உணவுகளால் ஏற்படும் ஐந்து வகை தோஷம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

அன்னம் என்பது நம்முடைய உயிரைத் தாங்குவது. அப்படிப்பட்ட உணவு எப்படி, எங்கே, எந்த முறையில், யாரால் சமைத்து பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. உணவு சமைப்பதிலும், பரிமாறுவதிலும், உண்பதிலும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா? என்றால், ஆம்.. முக்கியத்துவம் வாய்ந்தது தான். அதனால் தான் ‘உணவில் ஆசாரத்தை கடைப்பிடி’ என்று சான்றோர்கள் சொல்லி வைத்திருக்கின்றனர். இங்கே ஆசாரம் என்பதற்கு சுத்தம் என்று பொருள்.

நாம் உண்ணும் உணவில் ஐந்து வகையான தோஷங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவை

1.அர்த்த தோஷம்,
2.நிமித்த தோஷம்,
3ஸ்தான தோஷம்,
4.குண தோஷம்,
5.சம்ஸ்கார தோஷம் ஆகும். இந்த ஐந்து வகையான தோஷங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

#அர்த்த_தோஷம்

இந்த தோஷத்தைப் பற்றி, ஒரு குட்டிக் கதையின் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம். ஒரு துறவி, தன்னுடைய சீடனின் வீட்டிற்கு உணவருந்துவதற்காக சென்றிருந்தார். உணவருந்திக் கொண்டிருக்கும் போது, தனது சீடனிடம் ஒரு நபர் பணம் நிரம்பிய மூட்டை ஒன்றைக் கொடுப்பதை துறவி பார்த்தார்.

உணவருந்தி முடித்ததும் துறவி ஒரு அறையில் ஓய்வு எடுத்தார். அந்த அறையில்தான் சீடன் வாங்கி வைத்த பணம் நிரம்பிய மூட்டை இருந்தது. திடீரென்று துறவியின் மனதில் தீய எண்ணம் உண்டாகி, அந்த மூட்டையில் கையை விட்டு கொஞ்சம் பணத்தை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டார். பின்னர் சீடனிடம் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார்.

மறு நாள் காலையில் பூஜை செய்யும் போது, முதல் நாள் தான் செய்ததை நினைத்துப் பார்த்தார், துறவி. அவருக்கு தான் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என்பது உறைத்தது. சீடனின் வீட்டில் உணவருந்திய பின்னர்தான் இந்த கெட்ட எண்ணம் தோன்றியது. அந்த உணவு இரவில் ஜீரணமாகி, காலையில் கழிவாக வெளியேறிய பின்னர் மனம் பரிசுத்தம் ஆனதையும் அவர் எண்ணிப்பார்த்தார்.

உடனடியாக பணத்தை எடுத்துக் கொண்டு சீடனின் வீட்டிற்குச் சென்றார். நடந்ததைச் சொல்லி பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.

பின்னர், ‘நீ சம்பாதித்த பணம் எப்படி வந்தது?’ என்று சீடனிடம் கேட்டார்.
அதற்கு அந்த சீடன் தலைகவிழ்ந்தபடியே, ‘நான் நேர்மையற்ற வழியில்தான் பணம் சம்பாதித்தேன்’ என்று ஒப்புக்கொண்டான்.

இப்படி நேர்மையற்ற வழியில் சம்பாதிக்கும் பணத்தினால் வாங்கப்படும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை உண்பதால் வருவதே ‘அர்த்த தோஷம்.’ இங்கே ‘அர்த்தம்’ என்பதற்கு ‘பொருள்’ என்று சொல்வார்கள். நாம் சமைக்கும் உணவுப் பொருட்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருக்க வேண்டியது அவசியம்.

#நிமித்த_தோஷம்

நாம் சாப்பிடும் உணவைச் சமைக்கும் நபர், நல்ல மனதுடன் இருக்க வேண்டியது அவசியம். அவர் நேர்மையானவராகவும், அன்பானவராகவும், நல்ல சுபாவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் சமைக்கப்பட்ட உணவானத நாய், எறும்பு, பல்லி, காகம் போன்றவற்றால் தீண்டப்படாமல் இருப்பதும் முக்கியம். உணவில் தூசி, தலை முடி, புழுக்கன் போன்றவையும் இருக்கக்கூடாது. மேற்சொன்ன ஏதேனும் ஒரு குற்றம் இருந்தாலும் அந்த உணவை சாப்பிடுபவர்களுக்கு ‘நிமித்த தோஷம்’ ஏற்படும்.

அசுத்தமான உணவு, மன அசுத்தத்தையே விளைவிக்கும். தீயவன் சமைத்த உணவு தீமையான எண்ணங்களையே உண்டாக்கும். நல்லவன் சமைத்த உணவால்தான் மனதில் நற்சிந்தனைகள் எழும்.

குருசேத்திரப் போரில் அம்புகளால் துளைக்கப்பட்ட பீஷ்மர், போர் முடியும் நாள் வரை அம்புப் படுக்கையிலேயே உயிரோடு இருந்தார். அவரைச் சுற்றி கிருஷ்ணரும், பாண்டவர்களும், திரவுபதி போன்றவர்களும் இருந்தனர். அவர்களுக்கு பீஷ்மர் அறிவார்ந்த சிந்தனைகளின் மூலமாக பல நல்ல மொழிகளை சொல்லிக்கொண்டிருந்தார்.

அப்போது திரவுபதியின் மனதில் ஒரு எண்ணம் ஓடியது. ‘இப்போது இவ்வளவு அறிவார்ந்து சிந்திக்கும் பீஷ்மர், அன்று என்னை சபையில் துரியோதனன் ஆடையை அவிழ்க்க உத்தரவிட்ட போது, எதற்காக வாயை மூடிக் கொண்டிருந்தார்’ என்று நினைத்தாள்.

அவளது மன ஓட்டத்தை அறிந்து கொண்ட பீஷ்மர், ‘தாயே! நான் துரியோதனின் ஆதரவில் அவனால் படைக்கப்பட்ட உணவை சாப்பிட்டு வந்தவன். என் அறிவை முற்றிலுமாக அந்த உணவு மறைத்து விட்டது. அம்பால் துளைக்கப்பட்டு, இவ்வளவு நாள் நான் சாப்பிடாமல் இருந்ததால், என் பழைய ரத்தம் சொட்டுச் சொட்டாக வெளியேறி, நான் பரிசுத்தனாகிறேன். எனது அறிவும் பிரகாசிக்கிறது’ என்றார்.

#ஸ்தான_தோஷம்

மூன்றாவதாக நாம் பார்க்கப் போவது ‘ஸ்தான தோஷம்.’ எந்த இடத்தில் உணவு சமைக்கப்படுகிறதோ அங்கு நல்ல அதிர்வுகள் இருக்க வேண்டும். சமைக்கும் போது தேவையற்ற பிரச்சினைகள், அற்ப காரியங்களுக்காக விவாதங்கள் போன்றவை நடந்தால், அதனால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும். அதே போல் கழிப்பறை, மருத்துவமனை, யுத்த களம், வழக்கு மன்றம் ஆகியவற்றின் அருகே சமைக்கப்படும் உணவும் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல.

துரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்தான். அதனை உண்பதற்காக கிருஷ்ணரை அழைத்தான். ஆனால் கிருஷ்ணரோ உணவருந்த மறுத்து விட்டார். அதனால் கோபம் கொண்ட துரியோதனன், கிருஷ்ணரை சிறைப்பிடிக்கவும் முயன்றான். ஆனால் கிருஷ்ணரோ நேராக விதுரரின் வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்த விதுரரின் மனைவி மகிழ்ச்சியில் திளைத்தாள்.

கிருஷ்ணரை கண்ட ஆனந்தத்திலும், பதற்றத்திலும், அவருக்கு என்னத் தருகிறோம் என்பதை உணராத நிலையிலும், வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு, தோலை அன்புடன் கொடுத்தாள். அதை வாங்கித் தின்ற கிருஷ்ணர் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் இதையெல்லாம் கண்ட விதுரர் பதறிப்போனார். தன்னுடைய மனைவியை கோபமாக பார்த்தார்.

கிருஷ்ணரோ, ‘விதுரரே! நான் அன்பிற்காகத் தான் ஏங்குகிறேன். எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி ஜலம், ஒரு இலை, ஒரு பழம் என்று எதைத் தந்தாலும், அதுவே எனக்குப் போதும்’ என்று அருளினார்.

ஆம்.. நாம் ஒருவருக்கு படைக்கும் உணவை, உள்ளன்புடன் பரிமாற வேண்டியது மிகவும் அவசியம்.

#குண_தோஷம்

நாம் சமைக்கும் உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருட்கள், சாத்வீக குணமுடையதாக இருக்க வேண்டும். பால், நெய், அரிசி, மாவு, பருப்பு போன்றவை சாத்வீகமானவை. புளிப்பு, உரைப்பு, உப்பு உள்ளிட்டவை ராஜஸிகமானவை. பூண்டு, வெங்காயம், மாமிசம், முட்டை போன்றவை தாமஸிகமானவை. சாத்வீக உணவு ஆன்மிக முன்னேற்றத்தைத் தருகிறது. ராஜஸிக உணவு உலக மாயையில் சிக்கும் உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிறது. தாமஸிக உணவு தீய எண்ணங்களை வளர்க்கிறது.

#சம்ஸ்கார_தோஷம்

தூய்மையாக உணவு சமைக்கப்பட்டாலும் கூட, உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருக்கக் கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை. இதைத்தான் ‘சம்ஸ்கார தோஷம்’ என்கிறார்கள்.

இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி, ஒருவன் உணவை உண்ண வேண்டும். அதனால் தான் அன்னை அல்லது மனைவியால் இல்லத்தில் சமைத்து பரிமாறப்படும் உணவை ஏற்பது நல்லது என்று முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...