யோகத்தில் பூர்ணத்துவம் அடைவது எவ்வாறு?


ஆன்மீக தளத்தை எய்த தகுதி உடையவர்கள் அனைவருமே பொதுவாக ‘யோகிகள்’ என அழைக்கப்படுகின்றனர். இருப்பினும் யோகிகளில் ஹடயோகிகள், ஞான யோகிகள், தியான யோகிகள், பக்தி யோகிகள் என பலத்தரப்பட்ட யோகிகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆன்மீக உலகத்திற்குச் செல்ல தகுதி பெற்றவர்களே. ‘யோகா’ என்றால் ‘தொடர்பு கொள்ளுதல்’ என்று பொருள். யோக முறைகள் அனைத்தும் ஆன்மீக உலகுடன் நமக்கு தொடர்பு ஏற்படுத்தித் தரவே உள்ளன.  நாம் அனைவரும் இறைவனுடன் நிரந்தரமாக தொடர்பு கொண்டவர்கள். ஆனால் தற்போது நம் ஜட உலகச் சேர்க்கையின் தூய்மைக் கேட்டால் பாதிக்கப்பட்டிருக்கின்றோம். இப்பாதிப்புகளைத் தவிர்த்து ஆன்மீக உலகிற்கு திரும்பச் செல்வதற்கான வழிமுறைகளே ‘யோகம்’ எனப்படுகின்றது. ‘யோகா’ என்ற பதத்திற்கு ‘கூட்டுதல்’ என்ற மற்றொரு பொருளும் உண்டு. தற்போது நாம் இறைவனது தொடர்பை இழந்து வாழ்கின்றோம். ஆனால், இறைவனாகிய ஸ்ரீ கிருஷ்ணரது, தொடர்பை நமது வாழ்க்கையில் கூட்டிக் கொள்வோமாயின், நமது மானிட வாழ்க்கை முழுமைப் பெறுகின்றது.

இறக்கும் சமயத்தில் மேற்கூறிய முழுமை நிலையை நாம் பெறவேண்டும். ஆகவே வாழ்நாள் முழுவதும் நாம் முழுமையான நிலையை அடைவதற்கு முயல்வோமாயின், இறக்கும் தறுவாயில், இந்த ஜட சரிரத்தை அறவே விட்டு விட வேண்டிய தறுவாயில், யோகத்தின் பூரண நிலையை அடைய முடியும்.

பிரயாண காலே மனஸா அசலேண
பக்தயா யுக்தோ யோக பலேன சைவ
ப்ருவோர் மத்யே ப்ராணம் ஆவேஷ்ய சம்யக்
ச தம் பரம் புருஷம் உபைதி திவ்யம்

“இறக்கும் தறுவாயில், உயிர் மூச்சைத் தனது இரு புருவங்களுக்கு மத்தியில் நிலை நிறுத்தி பூரண பக்தி சிரத்தையுடன் ஒருவர் புருஷோத்தமரான இறைவனை நினைவு கூர்வதில் ஈடுபடுபவராயின், அவர், சந்தேகமின்றி இறைவனுடைய இருப்பிடத்தை அடைகின்றார்.” (பகவத் கீதை 8.10)

கல்லூரியில் படிக்கும் மாணவன் குறிப்பிட்ட துறையில் நான்கு அல்லது ஐந்து வருடங்கள் பயின்ற பிறகு, தேர்வில் வெற்றி அடையும் பொழுது பட்டத்தைப் பெறுவதைப் போல, வாழ்க்கை எனும் பாடத்தைப் பற்றி நாம் வாழ் நாள் முழுவதும் படித்து, இறுதியில் இறப்பு எனும் பரிட்சையில் தேர்வு பெறுவோமாயின், நாம் ஆன்மீக உலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவோம். இறக்கும் தறுவாயில் தான் நாம் வாழ் நாள் முழுவதும் வாழ்ந்தவிதம் சோதிக்கப்படுகின்றது

யம்யம் வாபி ஸ்மரண் பாவம்
தியஜதி அந்தே கலேவரம்
தம்தம் ஏவைதி கௌந்தேய
சதா தத்பாவ பாவித:

“இறக்கும் தறுவாயில் ஒருவர் நினைவு கூரும் விஷயங்களுக்கு ஏற்பவே, அடுத்தப் பிறவியில் அவரது சரீரம் அமைகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.” (பகவத் கீதை 8.6)

"வாழ்க்கையில் பூரணத்துவமடைவதற்காகவே நாம் புரியும் செயல்கள் அனைத்தும் இறக்கும் தறுவாயில் சோதிக்கப்படுகின்றன" என வங்காளப் பழமொழி ஒன்று கூறுகின்றது. இறக்கும் தறுவாயில் நாம் புரிய வேண்டிய செயல்கள் என்ன என்று பகவத் கீதையில், ஸ்ரீ கிருஷ்ணர் விளக்குகின்றார். தியான யோகம் பயிலுபவர்களுக்கு கீழ்கண்டச் சுலோகங்களை ஸ்ரீ கிருஷ்ணர் மொழிகின்றார்.

யத் அக்ஷரம் வேத விதோ வதந்தி
விஷந்தி யத் யதயோ வீத-ராகா
யத் இச்சந்தோ பிரம்மசர்யம் சரந்தி
தத் தே பதம் சங்க்ரஹேண பரவக்ஷ்யே

ஸர்வ-துவாராணி சம்யம்ய
மனோ ஹ்ருதி நிருத்ய ச
மூர்த்னி ஆதாயாத்மன பிராணம்
ஆஸ்திதோ யோக தாரணாம்

"வேதங்களைக் கற்றுணர்ந்தவர்களும், 'ஓம்' காரத்தை இடைவிடாது ஜபிப்பவர்களும் மற்றும் துறவறம் மேற்கொண்டு பெரும் தவம் புரிபவர்களும் பிரம்மஜோதியில் நுழைகின்றனர். இவ்வுயரிய நிலையை அடைய எண்ணிய சிலர் பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடிக்கின்றனர். அந்த முக்தி நிலையை அடைவதற்கான வழிமுறை என்ன என்பதை நான் இப்போது உனக்கு விவரிக்கின்றேன். புலன் இன்பங்களினால் ஏற்படும் ஈடுபாடுகளை அறவே தவிர்ப்பதே யோக நிலை ஆகும். புலன்கள் எனும் துவாரங்கள் அனைத்தையும் மூடி, மனதை இதயத்தின் பாலும், உயிர் மூச்சை தலையின் உச்சியிலும் நிலைநிறுத்தும் போது யோக நிலையை எய்தலாம்." (பகவத் கீதை 8.11-12)

மேலே விவரிக்கப்படட நிலை யோகமுறையில், 'பிரத்யாஹார' என வழங்கப்படுகின்றது. பிரத்யாஹார என்றால், "நேர் எதிர்மாறாக" என்று பொருள். இவ்வாழ்நாள் முழுவதும் நமது கண்கள் இந்த ஜட உலக அழகை ரசிப்பதிலேயே ஈடுபடுகின்றன. ஆனால் இறக்கும் தறுவாயில், நாம் பார்வைச் சக்தியை உள்ளிழுத்து. உட்புற ஆன்மீக அழகைக் காண வேண்டும். அதே மாதிரியாக செவிகள் உலகின் பலவித சப்தங்களைக் கேட்டே பழகிப் போயிருக்கக்கூடும். ஆனால் இறக்கும் தறுவாயில், ஆன்மீக ஓங்கார நாதத்தை உள்ளிருந்து கேட்க வேண்டும்.


ஓம் இதி ஏகாஷரம் பிரம்ம
வியாஹரன் மாம் அனுஸ்மரன்
ய: பிரயாதி தியஜன் தேஹம்
ஸ யாதி பரமாம் கதிம்

"இந்த யோக முறையில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு புனிதமான 'ஓம்' என்னும் அக்ஷரத்தை ஒலித்துக் கொண்டே புருஷோத்தமரான இறைவனை இடைவிடாது நினைத்தவாறு, சரீரத்தை விட்டு உயிர் துறப்பவா சந்தேகமின்றி ஆன்மீக உலகங்களை அடைகிறார்." (பகவத் கீதை.8.13)

இவ்வாறு, பிற உலக நடவடிக்கைகளில் புலன்களை ஈடுபடுத்தாது, இறைவனின் வடிவமான விஷ்ணுமூர்த்தி உருவத்தில் நிலை நிறுத்த வேண்டும். மனது இயற்கையாகவே எப்போதும் அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் இதயத்திலே வீற்றிருக்கும் விஷ்ணுமூர்த்தியின் பால் மனத்தை நாம் நிலைநிறுத்த வேண்டும். இவ்வாறாக மனத்தை இதயத்திலே நிலை நிறுத்தி, உயிர் மூச்சை சிகரத்திற்கு எடுத்துச் செல்லும் போது, யோகத்தின் உன்னத நிலையை அடையலாம்.

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...