முடியாது.
கௌரிகுண்ட் என்னுமிடத்திலிருந்து 14 கி.மீ. தொலைவு மலை ஏறியே இக்கோயிலுக்கு செல்ல முடியும்.
இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் ஸ்தலங்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.
இது திருநாவுக்கரசரால் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும்.
இங்கு பாண்டவர்கள் சிவபெருமானை நோக்கித் தவமிருந்ததாகவும், அவர்களே இக்கோயிலை கட்டியதாகவும் கருதப்படுகிறது.
இக்கோயில் ஆதி சங்கரரின் வருகைக்குப் பிறகு புனரமைக்கப்பட்டது.
வடக்கு இமயமலைத் தொடரில் அமைந்துள்ள நான்கு சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
*துங்கநாத்*
பஞ்சகேதார் கோயில்களில்., மிக உயரமான இடத்தில் உள்ள சிவன் கோயில் இது.
ஈசனின் புஜமாக (தோள்) வர்ணிக்கப்படுகிறது.
கடல்மட்டத்திலிருந்து 3680 மீட்டர் உயரத்தில் உள்ளது.
இங்கு சிவனின் திருக்கரத்தை தரிசிக்கிறோம்.
உத்தர்காண்ட் மாநிலத்தின் ருத்ர பிரயாகையை ஒட்டி துங்கநாத் மலைத்தொடரில் இந்தக் கோயிலை தரிசிக்கலாம்.
துங்கநாத் என்றால் மலைகளின் உச்சிகளுக்கெல்லாம் கடவுள் என பெயர்.
மந்தாகினி-அலக்நந்தா நதிகளுக்கு இடையேயான பள்ளத்தாக்கில், சந்திர சிலா என்ற சிகரத்துக்கு கீழே அமைந்துள்ளது.
ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்.
பஞ்ச கேதார்களில் இதற்கு இரண்டாவது இடம்.
இதனைக் கட்டியது அர்ஜுனன் எனவும் ஒரு தகவல் உள்ளது.
இந்து புராணத்தின்படி சிவன்., பார்வதி என இருவருமே இமயத்தில் வசிப்பவர்கள்.
சிவன்., கைலாயம்; பார்வதி மலைகளின் புதல்வி.!
குருக்ஷேத்திர யுத்தத்தில் தங்களுடைய சகோதரர்களையே கொன்றுவிட்டோமே என பஞ்ச பாண்டவர்கள் வருந்தியபோது.,
வியாசர்தான் அவர்களிடம் "சிவனின் உடற் பகுதிகளாகக் கருதப்படும் இடங்களில் அவருக்குக் கோயில் கட்டுங்கள்.
அவர் உங்கள் பாவங்களை மன்னித்து காப்பாற்றுவார்" என கூறியதாகவும்., அதனை ஏற்றுதான் பஞ்ச பாண்டவர்களும் ஆளுக்கு ஒரு ஆலயமாக கட்டினர் எனவும் இந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அருகில் இருக்கும் சந்திர சிலா குன்றில் ராமன் தவம் செய்ததாக கூறப்படுகிறது.
இதேபோல் ராவணனும் இங்கு தவம் செய்திருக்கிறானாம்.
வடஇந்திய பாணியில் அமைந்துள்ள இந்தக் கோயிலின் கர்ப்ப கிரகத்தில் ஒரே சமயத்தில் 10 பேர் மட்டுமே நிற்க இயலும்.
இங்குள்ள சுயம்புலிங்கம் ஒரு அடி உயரம் கொண்டது.
கொஞ்சம் சாய்ந்திருக்கும்.
இந்தக் கோயிலுக்கு 4 கி.மீ. தூரத்திலேயே., ஒரு வரவேற்பு வளைவு உள்ளது.
இங்கு ஒரு உண்டியலும் வைக்கப்பட்டுள்ளது.
அதன் அருகில் "தொடர்ந்து மேலே சென்று., தரிசிக்க இயலாதவர்கள் இங்கேயே காணிக்கையை போடலாம்" என்று ஓர் அறிவிப்பு தெரிவிக்கிறது.!
கோயிலின் வடிவமைப்பு குப்த காசி., மத்ய மகேஸ்வரர்., கேதார்நாத் பாணியிலேயே அமைந்துள்ளது.
உச்சியில்., சுற்றி நான்கு புறமும் ஒரு பலகை மையமாக பொருத்தப்பட்டிருக்கிறது.
இதில் 16 வளைவுகள்., இமாலய அழகை ரசிக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன.!
வாசலில் நந்தி., சூலம் உள்ளன.
கோயிலினுள் கணபதி., வியாசர்., காலபைரவர் ஆகியோரும் உள்ளனர்.
பஞ்சபாண்டவர் சிலைகளும் சிறிய அளவில் உண்டு.
பார்வதிக்கு அருகிலேயே தனிச் சந்நதி.
கோயிலுக்கு வெளியே சற்று தள்ளிச் சென்றால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியை காணலாம்.
இதன் அருகில் நந்தாதேவிக்கு கோயில் உள்ளது.
ஆதிசங்கரர் சிலையையும் தரிசிக்கலாம்.
ஆதி சங்கரர் 8ஆம் நூற்றாண்டில் இங்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது.
மற்ற கேதார் கோயில்களில்., தென்னிந்திய அர்ச்சகர்கள்தான் காலம் காலமாக இறைப்பணி செய்து வருகிறார்கள்.
ஆனால்., துங்கநாத் கோயிலில் மட்டும் மாகு என்ற கிராமத்தைச் சேர்ந்த பிராமணர்கள் அப்பணியை மேற்கொள்கிறார்கள்.
குளிர்காலம் வந்தால் இங்குள்ள உற்சவரும்., அர்ச்சகரும் 18 கி.மீ. தூரத்தில் உள்ள *முக்திநாத்துக்கு* வந்து விடுவர்.
கோயிலின் மேற்பகுதிக்குச் சென்றால் நந்தாதேவி., நீலகாந்த்., கேதார்நாத் உட்பட பல இமயமலைப் பகுதிகளைப் பார்க்கலாம்.
*ருத்ரநாத் கைலாஷ்*
உத்தரகாண்ட் மாநிலத்தில் கார்வால் ஸ்ரீமாலயன் மலைத்தொடரில் ருத்ரநாத் அமைந்துள்ளது.
இதன் உயரம் 2286 மீட்டர். உயர்ந்த மலைப்பகுதிகளில் காணப்படும் குட்டை மற்றும் வித்தியாசமான அமைப்புகளுக்கு இடையே அடர்ந்த காட்டிற்குள் இந்த கோயில் அமைந்துள்ளது.
சிவனின் முகமாக இந்தத் தலம் பாவிக்கப்படுகிறது.
இங்கு சிவன் நீலகாந்த் மகாதேவ் என அழைக்கப்படுகிறார்.
குளிர்காலத்தில் சிவன் கீழே இறங்கி *கோபேஸ்வரருக்கு* வந்துவிடுவார்.
இங்கிருந்து ஸ்வாமி ருத்ரநாத்துக்குத் திரும்புவதை டோலி யாத்திரை என சிறப்பாக கொண்டாடப்படும்.
இது ஸ்ரவண (ஆடி) மாத பௌர்ணமியன்று நடக்கும்.
அப்போது சிறப்பு கண்காட்சிகள் நடக்கும்.
ஏகப்பட்ட பக்தர்கள் கூடுவர்.
முதலில் உள்ளூர் வனதேவதைக்கு வழிபாடு நடத்தி., பிறகு ருத்ரநாத்தை பூஜிப்பர்.
வனதேவதை இந்த பகுதி மக்களை கடும்பனி மற்றும் துஷ்ட மிருகம் மற்றும் துஷ்ட தேவதைகளிடமிருந்து காப்பதாக நம்பிக்கை.
இதன் அருகில் ருத்ர கங்கை ஓடுகிறது.
இங்கு கயாவுக்கு சமமாக., மக்கள் பிண்டம் போடுகின்றனர்.
பஞ்ச கேதார் பயணங்களிலேயே இதுதான் மிகவும் கடினமானது.
டெராடூன் வரை விமானத்தில் சென்று அங்கிருந்து ருத்ரநாத்துக்கு பயணிக்கலாம். அல்லது ரயிலில் ரிஷிகேஷ் வரை சென்று அங்கிருந்து ருத்ரநாத்துக்குச் செல்லலாம்.
ருத்ரநாத்., டெராடூனிலிருந்து 258 கி.மீ. ரிஷிகேசத்திலிருந்து 240 கி.மீ. கோபேஸ்வரர் என்ற இடம்வரை சென்று அங்கிருந்து 20 கி.மீ. ஏறியும் செல்லலாம்.
ஆனால்., தகுந்த வழிகாட்டிகளோடு செல்ல வேண்டும்.
ருத்ர பிரயாகையில் ஒரு ருத்ரநாத் கோயில் உள்ளது. அது வேறு., இது வேறு.
*மத்மஹேஷ்வர் (உகிமத்)*
உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ர பிரயாகை ஜில்லாவில்., ருத்ர பிரயாகையிலிருந்து 41வது கிலோ மீட்டரில் 1311 மீட்டர் உயரத்தில் உகிமத் கோயில் அமைந்துள்ளது.
குளிர்காலத்தில் கேதார்நாத் மற்றும் மத்திய மகேஸ்வர் கோயில்களை 6 மாதங்கள் இங்கே வைத்து பூஜை செய்வர்.!
மத்திய மகேஸ்வர்., துங்கநாத்., இன்திரியோ ஏரி ஆகிய இடங்களுக்குச் செல்ல உகிமத் மத்திய இடம்.
இந்த இடத்தில்தான் கிருஷ்ணனின் பேரன் அனிருத்துக்கும்., அவர் மனைவி உஷாவுக்கும் திருமணம் நடந்தது.
வனதர் என்பவரின் மகள்தான் உஷா.
மன்னர் மாந்தாதா., ராமனின் பரம்பரையில் வந்தவர்.
இங்குள்ள சிவனின் பெயர் ஓம்காரேஷ்வரர்.
இந்த இடத்தை உஷாமத் எனவும் அழைப்பது உண்டு.
இது சிவனின் தொப்புள் மற்றும் வயிற்றைக் குறிக்கும் தலமாகும்.
*கபிலேஷ்வர் (கல்பேஷ்வர்)*
உத்தரகாண்ட் மாநிலத்தின் கார்க்வால் பகுதியில் உர்காம் பள்ளத்தாக்கில் கபிலேஷ்வர் அமைந்துள்ளது.
அழகு சொட்டும் இயற்கை பிரதேசம் இது.
பஞ்சகேதார் தலங்களில் ஐந்தாவதாகும்.
இந்த கேதார் தலத்திற்கு மற்றொரு சிறப்பும் உண்டு.
இங்கு வருடம் முழுவதும் சென்று வரலாம்.
குகைப் பாதை வழியாக இந்த சிறு கோயிலை அடைய வேண்டும்.
சிவனின் ஜடாமுடியாக பாவிக்கப்படுகிற கோயில் இது. பீமன் கட்டியது.
இதனை 12 கி.மீ. மலை ஏறியும் வரலாம்.
இந்த இடத்திற்கும் பஞ்சபாண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டு.
ஒரு சமயத்தில் இந்த இடத்தில் பஞ்ச பாண்டவர்கள் சாப்பிட்டு விட்டு., பாத்திரங்களைக் கழுவிவைத்து திரௌபதி ஓய்வு எடுக்க முனைந்தபோது, துர்வாசர் தன் சீடர்களுடன் வந்து, தாம் நீராடச் செல்வதாகவும்., வரும்போது தங்களுக்கு உணவு அளிக்குமாறும் கோரிக்கை விடுத்துவிட்டுச் சென்றார்.
அப்போதைய சூழ்நிலையில் சிறிதும் அன்னம் இல்லாததை அவரிடம் சொன்னால்., அவர் கோபத்தில் சபித்து விடுவாரே என பயந்து., திரளெபதி., கிருஷ்ணனை வேண்டிக்கொண்டாள்.
அப்போது அங்கே வந்த கிருஷ்ணன்., திரௌபதியிடம்., கழுவிய அக்ஷய பாத்திரத்தை எடுத்துவரச் சொன்னார்.
அதில் ஒரு பருக்கை ஒட்டியிருந்ததை எடுத்துத் தான் உண்டான்.
அதேசமயம் நீராடி முடித்து நதிக்கரையேறிய துர்வாசருக்கும் அவருடைய சீடர்களுக்கும் பசி நீங்கி., வயிறு நிறைந்துவிட்டது.!
இந்த ஐந்து கேதார்களைத் தவிர மேலும் இரண்டு கைலாஷ் தலங்கள் உள்ளன.
அவற்றையும் தரிசிப்போம்:
*மணி மகேஷ் கைலாஷ்*
இதனை சம்பா கைலாஷ் எனவும் அழைக்கின்றனர்.
மணி மகேஷ் ஏரியின் அருகில்., இமாசலப் பிரதேசத்தில் சம்பா ஜில்லாவில் பார்மோர் உபபகுதியில் இது அமைந்துள்ளது.
பார்மோரிலிருந்து 26 கி.மீ. தூரத்தில் இந்த சிகரம் உள்ளது.
மணி மகேஷ் ஏரி 5653 மீட்டர் உயரத்தில் உள்ளது.
இங்கு காடி மலை ஜாதியினர் ஏராளமாய் வசிக்கின்றனர்.
அவர்களின் குலதெய்வம் மணிமகேஷ் பகவான்.
பாதூன் மாதத்தில் முழு பௌர்ணமியின் போது 8வது நாள் இங்கு விழா., கண்காட்சிகள் நடக்கின்றன.
இதுவரை இந்தச் சிகரத்தை யாரும் எட்டியதில்லை.
1968ல் இந்திய-ஜப்பானிய கூட்டு முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் வெற்றிபெற இயலவில்லை.
*ஓம் பர்வத் (குட்டி கைலாஷ்)*
இமயமலையில்., பனியினாலேயே ‘ஓம்’ என எழுதப்பட்டிருப்பதை காண வேண்டுமா.?
அதற்கு நீங்கள் குட்டி கைலாஷ் செல்ல வேண்டும்.
இதன் இன்னொரு பெயர்தான் *ஓம்பர்வத்.*
அசப்பில் பெரிய கைலாஷ் போன்றே காட்சியளிக்கும்.
நேபாளத்தின் மேற்கு தார்சுலா மாவட்டத்திலும், இந்தியாவின் உத்தரகாண்ட் பித்தோராக் ஜில்லாவிலும் இது பரவியுள்ளது.
இதன் அருகில் பார்வதி ஏரி மற்றும் ஜோக் லிங்காங் ஏரிகள் உள்ளன.
இவற்றில் ஜோக் லிங்காங் ஏரியை பெரிய கைலாஷ் மானஸரோவர் ஏரியுடன் இங்குள்ள இந்துக்கள் ஒப்பிட்டு போற்றி வருகிறார்கள்.
கைலாஷ்-மானஸரோவர் யாத்திரை மேற்கொள்ளுபவர்கள்., இதனை லிபுலெக் என்ற இடத்திலிருந்து காணலாம்.
உத்தரகாண்ட் மாநிலம் பிகோராகார்க் என்ற இடத்திலிருந்து பார்த்தால் ‘ஓம்’ மிக நன்றாக தெரியும்.
இந்த குட்டி கைலாஷை பொருத்தவரை ‘ஓம்’ பகுதி இந்தியாவை பார்த்தும், முதுகு பகுதி நேபாளத்தை பார்த்தும் உள்ளது.
இந்த ஓம்பர்வதத்துக்கு எதிராக ஒரு மலை உள்ளது.
அதனை பார்வதி மலை என அழைக்கின்றனர்.
No comments:
Post a Comment