மார்கண்டேயனுக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாயிற்று


சிரஞ்சீவிகளில் மிகவும் பிரபலம் நமது மார்கண்டேயன். பின்னே இவனை காப்பாற்ற வேண்டி தானே சிவபெருமான் காலனையே காலால் உதைத்தார்?

எமனுக்கு பயந்து 16 வயதே நிரம்பிய இந்த பாலகன் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்ததும், பின்னர் சிவபெருமான் பிரத்யட்சமாகி காலனை காலால் உதைத்து இவனை காத்தருளியதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

மார்கண்டேயனுக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாயிற்று என்று தெரியுமா? இதன் பின்னணியில் நமக்கெல்லாம் மிகப் பெரிய செய்தி அடங்கியிருக்கிறது.

மார்கண்டேயனுக்கு 16 ஆவது வயதில் மரணம் சம்பவிக்கும் என்றும் அவனுக்கு அல்பாயுசு தான் என்றும் அவன் தந்தையான மிருகண்ட மகரிஷிக்கும் தெரியும்.

ஆகையால் மகனை காக்க விரும்பிய மிருகண்ட முனிவர், அவனுக்கு சீக்கிரம் உபநயனம் செய்வித்த பின்னர், “பெரியோர்கள் எவரை சந்தித்தாலும் தயங்காது அவர்கள் காலில் விழுந்து நமஸ்கரித்து அவர்களது ஆசிகளை பெற்று வருவாயாக” என்று பணித்தார்.

மார்கண்டேயனும் அதே போல தான் பார்க்கும் பெரியவர்கள் காலில் விழுந்து விழுந்து ஆசி பெற்று வந்தான்.

சப்த ரிஷிகள் ஒருமுறை மிருகண்ட முனிவரின் ஆஸ்ரமத்திற்கு வந்தபோது, மார்கண்டேயன் இவ்வாறு அவர்களிடம் வீழ்ந்து ஆசி பெற, அவர்களும், “தீர்க்கா யுஷ்மான் பவ” என்று வாழ்த்திவிட்டார்கள்.

பிறகு தான் தெரிந்துகொள்கிறார்கள் அவனுக்கு 16 வது வயதில் மரணம் சம்பவிக்கும் என்று. என்றும் சத்தியத்தையே பேசும் சப்தரிஷிகளின் வாக்கு பொய்க்குமா?

இருப்பினும் இந்தப் பிரச்னையை பிரம்மாவிடம் கொண்டு செல்கிறார்கள். அவரிடமும் விழுந்து ஆசி பெறுகிறான் மார்கண்டேயன். அவரும் அதே போல ஆசி வழங்கிவிடுகிறார்.

இப்படி பார்க்கும் பெரிவர்கள் எல்லாம் அவனுக்கு ஆசி வழங்கவே அவர்கள் ஆசி அனைத்தும் சேர்ந்து அவனது தலையெழுத்தையே மாற்றிவிடுகிறது.

பெரியவர்களின் ஆசியை நிறைவேற்றுவது பரம்பொருளின் கடமையல்லவா? ஆகவே தான் சிவபெருமான் தோன்றி மார்கண்டேயனை காத்ததோடு மட்டுமல்லாமல் அவன் என்றும் 16 அதாவது சிரஞ்சீவியாக இருப்பான் என்று வரமும் தருகிறார்.

பெரியோர்களை விழுந்து வணங்குவது என்பது நமது பாரம்பரியங்களில் ஒன்று. பகவான் கிருஷ்ணர் தம்மினும் பெரியோர்களை கண்டால் தவறாது விழுந்து வணங்குவார்.

எனவே வயதிலும் தகுதியிலும் சிறந்து விளங்கும் பெரியோர்களை கண்டால் அவர்களை விழுந்து வணங்கி அவர்களது ஆசியை பெறவேண்டும். அது உங்களை காக்கும் அரண் மட்டுமல்ல… உங்களது தலையெழுத்தையே மாற்றவல்லது.

அதே சமயம் ஆதாயத்துக்காக தகுதியற்றவர்களின் கால்களில் விழாதீர்கள். அப்படி செய்தால் அவர்களின் பாபங்களையும் நீங்கள் சேர்த்து சுமக்க வேண்டியிருக்கும்.

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...