ஶ்ரீ_ஶேஷாத்ரி_ஸ்வாமிகள்

#ஶ்ரீ_ஶேஷாத்ரி_ஸ்வாமிகள்



ஏதாவது துணிக்கடைக்குள் சென்றால், அந்த கடைக்காரர் அவருடைய அழுக்கு வஸ்த்ரத்தை அவிழ்த்து, புது வேஷ்டியை கட்டிவிடுவார்.

பால, உன்மத்த அவஸ்தையில் இருந்த ஸ்வாமிகள் வெளியே வந்ததும், புது வேஷ்டியை தாறுமாறாக கிழித்து,  நீள நீளமாக அதை முடிச்சுப்போட்டு, ஏதாவது கன்னுக்குட்டியையோ, கழுதையையோ பிடித்து, அதன் வாலில் அந்த துணியை நீளமாக ரிப்பன் போல் கட்டி விடுவார்.  அவைகள் துள்ளிக்கொண்டு ஓடுவதைப் பார்த்து கை கொட்டி சிரித்துக் கொண்டே ஓடிவிடுவார்.

பகவானின் ஹஸ்த, வஸ்த்ர தீக்ஷை பெற்ற பாக்யஶாலி மிருகங்கள்!

அல்லது மறுநாளே அந்த புது வேஷ்டியை சாணாசுருணை போலாக்கி கட்டிக்கொண்டிருப்பார்.

யாராவது அவருடைய சடை விழுந்த தாடி மீசையை மழித்து விடுவதற்காக அழைத்து கொண்டு போய் அவரை உட்கார வைத்து சவரம் செய்ய ஆரம்பிப்பார்கள். பாதி சவரம் செய்து கொண்டிருக்கும் போதே, மழிக்காத பாதி முகத்துடன் அப்படியே எழுந்து ஓடிவிடுவார்.

ஒரு நாள் கம்பத்து இளையனார் ஸன்னதியில் ஸ்வாமிகள் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு முதுகு கூனிய ஒரு பாட்டியம்மா வந்து ஸ்வாமிகளை நமஸ்காரம் செய்தாள்.

அடுத்த க்ஷணம் ஸ்வாமிகள் அவளுக்கு தன் ஹஸ்ததீக்ஷையால் அருளிய பரமானுக்ரஹம், அங்கிருந்தோரை கதிகலங்க அடித்தது!

அந்த பாட்டியின் கால்களை அப்படியே பிடித்து தூக்கி, அவளை அங்கிருந்த தூணில் மடேல் மடேலென்று அடித்து சாத்திவிட்டார்! சுற்றியிருந்தவர்கள் பாட்டியின் அந்திமகால ஶிவபதத்தை எதிர்பார்த்தும், அடி கொள்ளும் பாக்யத்தை பார்த்தும் பயந்து போனார்கள்.

ஆனால் பாட்டியோ, “எனக்கு புத்தி வந்தது! எனக்கு புத்தி வந்தது! போய்டறேன்! போய்டறேன்!” என்று சொல்லிக் கொண்டே சென்றுவிட்டாள்.

எது வந்ததோ? எது போனதோ? ஸ்வாமிகளுக்குத்தான் தெரியும்.

ஒருமுறை ரோடில் நடந்து போய்க் கொண்டிருந்த ஸ்வாமிகள் திடீரென்று ஆகாஶத்தை பார்த்து, “விட்டோபா போறார்! விட்டோபா போறார்!”… என்று கத்தினார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

இரண்டு மணிநேரம் கழித்து யார் மூலமாகவோ செய்தி வந்தது....

“போளூரில் ஒரு ஸாதாரண தையல்காரராக வெளியுலகத்துக்கு தெரிந்து கொண்டிருந்த  ஸ்வாமி விட்டோபா என்ற மஹான் ஸமாதியடைந்துவிட்டார்..”

சடைச்சி என்ற ஒரு ஆச்சியின் விட்டுத் திண்ணையில்தான் ஸ்வாமிகள் அடிக்கடி காணப்படுவார். அதுமட்டுமில்லாமல், அந்த ஆச்சியின் சொல்லுக்கு மட்டும்தான் கட்டுப்படவும் செய்வார். ஆச்சி ஒரு அதட்டல் போட்டதும், உடனேயே அடங்கிவிடுவார். பல சமயங்களில் அதட்டி அதட்டியே ஸ்வாமிகளுக்கு வாயில் சாப்பாட்டை ஊட்டி விடுவாள்.

ஸாக்ஷாத் காமாக்ஷியின் அம்ஸமான ஸ்வாமிகளுக்கே தாயாராகி, அதட்டி உருட்டி அன்னத்தை ஊட்டிவிட அவதரித்தவள் ‘பெரிய தாயார்தானே!”

ஆச்சியும், இதர பக்தர்களும் அன்போடு சமைத்துக் கொண்டு வந்து தரும் குழம்பு, காய்கறி, கூட்டு, சாதம், இதர பக்ஷணங்கள் எல்லாமே அந்த திண்ணையின் ஒரு ஓரத்தில் பல நாட்களுக்கு வைக்கப்பட்டிருக்கும்!! ஸ்வாமிகளுக்கு சாப்பாடு வேண்டாம் என்றால் வேண்டாம்தான்! பல நாட்களுக்கு சாப்பிடவே மாட்டார்.

திடீரென்று ஒருநாள் அந்த பாத்திரங்களிலிருந்து எல்லாவற்றையும் எடுத்து மிகவும் ரஸித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார். ஆனால் சுத்தி முத்தி ஒருவராலும் அங்கே நிற்க முடியாதபடி, ஊசிப்போன குழம்பு, கூட்டு மற்ற பதார்த்தங்களிலிருந்து துர்நாற்றம் மூச்சு விட முடியாமல், நெடி அடிக்கும்.

அருணாசலம் என்ற பக்தருடைய தகப்பனாரும் ஸ்வாமிகளிடம் மிகவும் பக்தி பூண்டவர். ஒரு நாள் ஸ்வாமிகள் இவர் வீட்டுக்கு வந்தார்.

ஸ்வாமிகளிடம் தங்கள் இல்லத்தில் அவர் அமுது கொள்ள வேண்டும் என்று ப்ரார்த்தனை செய்ததும், உடனேயே ஸரி என்று ஒத்துக் கொண்டார். இலையின் முன் ஸ்வாமிகள் அமர்ந்ததும், காய், கூட்டு, சாதம், சாம்பார் எல்லாம் பரிமாறினார்கள். அத்தனையையும் சேர்த்து ஒன்றாக உருட்டி, மூன்று கவளங்களாக பண்ணினார்.  ஸ்வாமிகள் எப்போதுமே இப்படித்தான் எல்லாவற்றையும் கலந்துதான் உட்கொள்வார்.

அன்றும் அதே போல் உருட்டி, தான் சாப்பிடாமல், ஒவ்வொரு கவளத்தையும் மூன்று திசைகளிலும் விட்டெறிந்தார்.

“ஏன் ஸ்வாமி ? சாப்பிடலையா?”

“இந்த பக்கம் தேவர்கள்ளாம் நிக்கறா! அந்தப்பக்கம் பூதகணங்கள்ளாம் நிக்கறது! இந்த பக்கம் பஶு பக்ஷி மிருகங்கள்ளாம் நிக்கறது! அவாள்ளாம் சாப்ட வேணாமா?... அவாளுக்கெல்லாம் பசிக்காதா?...”

என்று சொல்லிக் கொண்டே, தேவயஜ்ஞம், பூதயஜ்ஞம் இரண்டையும் அனாயாஸமாக செய்துவிட்டு, கையை வேஷ்டியில் துடைத்து கொண்டு சென்றுவிடுவார்.

அருணாசலத்துக்கு திருமணமான போது, ஸ்வாமிகள் நேரில் வந்து ஆஶீர்வதித்தார்.
ஸ்வாமிகளின் திவ்ய தோற்றத்தை விவரிக்கும் போது, “ஸ்வாமிகள் ஜாஸ்தி உயரமுமில்லை; குள்ளமும் இல்லை.... நல்ல சிவப்பாக இருப்பார்.... குழந்தை மாதிரி இருப்பார்; குழந்தை மாதிரிதான் பேசுவார்! ஒரே விஷயத்தையே திரும்ப திரும்ப பத்து தடவை சொல்லுவார். மழிக்காத முகம், தலைமுடியில் ஜடை பிடிச்சு, அழுக்கு வேஷ்டியோட இருந்தாலும் கூட, அவரோட கண்கள் ரெண்டும் நக்ஷத்ரம் மாதிரி மின்னும்” என்றார்.

ஒருமுறை இவருடைய அப்பாவுக்கு உடல் நிலை மிகவும் மோசமானதும், ஸ்வாமிகளை தேடிக் கொண்டு ஓடினார். அப்போது எதிர்ப்பட்ட ஸ்வாமிகள், யாரோ தந்த இரண்டு வாழைப்பழங்களை அருணாசலத்தின் மேல் விட்டெறிந்து, “ போ! போ! எடுத்துண்டு போ!” என்று கூறினார். அந்தப் பழங்களை கொண்டு வந்து, ப்ரஸாதமாக தந்தைக்கு குடுத்ததும், ஆஶ்சர்யமாக அவர் உடல் நிலை நன்கு தேர்ச்சி பெற்றது.

நம்முடைய கஷ்டகாலத்துக்கு நம்முடைய ஜன்மாந்த்ர கர்மபலன்கள் மட்டுமே காரணம். யாருமே கர்மபலனிலிருந்து தப்பிக்கவே முடியாது.

அப்படி கர்மபலனால் கஷ்டப்படுபவர்களை வேண்டுமானால் இரண்டு விதமாக பிரிக்கலாம்.

ஒன்று, முடிவு ஸாதகமோ, பாதகமோ எப்படியானாலும், தங்கள் இஷ்ட தெய்வத்திடமோ, அல்லது தங்கள் குருநாதரிடமோ,  அணுவளவு கூட ஸந்தேஹமில்லாத, த்ருட நம்பிக்கை கொண்டவர்கள்;

இரண்டு, ஸாதரணமாக லோகாயதமாக மட்டுமே எண்ணத் தெரிந்தவர்கள்; அல்லது பகவான், குருநாதன் மேல் அப்படியொரு த்ருட நம்பிக்கை இல்லாதவர்கள்;

உலகத்தின் பார்வையில், இரண்டு பேருமே கஷ்டப்படத்தான் செய்வார்கள்; ஆனால், முதல் வகையினரின் மனங்களை, அவர்களுடைய இஷ்ட தெய்வமோ, குருநாதரோ மட்டுமே ஆக்ரமித்து கொண்டிருப்பதால், எந்த கஷ்டத்தையும் அனாயாஸமாக ஶாந்தமாக தாங்கிவிடுவார்கள். ஏனென்றால், எந்த பாரமும் இவர்களுடையது இல்லையே? தாங்குபவன், அந்த அனந்தனன்றோ?

இரண்டாம் வகையினர், தங்களை தாங்களே ஸதா நொந்து கொண்டும், எல்லாரையும் நிந்தித்து கொண்டும், இருப்பது போறாதென்று, மேலும் மேலும் கர்மமூட்டையை சேர்த்து கொண்டிருப்பவர்கள்.

இவர்களிலும், குருவின் மேல் நம்பிக்கை கொஞ்சம் இருந்தாலும், அவ்யாஜ கருணாமூர்த்தியான குருநாதன் இவர்களை கட்டாயம் வழி நடத்தி செல்வார்.

ஏனென்றால் க்ருபாவர்ஷம் என்பது, தெய்வத்தை விட, ஸத்குருநாதன் எனும் கரு கரு காளமேகத்தின் ஸ்வகுணம். அவர் குணாதீதனாக இருந்தாலும், இந்த க்ருபாவர்ஷத்தை மட்டும்.... வேதம் போல், நாமம் போல் அவரிடமிருந்து பிரிக்கவே முடியாது.

அப்படித்தான், இந்த அருணாசலம் என்பவரின் வாழ்வில் இடி மேல் இடியாக, மனைவியும் காலகதியாகி, ஒரு விபத்தில் இவரும் தன் காலை இழந்து, திருமணமான பையன்களும், அவர்களின் மனைவிகளும் இவரை ஒரு பாரமாகவே நினைத்து ஒதுக்கிய ஸமயம், “நான் இருக்கும் போது, உனக்கு யார் வேண்டும்?” என்று அவருடைய கனவிலேயே ஒடி வந்துவிட்டார் ஶ்ரீ ஶேஷாத்ரி ஸ்வாமிகள்.

அவருடைய தோள் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு, “நம;ஶிவாய” என்ற பஞ்சாக்ஷரத்தை உபதேஸித்து, திருவண்ணாமலைக்கு வரும்படி உத்தரவிட்டார்.

ஸ்வாமிகளின் அதிஷ்டானத்துக்கு வந்து சேர்ந்த அருணாசலத்தை, “வாப்பா! அருணாசலம்” என்று யாரோ முன்-பின் தெரியாத ஒருவர் வரவேற்று, உள்ளே அழைத்து சென்றார். அங்கே ஏற்கனவே இவருடைய வரவை எதிர்பார்த்தது போல் சிலர் இருந்தனர்.

அப்போதிலிருந்து ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தில் கைங்கர்யம் பண்ணும் பரம பாக்யத்தை பெற்றார் அருணாசலம்.

திருவண்ணாமலை கோவில் சின்ன குருக்கள் ஒருவருடைய வீட்டிலும் ஸ்வாமிகள் வாஸம் செய்ததுண்டு.  அவர்கள் வீட்டு திண்ணையில்தான் ஸ்வாமிகள் தன் திவ்ய ஶரீரத்தை உகுத்தார்.

கோவிலில் கம்பத்து இளையனார் ஸன்னிதி, சின்ன குருக்கள் வீட்டுத்திண்ணை, சடைச்சி ஆச்சி வீட்டுத்திண்ணை இந்த மூன்று இடங்களிலும் எப்போதுமே அவருக்கு ஒரு படுக்கை போடப்பட்டிருக்கும். எப்போது வேண்டுமானாலும், இங்கெல்லாம் வந்து படுத்துக் கொள்வார்.

குருக்களின் நாட்டுப்பெண் சொன்னது.....

பல முறை, சமையலறைக்குள் ஸ்வாமிகள் வந்து, யாரையும் கேட்காமல், எல்லா பதார்த்தங்களையும் எடுத்து வாயில் போட்டுக்கொள்வார்.

ஒரு நாள் குருக்களுக்காக காபி போட்டு வைத்திருந்த போது, ஸ்வாமிகள் உள்ளே வந்து அந்த காபியை குடித்துவிட்டு, அழகான புன்னகையுடன், “ அவன் வந்தா.... நான் குடிச்சுட்டேன்னு சொல்லு” என்றார்.

அவதாரபுருஷர்கள் தங்கள் ஶரீரத்தை உகுக்கும் நேரத்தை தாங்களே தீர்மானித்துக் கொள்வார்கள். உடல் உபாதை என்பது, உலகோரின் பார்வைக்கு, ஒரு காரணம் மட்டுமே!

ஸ்வாமிகளின் பக்தர்கள் சிலருக்கு, தங்கள் ஸ்வாமியை நன்றாக அலங்காரம் செய்து, ஒரு போட்டோ எடுத்து பார்க்கவேண்டும் என்ற ஆசை, இப்படித்தான் ஒரு காரணபூதமாக எழுந்தது.

எத்தனைதான் மஹான்களுடன் கூடவே இருந்தாலும், அவர்களை புரிந்து கொள்வதோ, புரிந்து கொண்டிருப்பதாக எண்ணுவதோ, அவர்கள் ஏதாவது சொல்லும்போது அதற்கு கீழ்படியாமல், “அவர் அப்படித்தான் சொல்லுவார்; நாம் நமக்கு தோன்றியதை செய்வோம்” என்று எண்ணி எதிர்மறையாக செய்வதோ, தவறாகும்.

இந்த ப்ரபஞ்சத்தையே, க்ஷணத்துக்கும் குறைவான நேரத்தில் ஸ்ருஷ்டித்து, பரிபாலனம் செய்து, லயமாக்கிக் கொள்ளும் மாபெரும் ஶக்தியை, வியந்து போற்றி, ஆனந்தமாக அனுபவிக்கும் பாக்யத்தை எண்ணியெண்ணி ஆனந்தப்படலாமே தவிர, அத்தனை ஸுலபத்தில், தன்னை அது புரியவைத்து விடுமா என்ன?

பாவம், அவரை வரிந்து இழுத்து வைத்து தலைமுடி, தாடி, மீசையை மழித்து பட்டாபிஷேகம் செய்வித்தார்கள்.

வபனம் செய்து கொண்டால், குளிக்க வேண்டுமே!

“எனக்கு வேண்டாம்! குளிர் காய்ச்சல் வந்துடும்!” என்று அவர் எச்சரித்ததை யாருமே பொருட்படுத்தாமல், அவரை வலுக்கட்டாயமாக குருக்கள் வீட்டு திண்ணையில் அமர வைத்து, கோவில் குளத்திலிருந்து  குடம் குடமாக ஜலம் கொண்டு வந்து, அத்தனை பேரும் ஸ்வாமிகள் தலையில் கொட்டித் தீர்த்தார்கள்.

அப்படியே அசையாத அருணமலை போல் அமர்ந்திருந்தார் ஸ்வாமிகள். புது வேஷ்டி கட்டிவிட்டு, பட்டை பட்டையாக விபூதி பூசி, ருத்ராக்ஷ மாலை அணிவித்து, குருக்கள் வீட்டுக்குள் இருந்த ஒரு நாற்காலியில் அவரை உட்கார வைத்து ஒரு போட்டோவும் எடுத்தார்கள்.

ஒவ்வொருவரும் தங்கள் ஜன்மம் கடைத்தேறியதாய் ஸந்தோஷப்பட்டார்கள்.

ஆனால், ஸ்வாமிகள் சொன்னபடியே மறுநாளே அவருக்கு கடுமையான குளிர்ஜ்வரம் கண்டது. அதற்காக கவலையின்றி, அவர் பாட்டுக்கு எப்போதும் போல் திருவண்ணாமலை தெருக்களில் அலைந்தவண்ணம் இருந்தார்.

குளிர் ஜ்வரம் மிகவும் அதிகமானதும் குருக்கள் வீட்டு திண்ணையிலேயே முடங்கி கிடந்தார்.

1929 ஜனவரி 4-ம் தேதி, அன்னை காமாக்ஷியின் அவதாரமான ஶ்ரீ ஶேஷாத்ரி ஸ்வாமிகள், ஜோதிமயமான அருணாசலேஶ்வரனில் ஒன்றினார். அவருடைய புனித ஶரீரம் ஒளிமிகுந்து காணப்பட்டது.

பகவான் ரமண மஹரிஷியே நேரில் வந்திருந்து, ஒருமணி நேரத்துக்கும் மேலாக மௌன அஞ்சலி செலுத்தியதோடு, ஸ்வாமிகளின் திவ்ய ஶரீரத்தை அதிஷ்டானத்தில் கோவில் கொள்ள வைப்பது வரை அத்தனையுமே பகவான் கூடவே இருந்து, தன் மேற்பார்வையில்தான்  நடத்திவைத்தார்.

அவதாரபுருஷர்கள் அனைவருமே வாழும் முறையில் வேறுபட்டாலும், தங்கள் தூய அன்பையே அமுதாக, அன்னமாக, நமக்குள் செலுத்தி நம்மை ஆட்கொண்டுவிடுகிறார்கள். ஸமயத்தில் அந்த அன்பையே ஆயுதமாகவும் ஆக்கி நம்முள் செலுத்தி, நம் அஹங்காரத்தை வேரோடு வெட்டி சாய்த்தும், நம்மை ஆட்கொள்கிறார்கள்.

அப்பேர்ப்பட்ட மஹாபுருஷர்களின் ப்ரபாவத்தை நாம் புரிந்து கொள்வதை விட, துளியாவது தூய அன்பை அவர்கள் திருவடியில் செலுத்தினாலே போதும். ஏனென்றால் களங்கமில்லா அன்பால் மட்டுமே, அந்த அன்பு ஸ்வரூபத்தை அடைய முடியும்.


No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...