கன்னி யார் என்பது பற்றியும் கன்னி வழிபாடும்

நூறு தெய்வத்தை வழிபடுவதை விட ஒரு கன்னியை வழிபட்டால் போதுமானது என்கிறார்கள் சிலர். காரணம் கன்னி அத்தகைய சக்தியைக் கொண்டது.

அந்த அளவுக்கு கன்னி வழிபாடு கிராம மக்களிடம் ஆழமாக வேறூன்றி உள்ளது. கன்னி என்பது திருமணமாகாத அனைவரையும் குறிக்கும். ஆண், பெண் என்ற பாகுபாடு இங்கில்லை. 

இளம் வயதிலேயே நோய் அல்லது விபத்தில் உயிர் இழந்தவர்கள் கன்னிகளாக வணங்கப்படுகின்றனர்.

இதில் 15 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் இறந்தால் அவர்கள் துடியான கன்னியாக இருப்பதாக கூறுகிறார்கள். என் குடும்பத்திற்காக என்னால் எதாவது நல்ல காரியம் செய்ய வேண்டும் என்று ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும்.

என்னை எப்போது கன்னியாக எடுத்து வழிபடுவார்கள் என்ற எண்ணத்தோடும் எதிர்பாத்துக் கொண்டிருக்கும்.

கன்னியாக வழிபடப்படுபவர் இறந்து ஓர் ஆண்டு முடிந்திருக்க வேண்டும். அதன் பிறகு தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்பு வீட்டு சுவற்றிற்கு சுண்ணாம்பு அல்லது வண்ணம் தீட்டி சுத்தப்படுத்த வேண்டும்.

பின் பூஜை அறையில் கன்னி மூலையில் கன்னிக்காக பூஜை செய்ய வேண்டும். புதுத்துணி எடுத்து அதை அன்றைய தினம் காலையில் நனைத்து காய வைத்து மாலையில் அந்த துணியை சுருட்டி முறுக்கி மூலையில் வைக்க வேண்டும். 

ஆண் என்றால் எந்த மாதிரி ஆடை அணிவாரோ அது போன்றும் அதற்கு துணையான பொருட்கள் குறிப்பாக மணிபர்ஸ், வாசனை திரவியம், முகப்பவுடர் முதலான பொருட்களும், பெண்கள் என்றால் சேலை முதலான துணிமணிகளும், வளையல், மை, நகப் பூச்சு, நெத்திச் சுட்டி, ஒட்டியாணம் என்று அந்தப் பெண் அணிந்து மகிழும் அனைத்து பொருட்களும் எடுத்து வைக்க வேண்டும். 

சிலர் இறந்தபெண் அதிகம் நேசிப்பாள் என்பதற்காக தாயக்கட்டை, பல்லாங்குழி முதலான விளையாட்டு உபகரணங்களையும் கூட வைப்பதுண்டு.
இவை அனைத்தும் வைப்பதற்கு முன்பு இறந்த போனவரின் உருவப் படத்தை மூலையில் வைக்க வேண்டும். 

அந்த படத்திற்கு சந்தன குங்குமம் கொண்டு பொட்டு வைத்து படத்திற்கு பிச்சிப்பூ மாலை (ஜாதி மல்லி) மட்டும் தான் சூட்ட வேண்டும். கன்னி வழிபாட்டிற்கு பிச்சிப்பூவும், மட்டிப் பழம் (ஏலக்கி), செவ்வாழை, நாட்டுப்பழம் போன்றவற்றை மட்டும்தான் வைக்கப்பட வேண்டும். 

கருப்பு நிறத்தில் துணியோ, வேறு பொருட்களோ வைக்கக் கூடாது. இவற்றை இறந்தவர் படத்திற்கு முன்பு இலை போட்டு அதில் வைக்க வேண்டும். ஐந்து தலை வாழை இலைகளை போட வேண்டும். முதலில் உடைத்த தேங்காய் மற்றும் 5, 7, 9 எண்ணிக்கையில் பழங்கள் வைக்க வேண்டும். 

அதோடு வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். ஒரு தேங்காயை எடுத்துக்கொண்டு அதிலுள்ள மூன்று கண்ணில் ஒரு கண் பகுதியில் துவாரமிட்டு, அதிலுள்ள தண்ணீரில் சிறிது பச்சரிசி, கொஞ்சம் நாட்டுச் சர்க்கரை, சிறிது மஞ்சள்தூள் ஆகியவற்றை இட வேண்டும்.

அடுத்த இலையில் அரிசிச் சாதம், குழம்பு, கூட்டு வகைகளுடன் பரிமாற வேண்டும். அதில் இறந்த நபருக்கு பிடித்தமானவை அதிகம் இடம் பெற்றிருக்க வேண்டும். மூன்றாவது இலையில் எல்லா பழ வகைகளிலும் ஒவ்வொன்று வாங்கி வைத்திருக்க வேண்டும். 

நான்காவது இலையில் பலகாரங்கள் வைத்திருக்க வேண்டும். பெரும்பாலும் இனிப்புகளே இடம் பெற வேண்டும். பூஜைக்குரியவர் காரம் விரும்புவார் என்றால் ஒரு வகை பலகாரம் மட்டும் காரமாக இருக்கலாம். ஐந்தாவது இலையில் துணிமணிகள் என வைத்துக்கொண்டு பூஜை செய்ய வேண்டும்.

பூஜையின் போது கற்பூரம் காட்டக் கூடாது.

வீடு முழுக்க சாம்பிராணி வாசமே இருக்க வேண்டும். மணி ஓசையை எழுப்பக் கூடாது. அப்போது நிசப்தமாக இருக்க வேண்டும்.

இறந்துபோனவருக்கு மிகவும் பிடித்த உறவுக்காரர்களில் ஒருவர் மீது அவர் சக்தி வந்திறங்கி ஆடி பேசுவதாகவும் சொல்லப்படுகிறது. இது சில இடங்களில் நடக்கிறது. பல இடங்களில் இந்த மாதிரி இல்லை. பெரும்பாலான வீடுகளில் அந்த நேரம் பல்லி ஓசை எழுப்பும் என்றும் சொல்கிறார்கள்.

சிலர் அன்றைய தினம் எங்களது கனவில் வந்து பேசுவான் என்றும் கூறுகிறார்கள். மறுநாள் கட்டுப்பெட்டி என்ற அந்த இளநார்பெட்டியில் மஞ்சள் கிழங்கு, துணிகள், கண்ணாடி, சீப்பு, வளையல் வைத்து கன்னி மூலையில் உயரமான இடத்தில் கட்டி  வைத்து விடவேண்டும். அடுத்த வருடப் பொங்கலன்று வீட்டை சுத்தம் செய்து காலையில் கன்னிப் பெட்டியைத் திறக்கும்போது, அதில் கடந்த ஆண்டு வைத்த மஞ்சள் முளை விட்டிருந்தால், கன்னி தெய்வம் துடியாக இருப்பதாக நம்பிக்கை. 

முதலாண்டு வைத்து படைத்த கன்னிப் பெட்டியை மறு ஆண்டுதான் எடுப்பார்கள். அதற்குள் வைத்திருந்த துணியை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அணிந்து கொள்வார். இந்தக் கன்னி வழிபாடு தமிழகத்தின் பல பகுதிகளில் அவரவர் வசதிக்கு ஏற்ப வழிபடப்படுகிறது. சுமங்கலிகள் கன்னி தெய்வங்களை வழிபட்டால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் யோகம் கைகூடும் என்று பொதுவான நம்பிக்கை இருப்பதாலே கன்னியை வணங்கும் வழக்கம் கிராமத்தில் துவங்கி நகரம் வரை தொடர்ந்து வருகிறது.

தங்கள் குலதெய்வத்தினை பங்குனி உத்திரத்தில் வணங்கும் போது கூட மறவாமல் வீட்டில் உள்ள கன்னிகளையும் தை மாதத்தில் வணங்கும் வழக்கம் தென் மாவட்டங்களில் மிகுதியாக காணப்படுகிறது.

குடும்ப ஒற்றுமைக்கு கன்னிதெய்வ வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...