பூமிக்கு நாம் ஒரு ஞான யாத்திரை வந்தோம் யாத்திரை முடிந்ததா? சொல் மனமே சொல்?
பூமிக்கு வரும் போது தனியே வருகிறோம். போகும் போதும் தனியே போகிறோம். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் மட்டும் தானே சொந்தங்கள், பந்தங்கள், பாசங்கள்...அப்படியா???
வரும் போது தனியே வருகிறோம் என்று யார் சொன்னது மனமே!
விலை மதிக்க முடியாத
உடலோடு வந்தாய்!
திவ்ய அஸ்திரமான நிறைவான கபடமற்ற மனதோடு வந்தாய்!
கர்மாவின் கரு மைய பதிவோடு வந்தாய்!
கர்ம பாக்கிகளை அடைக்க
கடனாளியாக வந்தாய்..!
பிறக்கும் போது கொண்டு வந்தது ஏராளம் ஏராளம். ஆமா, ரொம்பவே
தாராளமாக...!
ஆனால்...
இறக்கும் போது உடலை மட்டுமே
அதுவும் ஸ்தூல உடலை மட்டுமே
விட்டு செல்கிறாய்..!
ஐந்து உடலையும் அழிக்கும்
அபூர்வ சக்தி இந்த பஞ்ச பூதத்திற்கு ஏது!?
ஒரே ஒருஉடலான ஊன் உடலை மட்டுமே பஞ்ச பூதம் அழிக்கும்.
மற்ற நான்கு சூட்சும உடல்களை
யாரால் அழிக்க முடியும்!
அதில் தான் அடங்கி இருக்கும்
பாவ புண்ணிய, கரு மைய கணக்கு.
ஒருவன் இறக்கும் போது
உடன் கொண்டு செல்வது எது என்பதை அறிவாயா மனமே!
யார் சொன்னது? மனமே
பிறப்பிக்கும் இறப்பிற்கும்
இடையே தான் சொந்தமும் பந்தமும் என்று...!
நீ பிறக்கும் முன் தீர்மானிக்கப்பட்டவையே
உனது தாய் தந்தை உறவு என்று அறிவாயா மனமே.
உடன் இருந்து உறவாடும்
உறவுகளும் உனது பழைய பாக்கியே..!
உடன் இருந்து வாழும்
கணவன் மனைவியும்
உன் உயிர் பெற்ற வரமே.
எத்தனையோ பெண்கள் இங்கிருக்க
ஏன் ஒரு பெண்ணிடம் காதல் கொண்டாய், மணம் கொண்டாய்?
எத்தனையோ நாடு ஊர் இருக்க ஏன் குறிப்பிட்ட இடத்தில் நீ பிறந்தாய்?
எத்தனையோ தாய் தந்தை இருக்க ஏன் குறிப்பிட்ட தாய் தந்தைக்கு நீ பிறந்தாய்?
பிறந்த அடுத்த விநாடியே
ஒருவன் கோடிஸ்வரனாக இருக்கிறானே அது எப்படி?
எதையும் கொண்டு வராமல்
எப்படி அவன் உடனே கோடிஸ்வரன் ஆனான்?
ஏன் ஒருத்தர் ஏழை குடும்பத்தில் பிறக்க வேண்டும்?
என்ன கணக்கு இது?
பிறக்கும் போது சொந்தத்தையும் சேர்த்தே அல்லவா எடுத்து வருகிறான்??
ஆக....
உறவுகளும் வாய்பு வசதிகளும் ஏதோ
இடையில் வருவது மட்டும் அல்ல,
பிறகு என்ன மனமே?
முடிசார்ந்த மன்னரும்
முடிவில் பிடி சாம்பல் ஆவார்...
ஆம்.....உடல் இறந்தது.
உயிர் என்று இறந்தது???
உடலை கொல்லும் காலன்
உயிரை என்ன செய்யும்...
உயிர் அது,
•காற்றில் கரையாது..
•நீரில் நனையாது..
•மண்ணுள் அடங்காது..
•நெருப்பில் வேகாது..
•ஆகாயத்தில் அடைக்க முடியாது
அறிவாயா மனமே!
உடல் விட்டு செல்லும் உயிர், தனியே எப்படி போகும்.
அது தான் வாழ்ந்த காலத்துக்கான அனுபவம் (மதிப்பெண்கள்) எடுத்து செல்லும்.
அதுவே அதன் அடுத்த ஜென்மாவின் தொடக்கமும், புனர் ஜென்மாவின் இறுதி இருப்புமாகும்.
இதுவே இறைவனின் அரசாட்சி என்பதை உணர்வாய் ..!மனமே...உணர்வாய்!!!
எல்லாம் முன்பே தீரமானிக்கப்பட்டது, அதுவே தான் இன்று நடந்துகொண்டிருக்கின்றது. இறை அருளால் உண்மையை அறிந்து, உணர்ந்து, அவனிடம் சரணாகதி அடைந்து மோட்சம் என்ற மேன்னைமயை பெறுவோம்
No comments:
Post a Comment