ஒச்சாயி_கதை


 #ஒச்சாயி_கதை

'குலம் பார்த்து பெண் எடு,  பெண் கொடு' என்பது முன்னோர் வாக்கு. இதை, இன்றளவிலும் கடைப்பிடிப்பவர்களும் இங்கே இருக்கிறார்கள். இப்படி பெண் கொடுக்க பார்க்கும்போது, 'குலதெய்வம் எது?' என்பதை மிகமுக்கியமாகப் பார்ப்பது வழக்கமாகவே இருக்கிறது!

தன் மேல் காதல்கொண்ட அந்த ஆண் மகன், பெண் கேட்டு வந்து நிற்க...
 'உன் குலதெய்வம் எது?' என்று கேட்டார் அந்தப் பெண்ணின் தந்தை.
அவனுக்கு குலதெய்வம் எது? என்று தெரியாத நிலையிலும்...
அவனையே காதல் மணம் புரிந்தாள்
அந்தப் பெண்.
பின்னாளில், கணவன் வீட்டாருக்கு தானே குலதெய்வமாகவும் ஆகிப் போனாள். அந்த உத்தமியின் பெயர் ஆண்டாயி! கணவன் வீட்டாருக்கு 'ஆண்டாயிக் கிழவி'யாக இன்றளவிலும் விளங்குபவள், தன்னை நம்பி வரும் ஆயிரக்கணக்கானோருக்கு 'ஒச்சாண்டம்மன்' என அருள்பாலித்து வருகிறாள்!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே இருக்கும் பாப்பாபட்டியில், அங்கு வசிக்கும் பத்து வீட்டுக்காரர்களின் பராமரிப்பில் இருக்கிறது ஒச்சாண்டம்மன் திருக்கோயில்.

ஆண்டாயிக் கிழவியின் கதை என்ன?? கோயில் உருவானது எப்படி??

''சுமார் 400 வருடங்களுக்கு முன் இந்த பாப்பாபட்டி நாட்டில் வாழ்ந்த பகாத்தேவன்... சிலம்பம், கூத்து, மல்யுத்தம் என்று எல்லா கலைகளிலும் சிறந்து விளங்கினான். அப்போது கருமாந்தூரில் நடைபெற்ற கோயில் திருவிழாவில், தனது ஆற்றலையெல்லாம் அவன் நிகழ்த்திக் காண்பித்தபோது, அங்குள்ள ஒச்சாண்டம்மன் கோயில் பெரியபூசாரியின் மகள் ஆண்டாயி, இவன் மீது காதல் கொண்டாள். இவனும் அவள் மீது மையல் கொண்டான். பழக்கம் நெருக்கமான பிறகு, முறைப்படி பெண் கேட்க வரச் சொன்னாள். ஊரில் இருந்த மற்ற சமூகத்தின் முக்கிய பிரமுகர்களை அழைத்துக் கொண்டு, பெரியபூசாரி வீட்டுக்குப் போய் பெண் கேட்டார் பகாத்தேவன். அப்போது, 'உங்கள் குலதெய்வம் எது?' என்று பெரியபூசாரி கேட்க, பதில் தெரியவில்லை என்பதால் பெண் கொடுக்க மறுத்துவிட்டார். ஆனால், காதல்கொண்ட ஆண்டாயி,பகாத்தேவனோடு கிளம்பிவிட்டாள். இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி, எட்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர்.

என்னதான் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஆண்டாயியின் மனதில் கணவனுக்கு குலதெய்வம் இல்லாதது மனக்குறையாகவே இருந்தது. அதனால் தன் வீட்டு குலதெய்வமான ஒச்சாண்டம்மனையே இடையறாது மனதில் துதித்துக் கொண்டே இருந்தாள். இப்படி இறை நினைப்பாகவே இவள் இருப்பது, ஊரிலுள்ள மற்றவர்களுக்குக் கேலியாக இருந்தது. அவளோ... பொருட்படுத்தாமல், வழிபாட்டைத் தொடர்ந்தாள்.

ஒருமுறை கருமாந்தூர் கோயில் திருவிழாவுக்கு ஆண்டாயியுடன், ஓரகத்தியும் போனாள். இவர்கள் பொங்கல் வைக்க, கோயிலின் வழக்கப்படி எல்லோருடைய அரிசியில் இருந்தும் ஒரு கைப்பிடி எடுத்தார்கள். 'வெளியூர்க்காரியான ஓரகத்தியின் அரிசியில் எடுக்க வேண்டாம், அதற்குப் பதிலாக என் அரிசியில் எடுத்துக் கொள்ளுங்கள்' என்று சொன்னாள் ஆண்டாயி. அவளுடைய தகப்பன் வீட்டார்தான் கோயில் நிர்வாகிகள். என்றாலும், அவளுடைய வேண்டுகோள் ஏற்கப்படவில்லை. ஓரகத்தியின் பானையிலும் அரிசி எடுத்ததுடன், பொங்கல் பொங்கியதும் அதிலும் ஓர் அகப்பை எடுத்தார்கள்.

'ஓரகத்தி முன்னிலையில் அவமானப்படுத்தி விட்டார்களே' என்று அழுதுகொண்டே பொங்கல் பானையை தலையில் வைத்துக் கொண்டு நடையைக் கட்டினாள். அவளுடைய தம்பி மற்றும் வேலைக்காரன் இருவரும் பின் தொடர்ந்தனர். எங்கும் கும்மிருட்டு... ஆனால், இவள் போகும் பாதை மட்டும் பிரகாசமாக ஒளிர்கிறது. கொண்டம்பட்டியில் ஒரு தோப்பில் சற்று அவள் தேங்கி நிற்க, ஆவேசம் குறைகிறது. அப்போதுதான் தம்பி மற்றும் வேலைக்காரன் இருவரையும் கவனிக்கிறாள்.

பானையை இறக்கி, 23 இலை போடுகிறாள். இரண்டு இலைகளில் தம்பியும், வேலைக்காரனும் சாப்பிட, மீதமுள்ள 21 இலைகளிலும் இவள் போட்ட உணவை அவள் வணங்கும் சூட்சம சக்திகள் எடுத்துக் கொண்டன. வீட்டை அடைந்த ஆண்டாயி, குரல் கொடுக்கிறாள். உள்ளே ஆட்டு மந்தையின் ஊடே படுத்திருந்த பகாத்தேவன், இரவில் தனியாக வந்த இவளை, கடுமையாகக் கடிந்து கொள்கிறான். ஏற்கெனவே கோபத்தில் இருந்த ஆண்டாயி, கணவனும் கோபப்படுத்த... உத்தப்ப நாயக்கனூர் ஜமீனுக்குப் போய் முறையிட திட்டம் போட்டாள். ஆனால், அவளை தன்னுடைய சக்தியாக வெளிப்படுத்த, தான் திட்டம் போட்டாள்... ஒச்சாண்டம்மன்!

இவள் வந்ததை பெரிதாகக் கண்டு கொள்ளாத ஜமீன், வேட்டைக்குப் போகும் போக்கில் 'என்ன?' என்பதுபோல் இவளைப் பார்க்க, ''தொட்டிலைப் போய் பார் தொட்டியா!’' என்றாள் (ஜமீன்தார் தொட்டிய நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதால், 'தொட்டியா' என்று விளித்தாள்). அதைக் கேட்காமல் சென்ற ஜமீன், காட்டில் மான் ஒன்றைச் சுடும்போது, குறிதவறி வேலைக்காரனைச் சுட்டுவிட்டார். மனம் குழம்பியபடியே, அரண்மனைக்குத் திரும்ப, அங்கே நின்ற ஆண்டாயி, ''தொட்டிலை போய் பார் தொட்டியா!’' என்றாள் மீண்டும்.

உள்ளே போய் தன்னுடைய தங்கத் தொட்டிலைப் பார்த்தார். அதில் அவர்களது குலதெய்வமான ஒச்சாண்டம்மன் சர்வ அலங்கார தேவதையாகக் காட்சிக் கொடுத்தாள். வெளியே ஓடிவந்தவர், ஆண்டாயியின் காலில் விழுந்து வணங்கி... ''உனக்கு என்ன வேண்டும் தாயே?'’ என்று கேட்க, ''என் கூட வந்திருக்கும் இருவருக்கும் ஆளுக்கு 96 குழி நிலம் கொடு'’ என்று உத்தரவிட்டு, ஊர் திரும்பினாள்.

அதற்குள்ளாகவே... நில பத்திரத்தை எடுத்துக்கொண்டு குதிரையில் ஊருக்கு வந்த ஜமீன்தார், ஊரில் விஷயத்தை சொன்னதும்... எல்லோருக்கும் ஆச்சர்யம். ஊரே சேர்ந்து அவளை வரவேற்றது. பொங்கல்பானையை (கரகத்தை) இறக்கி வைத்து, ''இதுதான் இனி ஒச்சாண்டம்மன்!'' என்று சொல்ல... அங்கே வழிபாடு தொடங்கியது.

வெகுகாலம் வாழ்ந்த ஆண்டாயி, நாடி வரும் மக்களுக்கு அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்தாள். யார் வந்து எது கேட்டாலும் அதை நிறைவேற்றித் தந்தாள். உசிலம்பட்டி சுற்றுவட்டம் முழுவதும் அவள் கீர்த்தி பரவியது.மிக விரிவான பூஜைகளை செய்து வந்தாள். ஒரு சிவராத்திரியின்போது இரண்டு பூஜை முடிந்து, மூன்றாம் பூஜை நடக்கும்போது அவளைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அப்போது ஒரு அசரீரி கேட்டது. ''நான் ஒச்சாண்டம்மனோடு கலந்துவிட்டேன். என்னை நீங்கள் கோயிலில் வழிபட்டால் போதும்'' என்று ஆண்டாயிக் கிழவி சொல்ல... அன்றிலிருந்து கோயிலில் இருக்கும் ஒச்சாண்டம்மனையே 'ஆண்டாயிக் கிழவி'யாக வழிபட ஆரம்பித்தார்கள் மக்கள்.

''மனிதர்களின் கஷ்டநஷ்டம்அத்தனையையும் நேரடியாக உணர்ந்தவள் என்பதால், இன்றளவும் துன்பம் என்று வருகிற அத்தனை பேரின் துன்பங்களையும் தான் ஏற்றுக்கொண்டு... அவர்களுக்கு நல்லது செய்கிறாள் ஆண்டாயி. அதனால்தான் எங்கேயோ காட்டுக்குள் இருக்கும் இவளைத் தேடி நாளுக்கு நாள் மக்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். அர்ச்சனைக்காக எதையும் வாங்கி வரவேண்டும் என்று கட்டாயமில்லை. எந்தவித பரிகாரங்களும்கூட செய்யத் தேவையில்லை, நேர்த்திக்கடன் என்றும் எதுவும் கிடையாது. தங்கள் கஷ்டத்தை சொல்லி மனமுருக வேண்டிக் கொண்டாலே போதும். துன்பங்களைப் போக்கி நல்லது செய்விப்பாள் ஆண்டாயி''

ஆண்டாயி பயன்படுத்திய ஆபரணங்கள், உடைகள்... உசிலம்பட்டி, நகைக்கடைத் தெருவில் இருக்கும் சின்னகருப்புகோயிலில் வைக்கப்பட்டிருக்கிறது. மகாசிவராத்திரியின் போது அங்கிருந்து ஆபரணப்பெட்டி அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக பாப்பாபட்டிக்கு எடுத்து வரப்படுகிறது. அப்போது ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்வது அற்புதக் காட்சி! ஆண்டாயி... கண்முன்னே வாழ்ந்து மறைந்தவள் என்பதற்கு ஆடை, அணிகலன்கள் ஒரு சாட்சி என்றால்... அங்கே அன்றாடம் வருகிற ஆயிரக்கணக்கானோர் ஆண்டாயிக் கிழவியின் அற்புதங்களுக்கு நிஜ சாட்சி!

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...