போதேந்திரர் மகிமை!



*ஹரே ராம ஹரே ராம
  ராம ராம ஹரே ஹரே*

*ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
  க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே*

ஸ்ரீ பகவன் நாம போதேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்ரீ காமகோடி பீடத்தின் வழி வந்த ஸந்நியாஸியாவார். 

நாம பாராயணத்தின் பலனை சாதாரண மக்களும் அடைந்து உய்ய வேண்டும் , அதுவே இந்த கலியுகத்தில் மோக்ஷ ஸாதனம் என்று மக்கள் அறியவேண்டும் என்பதற்காக *பீடத்தையும் துறந்தவர்* அவர்.

பீடத்தைத் துறந்து ஸ்வதந்த்ர ஸந்யாஸியாக, கிராமம் கிராமமாகச் சென்று நாமப்ரசாரம் செய்துவந்தார். அவரது குருவான ஸ்ரீ ஆத்ம போதேந்த்ரரின் ஆணையின்படி நாமஸித்தாந்தம் செய்து அதற்கு ஆதாரமாக நாம ப்ரவாத்தை நிரூபிக்கும் விதமாக எட்டு கிரந்தங்கள் செய்துள்ளார்.

 தஞ்சாவூரின் அருகே பல கிராமங்களை நாம கிராமங்களாக மாற்றியிருந்தார். ஒரு சமயம் மன்னார்குடியின் அருகே உள்ள பெரம்பூர் என்ற கிராமத்தில் ஸஞ்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு க்ருஹஸ்தர் அவரது தேஜஸையும் காம்பீர்யத்தையும் கண்டு, இவர் ஒரு உண்மையான மஹாத்மா என்று உணர்ந்து வணங்கி நின்றார்.
நிமிர்ந்து பார்த்தார் ஸ்வாமிகள்

ஸ்வாமிகள் நம் க்ருஹத்தில் பிக்ஷை எடுத்துக்கணும்.

அவரை ஏற இறங்கப் பார்த்த ஸ்வாமிகள் 

பிக்ஷைக்கா, நான் அன்ன பிக்ஷைக்கெல்லாம் வருவதில்லை யேப்பா.. நியமம் எல்லாம்‌ வெச்சிண்டிருக்கேனே..

நான் என்ன பண்ணணும்னு சொல்லுங்கோ . ஸ்வாமி அவசியம் வரணும்.

நான் நாம பிக்ஷைக்குத்தான் வருவேன்.

புரியலையே..

ராமநாம ஜபம் பண்றவா க்ருஹத்தில்தான் பிக்ஷை எடுத்துப்பேன். 

அவ்ளோதானே, பேஷா ஜபம் பண்றேன். ஸ்வாமியே உபதேசம் பண்ணுங்கோ. 

மிகுந்த மகிழ்ச்சியோடு அந்த க்ருஹஸ்தருக்கு ராமநாம உபதேசம் செய்துவிட்டு, நாளை பிக்ஷைக்கு வருகிறேன் என்று வாக்கு கொடுத்தார் ஸ்வாமிகள்.

மறுநாள் ஒரு பெரிய  ஸந்நியாஸி பிக்ஷைக்கு வருகிறார் என்று ஒரே அமளிதுமளிப்பட்டது அந்த க்ருஹஸ்தரின் வீடு.

 ஸ்வாமிகள் வந்ததும் பூர்ண கும்பம் கொடுத்து, பூஜைகள் செய்தனர். பிறகு பிக்ஷைக்கு இலை போடப்பட்டது. ஸ்வாமிகள் அமர்ந்ததும் கவனித்தார், மூன்று வயது நிரம்பிய ஒரு சிறு குழந்தை, தாயின் பின்னால் நின்று கொண்டு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. 

ஸ்வாமிகள், அவனுக்கும் ஒரு இலை போடுங்கள் என்று சொல்லிவிட்டுக் குழந்தையை 

இங்க வாப்பா என்று அழைத்தார்.

குழந்தை எந்த சலனமும் இன்றிப் பார்த்துக் கொண்டிருந்தது.

ஒன்று வரவேண்டும், அல்லது  வரமாட்டேன் என்று சொல்லவேண்டும், தலையையாவது அசைக்கவேண்டும்.

சலனமே இன்றிப் பார்த்து க் கொண்டிருந்த குழந்தையை ஒன்றும் புரியாமல் பார்த்துவிட்டு மீண்டும்,

"இங்க வாப்பா".

அந்த க்ருஹஸ்தர் வணங்கிவிட்டுச் சொன்னார்.

ஸ்வாமி, அவனுக்குக் காதும் கேக்காது, வாயும் பேசமாட்டான். அதான் அவனுக்குப் புரியல,
என்றார்.

ஸ்வாமிகள் கண்ணிலிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருகியது.

ஸ்வாமி நீங்க நம் க்ருஹத்துக்கு பிக்ஷைக்கு வந்துட்டு அழக்கூடாது. எங்க வினை, நாங்க அனுபவிக்கறோம். ஸந்நியாஸி கண்ணீர் பூமியில் விழுந்தா ஊருக்கே ஆகாது. தயவு செய்து பிக்ஷை ஸ்வீகரிக்கணும்

அன்று காலை தான், 
ஒருவன் நாமத்தைச் சொன்னாலும் கேட்டாலும் ஒரே பலன். எனவே நாமம் வாயில் வரா விட்டாலும் கூட, யாராவது சொல்வதைக் கேட்டாலும்கூட போதும். அந்த ஜீவனுக்கு நற்கதி நிச்சயம். காதுக்கு பகவான் மூடி வைக்கவில்லை. எனவே யாரோ சொல்லும் நாமம் தானாய்க் காதில் விழுந்தாலும் போதும் என்று ஸித்தாந்தம் செய்திருந்தார் ஸ்வாமிகள்.

காதும் கேட்காது, வாயும்பேசாது என்றால், தனது சித்தாந்தத்திலிருந்து இவனைப் போன்ற ஜீவன்கள் தப்பி விடுவார்களே. அவர்களுக்கு நற்கதி கிட்டாமல் போய்விடுமோ என்று மிகவும் வருந்தினார் ஸ்வாமிகள்.

அந்த க்ருஹஸ்தர் மிகவும் கேட்டுக் கொண்ட தால், ஏதோ பேருக்கு அனைத்தையும் திரட்டி ஏழு கவளங்கள் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.( அவருக்குள்ள நியமப்படி )

ஸ்வாமிகளை வழியனுப்புவதற்காக அவரோடு வீட்டிலிருந்தோர் அனைவரும் தெருமுனை வரை சென்று விட்டனர்.

வீட்டில் அந்தக் குழந்தை தனியாக விடப்பட்டான். அவனுக்கோ பசி வயிற்றைக் கிள்ளியது. காலையிலிருந்து ஸந்நியாஸி பிக்ஷைக்கு வருகிறாரே என்ற பரபரப்பில் அவனுக்கு உணவேதும் கொடுக்கவில்லை போலும். 

ஸ்வாமிகள் பிக்ஷை செய்த இலையில் பரிமாறிய அத்தனையும் அப்படியே இருந்தன. அவர் ஏதோ சிறிது சாப்பிட்டதாய் பெயர் பண்ணிவிட்டுப் போய்விட்டார்.

பசியினால், குழந்தை இலையிலிருந்த பதார்த்தத்தை எடுத்து உண்ண ஆரம்பித்தான்.

ஸ்வாமிகளை வழியனுப்பிவிட்டு, இருந்திருந்து ஸ்வாமிகள் நம் வீட்டுக்கு வந்துட்டு இப்படி வருத்தப்படுபடி ஆச்சே என்று வருந்திக் கொண்டே வந்தவர்கள் எல்லாரும் வீட்டு வாசலில் வந்ததும் அப்படியே நின்றனர். அவர்களுக்குத் தாங்கள் பார்ப்பது கனவா நினைவா ஒன்றும்‌புரியவில்லை.

வீட்டின் கூடத்தில் அந்தக் குழந்தை இரண்டு கைகளையும் உயரத் தூக்கிக்கொண்டு நர்த்தனம் செய்துகொண்டே மதுரமான குரலில் ராம நாமத்தை இசைத்து க் கொண்டிருந்தான்.

ஒரு உண்மையான் மஹான் உண்ட அமுது, அவரது ஸ்பர்சம், ஸ்மரணம், வாக்கு, பார்வை, அனைத்துமே  பவித்ரமானவை. ஒருவருக்கு ஞானத்தை வழங்க இவற்றில் ஏதோ ஒன்று போதுமானது .

*ராம் ராம் ராம்*

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...