பைரவப் பெருமான் ஒரு அறிமுகம்

உலகத்தில் ஏராளமான மதங்களும், வழிபாட்டுமுறைகளும் இருக்கின்றன; ஆனால், ஒவ்வொரு மதத்திலும் ஒரே ஒரு கடவுள், ஒரே ஒரு மதப் புத்தகம்,ஒரே ஒரு வழிபாட்டுமுறை என்று மட்டுமே இருக்கிறது; நமது இந்து தர்மத்தைத் தவிர!

நமது இந்து தர்மத்தை நமது முன்னோர்கள் ஷண்மத வழிபாடு என்று வகுத்துள்ளனர். ஆறு விதமான இறைவழிபாட்டுமுறைகளின் தொகுப்பே நமது இந்து தர்மம் என்பது இதற்கான சரியான விளக்கம் ஆகும்.

விநாயகரை வழிபடுபவர்களைக் கொண்ட வழிபாட்டு முறைக்கு காணபத்தியம் என்று பெயர்; முருகக்கடவுளை வழிபடுபவர்களை உடைய வழிபாட்டுமுறையை கவுமாரம் என்று அழைக்கிறோம். அம்மனை வழிபடும் முறைகளின் தொகுப்பே சாக்தம் ஆகும். சூரியனை வழிபடும் வழிபாட்டை சவுரம் என்கிறோம். விஷ்ணுவை வழிபடும் முறையை வைஷ்ணவம் என்கிறோம்.

சிவனை வழிபடும் வழிபாட்டுமுறைக்கு சைவம் என்று பெயர்.இந்த வழிபாட்டுமுறையானது உலகில் மனித இனம் நாகரீகமடைந்ததில் இருந்தே நடைமுறையில் இருக்கிறது. இன்று மற்ற மதங்களின் தலைமை பீடங்கள் இருக்கும் இடங்களில் கூட இந்த வழிபாடு இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.

இதையே கடந்த 20,00,000 ஆண்டுகளாக நமது சிவாலயங்களில் தென்னாடுடைய சிவனே போற்றி;
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பாடி வருகிறோம்.

இந்த சிவவழிபாட்டின் ஒரு உட்பிரிவே பைரவ வழிபாடு ஆகும். இந்த பைரவ வழிபாடு ஐந்து பெரும்பிரிவுகளைக் கொண்டிருந்தது. இந்த ஐந்து பெரும்பிரிவுகளில் நான்கு இன்றும் நமது பாரத தேசத்தில் ஆங்காங்கே வழிபாட்டுமுறையாக இருக்கின்றன. அவைகளை நம்மால் பின்பற்ற இயலாது;

அவை: மாவிரதம், காளாமுகம், காபாலம், பாசுபதம், ஐக்கியவாத சைவம்.

இவைகள் பல கடுமையான கட்டுப்பாடுகளை நமது ஒரு பிறவி முழுவதும் பின்பற்ற வேண்டும். சிறிது பின்பற்றுவதிலிருந்து நழுவினாலும், இந்த வழிபாட்டு முறையிலிருந்து நாமே விலகிவிடுவோம்.

பழமையான ரிக் வேதம், அதர்வண வேதம்; உத்திர காரணாகமம், பூர்வகாரணாகமம், அஜிதாகமம், சுப்ரபேதாகமம், அம்சுத்வேதாகமம், மகுடாகமம், ரெளரவாகமம் போன்ற ஆகமங்களிலும், பல சாஸ்திர நூல்களிலும் பைரவ வரலாறு விரிவாக கூறப்பட்டுள்ளது. (ஆகமம் என்றால் சிவ வழிபாட்டுமுறைகளை எளிமையாகத் தெரிவிக்கும் புராதன நூல் என்று பெயர்; இதில் சிவாலயம் கட்டும் முறைகள்,வழிமுறைகளும் இருக்கும்)

ஜைன சமயத்தில் விஜயபத்ரர், வீரபத்ரர், மணி பத்ரர், ஸ்ரீபைரவர், அபராஜிதர் என்ற பெயர்களில் க்ஷேத்ரபாலகராக வழிபட்டனர். 96 வகையான பைரவர்கள் ஜைன சமயத்தில் உள்ளனர். பவுத்த சமயத்தில் 84 வகையான வயிரவர்களும், வாமம் அல்லது சாக்தத்தில் 64 வகை வைரவர்களும், வைஷ்ணவத்தில் சக்கரத்தாழ்வார் உருவில் பைரவரையும், கிருஸ்துவ சமயத்தில் நோவாஸ் ஆர்க் எனப்படுவது பிரளய காலத்தில், க்ஷேத்திரபாலகரின் தோணியை ஒத்துள்ளது. செயிண்ட் மைக்கேல், செயிண்ட் ஜார்ஜ் என கிருஸ்துவர்கள் வழிபடுவது ஸ்ரீபைரவருடன் ஒப்பிடக் கூடியவர்கள்.

சக்திகள், தேவர்கள், யோகினிகள், சநகாதி முனிவர்கள், கிங்கரர்கள், சித்தர்கள் என அனனத்துத் தரப்பினரும் வழிபடும் தெய்வம் ஸ்ரீகால பைரவப் பெருமான் ஆவார்.

எங்கும் எதிலும்,நீக்கமற நிறைந்து நின்று, இந்த பிரபஞ்சத்தையும், பஞ்சபூதங்களையும் சிருஷ்டித்து, உருவின்றி ஜோதியாக நிற்கும் சர்வேஸ்வரனின் முதல் மூர்த்தமே ஸ்ரீபைரவப் பெருமான்!!!

நம் குலதெய்வம், நமது இஷ்ட தெய்வம், நமது ஜாதகப்படி நமக்கு தற்போது நடைபெறும் திசை புக்தி அந்தரத்துக்குரிய தெய்வம் என்று எந்தக் கடவுளையும் நாம் வழிபட்டாலும், அந்தக் கடவுள்களுக்கும், ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபடுவதற்கும் ஒரே ஒரு வித்தியாசம் உண்டு.

நாம் எந்தக் கடவுளை வழிபட்டாலும், அந்தக் கடவுளிடம் நாம் திரும்பத் திரும்ப வேண்டும் கோரிக்கை மட்டுமே நிறைவேறும்.
ஆனால், ஸ்ரீகாலபைரவப் பெருமானை வழிபட்டால், நமக்கு என்னென்ன குறைகள் உண்டோ அத்தனைக் குறைகளையும் தானாகவே நிறைவேறும். நாம் ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபடும்போது அவரிடம் மறந்து போய் எதையாவது வேண்டிய மறந்து போனாலும்,அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை; மேலும், முற்பிறவி வரையிலும் நாம் பழுத்த சிவனடியாராக இருந்தால் அல்லது ஏதாவது ஒரு சித்தரின் நேரடி சீடராக இருந்தால் மட்டுமே இப்பிறவியில் தொடர்ந்து ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபட வேண்டும்.

ஸ்ரீகாலபைரவரும், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவரும் ஒருவரே!

உங்களுக்கு கடுமையான சோகங்கள், வேதனைகள், சிக்கல்கள், சிரமங்கள் இருந்தால் நீங்கள் முதலில் வழிபட வேண்டியது ஸ்ரீகால பைரவப் பெருமானையே! சில வருடங்கள்/மாதங்கள் ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபட்டப் பின்னர், நீங்களாகவே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாட்டிற்கு நகர்ந்துவிடுவீர்கள்.

வீட்டில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வழிபடும் முறை!
******************************************************************

உலகில் வாழ்ந்து வரும் மாந்தர்கள் அனைவரையும் அவரவர் முற்பிறவி கர்மாக்களின்படி படைத்து வருபவர் அயன் என்ற பிரம்மன்.

அவ்வாறு படைக்கப்பட்ட மாந்தர்களை காத்து வருபவர் மால் என்ற மஹாவிஷ்ணு.

மாந்தர்களின் அனைத்து கர்மவினைகளையும் அழித்து முக்தியைத் தருபவர் ருத்ரன்.

இந்த மும்மூர்த்திகளையும் அந்த சதாசிவன் சார்பாக நிர்வாகித்து வருபவரே ஸ்ரீகாலபைரவப் பெருமான். ஸ்ரீகால பைரவப் பெருமானின் உயர்ந்த அவதாரமே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்!!!

நமது மூளையில் இருக்கும் ரத்த சிகப்பணுக்களை இயக்குபவர் சூரியபகவானே! ஒவ்வொரு ஜாதகருக்கும் ஆத்மாக்காரகனாக இருந்து நமது ஆத்மாவை இயக்கி வருபவர் சூரியபகவான்; அப்பேர்ப்பட்ட சூரியனுக்குள் இருந்து அருள்பாலித்து வருபவள் ஸ்ரீகாயத்ரிதேவி; ஆனால்,சூரியனின் பிராண தேவதையாக இருப்பவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்! அனைத்து குலதெய்வங்களுக்கு அருளாற்றலை நொடி தோறும் வழங்கிக் கொண்டிருப்பவரும் இவரே!பழங்காலத்தில் சேர,சோழ,பாண்டிய மன்னர்களும் மற்றும் ஏராளமான குறுநில மன்னர்களும் தமது பொக்கிஷ அறையில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை ஸ்தாபித்து,வழிபட்டு வந்துள்ளனர்;இந்த வழிபாடு அவ்வளவு ரகசியமாக செய்து, வளமோடும், வலிமையோடும், சகல சம்பத்துக்களோடும் வாழ்ந்து வந்துள்ளனர்;

இந்த வழிபாட்டைப் பின்பற்றுபவர்கள் ஒரு போதும் அசைவம் சாப்பிடக்கூடாது; ஆண்கள் எனில், மதுப்பழக்கம் அறவே இருக்கக்கூடாது; எவ்வளவுக்கெவ்வளவு ரகசியமாக இந்த வழிபாட்டைச் செய்து வருகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு விரைவான பலன்கள் நமக்குக் கிட்டும்;

எவ்வளவு ரகசியமாக இந்த வழிபாட்டை செய்கிறோமோ, அவ்வளவு விரைவாக நமது பொருளாதார நெருக்கடிகள் விலகும்; கடன்கள் தீரும்; அரசு வேலை கிடைக்கும்; நிறுவனம் வளர்ச்சியடையும்; வராக்கடன் வசூலாகும்; ஆரோக்கியம் மேம்படும்; தெரியாத குலதெய்வத்தை அறிந்து கொள்வீர்கள்; கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும்; பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவர்; அவ்வாறு ஒன்று சேர்ந்தப் பின்னர் ஒருபோதும் அவர்களிடையே மனக்கசப்பு வராது; குழந்தைகளின் முரட்டுசுபாவம் படிப்படியாக மாறும்; சுருக்கமாகச் சொன்னால் நமது நியாயமான லட்சியங்கள்/கோரிக்கைகள் நிறைவேறும்; கடந்த மூன்று வருடங்களில் இந்த வழிபாட்டை உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் செய்து வருகின்றனர்; அவ்வாறு தொடர்ந்து வீட்டில் வழிபட்டதால், ஒவ்வொருவருக்குமே மேற்கூறிய பலன்களில் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பலன்கள் கிடைத்துள்ளன;கிடைத்து வருகின்றன;

18 வயது நிரம்பிய எவரும் இந்த வழிபாட்டை தினமும் பின்பற்றலாம்; தம்பதியர் ஒன்றாக தினமும் இந்த வழிபாட்டை தினமும் பின்பற்றி வந்தால் சற்றும் எதிர்பாராத அபரிதமான பலன்கள் கிட்டும்; சாதி,சமய வேறுபாடுகள் இன்றி பக்தி உணர்வு உள்ள எவரும் இந்த வழிபாட்டைப் பின்பற்றலாம்;

கையால் செய்யப்பட்ட வெல்லக்கட்டிகள் குறைந்தது இரண்டு; மஞ்சள் துண்டு, (வசதியுள்ளவர்கள் மஞ்சள் பட்டுத்துண்டு), மண் அகல்விளக்கு ஒன்று, சுத்தமான பசுநெய் குறைந்தது 250 மிலி, சந்தன வாசம் தரும் பத்தி பாக்கெட் பெரியது இரண்டு, அரைக்கப்பட்ட சந்தனம் குறைந்தது ரூ.10/-க்கு, எவர்சில்வர் கிண்ணம் ஒன்று, காகிதத்தில் செய்யப்பட்ட தட்டுக்கள் 100(கிராமப்பகுதியில் வசிப்பவர்கள்/வீட்டிற்குள்ளேயே வாழைத்தோட்டம் வைத்திருப்போர் வாழை இலையை தினமும் பயன்படுத்திக் கொள்ளலாம். (இவைகள் அனைத்தையும் மூன்று மாதத்திற்குத் தேவையான அளவுக்கு வாங்கி வைத்துக்கொள்வது உத்தமம்)

தினமும் காலை 4.30 மணி முதல் காலை 8 மணிக்குள் இந்த வழிபாட்டைச் செய்துவருவது உத்தமம். வீட்டின் பூஜையறையில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் போட்டோவை வடக்கு நோக்கி வைத்துக் கொள்ள வேண்டும்; அந்தப் படத்தின் அருகில் கிழக்கு நோக்கி ( ஒரு மஞ்சள் துண்டின் மீது-இந்த வழிபாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; ஒருபோதும் வேறு எந்த காரியத்திற்கும் இதைப்பயன்படுத்தக்கூடாது) அமர்ந்து கொள்ள வேண்டும்; செவ்வரளி மாலையை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவருக்கு அணிவிக்க வேண்டும்; (தினமும் முடியாவிட்டால் வெள்ளிக்கிழமை மட்டுமாவது). கிழக்கு நோக்கி மண்விளக்கில் நெய்தீபம் ஏற்ற வேண்டும்; சந்தனத்தை தண்ணீரில் குழைத்து ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரின் நெற்றியில் நமது மோதிர விரலால் வைக்க வேண்டும்; பிறகு அவரது பாதத்திலும், பிறகு ஸ்ரீஸ்ரீசொர்ணதாதேவியின் நெற்றி, சூலாயுதம், அமிர்தகலசம் போன்றவைகளில் வைக்க வேண்டும்; குங்குமம் வைக்கக் கூடாது; பிறகு,சந்தனப் பத்தியை பொருத்தி அவருக்குக் காட்ட வேண்டும்; பத்தி ஸ்டாண்டில் வைத்துவிட்டு, ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 108 போற்றி/1008 போற்றியை ஜபிக்க வேண்டும்.(வாய்விட்டுப் பாடக்கூடாது)

இவ்வாறு பாடுவதற்கு முன்பே, வீட்டில் சமையல் முடிந்திருந்தால், நாம் சாப்பிடுவதற்கு முன்பாக ஒரு கிண்ணத்தில் சாதத்தை வைக்க வேண்டும்; அத்துடன் கொஞ்சம் வெல்லத்தூளைச் சேர்க்க வேண்டும்; இந்த வெல்லத்தூள் சேர்த்த சாதக்கிண்ணத்தை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானின் படத்தின் முன்பாக வைக்க வேண்டும்; பல வீடுகளில் மேலே கூறியபடி வழிபாடு செய்யும் போது சமைத்திருக்க மாட்டார்கள்; எனவே,இந்த வழிபாடு முடித்துவிட்டு,எப்போது சமையல் நிறைவடைகிறதோ அப்போது மேலே கூறியவிதமாக படையலை வைக்க வேண்டும்.

இரவில் தூங்குவதற்கு முன்பு (வெள்ளிக்கிழமைகளில் திருஷ்டி சுற்றிப் போடுவதற்கு முன்பு)  படையலாக காலையில் வைத்த வெல்லம் கலந்த சாதத்தை கிண்ணத்தில் இருந்து இன்னொரு கிண்ணம் அல்லது காகிதத் தட்டில் கொட்டி, வீட்டிற்கு வெளியே ஓரமான இடத்தில் வைத்துவிட வேண்டும். பல நாட்கள்/வாரங்கள் கழித்து பைரவர் வந்து இந்தப் படையலைச் சாப்பிடுவதைக் காண்பீர்கள்; அதுவரை ஒவ்வொரு நாளும் நாம் வீட்டிற்கு வெளியே படையல் வைப்பதோடு நமது வழிபாடு நிறைவடைந்துவிடுகிறது.

இந்த வழிபாட்டுமுறையை செய்து வரும் நாட்களில் தீட்டு நிகழ்ச்சிகளில் (ஜனனம்,ருது,சிவனடி சேர்தல்) கலந்து கொண்டால் 30 நாட்களுக்கு இந்த வழிபாட்டுமுறைக்கு விடுமுறை விடுவது அவசியம்;

பல குடும்பங்களுக்கு ஒரே ஒரு அறைதான் வீடாகவே இருக்கிறது; அவர்கள் அந்த ஒரே ஒரு அறையில் இந்த வழிபாட்டைச் செய்யலாம்; பெரும்பாலும் இல்லத்தரசிகளே செய்வது நன்று;அவ்வாறு இல்லத்தரசிகள் வழிபாடு செய்து வரும் நாட்களில்,உடன் தமது மகளுக்குப் பயிற்றுவிப்பது நன்று; ஏனெனில், மாதத்தில் சில நாட்களில் தனக்குப் பதிலாக தமது மகளைக் கொண்டு (மாற்று ஆள்) வழிபாடு செய்து கொள்ளலாம்;

இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் போது, ஒவ்வொரு 180 நாட்களுக்கு ஒருமுறையும், நமது கடுமையான பொருளாதாரச் சிக்கல்கள் தீர்ந்துவிடும்; அல்லது நமது நியாயமான நீண்டகால ஏக்கங்கள் நிறைவேறத் துவங்கும்; குறைந்தது மூன்று ஆண்டுகள் வரையிலும்,அதிகபட்சம் நமது ஆயுள் முழுவதும் வீட்டில் இந்த வழிபாட்டைச் செய்து வர சகல சம்பத்துக்களும் நம்மைத் தேடி வரும்; அவ்வாறு வரும் சம்பத்துக்கள் மூன்று தலைமுறை வரை நிலைத்து நிற்கும்;

தொலைதூர மாநிலங்கள், அயல்நாடுகளில் வசிப்பவர்கள் மேலே கூறிய பொருட்களில் ஏதாவது ஒருசில பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுவர்; அவர்கள் நெய்தீபம் ஏற்றிவிட்டு, ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 108 போற்றி/1008 போற்றி/சொர்ணபைரவ அஷ்டகம் இவைகளில் ஏதாவது ஒன்றை மட்டும் தினமும் பாடிவருவது போதுமானது.

ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவருக்கு அணிவிக்கப்படும் செவ்வரளி மாலையை 24 மணி நேரத்திற்குள் எடுத்துவிடவேண்டும்; காய்ந்த பூக்கள் ஒருபோதும் அவரது படத்தின் மீது இருக்கக் கூடாது;இவருக்கு ஒருபோதும் மல்லிகைப் பூக்கள் அணிவிக்கக்கூடாது. கோவிலில் வழிபட ஏற்றவர் ஸ்ரீகாலபைரவர்;வீட்டில் வழிபட உகந்தவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்!!!

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

               - கொல்லிமலை சித்தர் தர்மலிங்க ஸ்வாமிகள் எழுதிய பைரவ ரகசியம் நூலில் இருந்து....

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...