நெற்றியில் திருநீறு தரித்துக் கொள்வது உயர்ந்த தத்துவத்தை விளக்குகிறது. நாடாண்ட மன்னனும், மாசறக் கற்றவரும் கடைசியில் சாம்பலாகத் தான் போகப் போகிறோம். இந்த வாழ்க்கை மாயமானது என்பதை விபூதி உணர்த்துகிறது. பிறக்கும்போதும் மண்ணிலே பிறந்தோம். சாகும்போது மண்ணிலே தான் சாகப் போகிறோம். மண்ணிலே பிறந்த மரம் இறுதியில் மண்ணிலேயே மட்கி மண்ணோடு மண்ணாகத் தான் போகிறது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப் போகிற தத்துவம் அதுதான். இதை நினைவுபடுத்திக் கொள்ளவே, நெற்றியில் விபூதி அணிகிறோம்.
மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.
விபூதி என்றதும் எல்லோருக்கும் சிவபெருமானைத்தான் நினைவுக்கு வரும். சிவனை வழிபடுவோர் அதை தங்களின் அங்கத்தில் அடையாளமாக தரித்துக் கொள்வார்.
விபூதியை பல பெயர்களில் மொழிவார்கள். இரட்சை, சாரம், விபூதி, பசுமம், பசிதம் என்று பல பெயர். அருகம்புல்லை உட்கொள்ளும் பசு மாட்டின் சாணத்தை சிறு உருண்டைகளாக்கி, வெயிலில் காய வைத்து, அதனை உமியினால் மூடி புடமிட்டு எடுத்தால் உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். வெண்மையான நிறமுடைய திருநீறே சிறப்பானதாக பெரியோர்களால் கருதப்படுகிறது. இதுவே உத்தமமான திருநீர் என்கிறார் அகத்தியர்.
விபூதியை இரண்டு வகையாக அணிந்து கொள்ளலாம்.
ஒன்று இடைவெளி இல்லாமல் நெற்றியிலும் அங்கத்திலும் பூசிக் கொள்ளும் முறை. இதை உள் தூளனம் என்கிறார். மூன்று விரல்களால், ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகியவற்றால் மூன்று கோடுகளாக விபூதியை ஓன்றிற்கு ஒன்று இணையாக தரித்துக் கொள்ளும் முறையை திரிபுண்டரிகம் என்பர்.
சித்த மார்கத்தில், திருநீரை, செபம், மந்திரித்தல், யந்திரங்கள், மருத்துவம் என பல்வேறு செயல்களில் பயன்படுத்திய விதத்தை பற்றி அகத்தியப் பெருமான் பல இடங்களில் விளக்குகிறார். விபூதியை யாரிடம் இருந்து எப்படி பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது பற்றி அகத்தியர் தனது "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் அருளியிருக்கிறார். அந்த செய்யுளை கீழே தருகிறேன்.
ஆமப்பா சூட்சம் வெகு சூட்சமான
அருமையுள்ள மந்திரத்தைத் தியானம் பண்ணி
ஓமப்பா நல்லோர்க ளிடமாய்மைந்தா
உத்தமனே விபூதியுட நெதுவானாலும்
தாமப்பா தனதாக வாங்கும்போது
சங்கையுட நவர்கள் செய்யுந் தவமெல்லாந்தான்
வாமப்பால் பூரணத்தின் மகிமையாலே
வந்துவிடும் மனதறிவால் மனதைப்பாரே.
மனதாக நல்லோர்க ளிடத்திலிந்த
மந்திரத்தைத் தானினைத்துப் பூரித்தாக்கால்
மனதாக அவர்கள்செய்யுந் தவப்பலந்தான்
மந்திரங்கள் தன்னுடனே வந்துசேரும்
மனதாக மூடர்வெகு வஞ்சர்கிட்ட
மணிமந்திர பூதியுட நெதுவானாலும்
மனதாக அவர்களிடம் வாங்கும்போது
மக்களே அவர்கள்குணம் வருகும்பாரே.
விபூதியை ஒருவர் மற்றவருக்கு கொடுக்கும் போது கொடுக்கிறவர் செய்த தவப் பயன் மற்றும் குண நலன்கள் வாங்குவோருக்கு போய்ச் சேர்ந்திடும். எனவே இதை உணர்ந்து தியானத்தில் சிறந்து நல்ல குண நலன்கள் உள்ளவர்களிடம் மட்டுமே திருநீற்றினை (விபூதியை) பெற வேண்டும் என்கிறார். மாறாக வஞ்சக எண்ணம் கொண்டோரிடம் இருந்து பெற்றால் அது தீய பலன்களையே கொண்டு தருமாம்.
இப்படி நல்லோரிடம் திருநீறு வாங்கிடும் போது அந்த பலனை முழுவதுமாக நாம் பெற்றிட ஒரு சூட்சும மந்திரம் இருப்பதாக அகத்தியர் கூறுகிறார்.
அது
சாற்றியதோ ருபதேசம் நன்றாய்கேளு
சங்கையுடன் ரூம் றீம் சிம்ராவென்று
தேற்றியதோர் சித்தர்சிவ யோகிதானும்
திருநீறு தானெடுத்துக் கொடுக்கும் போது
பார்த்திபனே மந்திரத்தை நினைத்து வாங்க
பதிலாக அவர்பிலமும் வருகும்பாரே.
சித்தர்கள், சிவ யோகிகள், ஞானிகள் போன்றவர்களிடம் திருநீற்றை/விபூதியை வாங்கும் போது "ரூம் றீம் சிம்ரா" என்கிற மந்திரத்தை மனதில் நினைத்து செபித்து வாங்கிட, அவர்கள் பெற்றிருக்கும் உயர் தவப் பயனும், குணநலன்களும் நம்மை வந்து சேரும் என்கிறார்.
எல்லோரும் மேற்சொன்ன மந்திரத்தை மனப்பாடம் பண்ணி, பெரியவர்கள் அருளாசி பெற்று, சிறப்பாக வாழ்ந்திட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment