நம் தமிழகத்திலிருந்து, ஒரு குடும்பம், காசிக்குச் சென்று, ஏதோ ஒரு காரணத்தால் அங்கேயே தங்க நேரிடுகிறது. அது. அந்தண குலம் என்பதால், வேதம் ஓதுவதும், குழந்தைகளுக்கு வித்தை போதிப்பதுமாக அந்தக் குடும்பத் தலைவர் இருக்கிறார். கால ஓட்டத்தில், அந்தக் குடும்பத் தலைவி இறந்து விடுகிறார். தன் ஒரே மகளை செல்லமாக வளர்ப்பதோடு, நிறைய சாஸ்திரங்களையும் அப்பெண்ணுக்கு தந்தையானவர் கற்றுத் தருகிறார். மகளும் வளர்கிறாள். மகள் வளர, வளர, தந்தைக்கு ஒரு கவலை. ”நாமோ ஒரு எளிய வாழ்க்கை வாழ்கிறோம். இவளுக்கு ஒரு திருமணத்தை செய்து விட்டால், நிம்மதியாக இருக்கலாமே!” என்று. ஆனால் மகளோ, பிடிவாதமாக
“அப்பா! நான் இறை சேவைக்கே என்னை அர்ப்பணிக்கப் போகிறேன். எனக்குத் திருமணம் வேண்டாம்”என்று உறுதிபட கூறிவிட, அக்கம், பக்கம் உள்ளவர்களும், அறிந்தவர்களும் கூட "அம்மா! நீ பெண். தனியாக வாழ இயலாது. ஒரு ஆணைத் திருமணம் செய்துதான் ஆக வேண்டும்” என்று எத்தனையோ அறிவுரைகள் கூறினாலும்”காசி விஸ்வநாதர் மீது ஆணை! என்னை தொந்தரவு செய்யாதீர்கள்”என்று கூறி ஒதுங்கி விடுகிறாள். தந்தையும் எவ்வளவோ சொல்லிப் பார்த்து, பிறகு, வேறு வழியில்லை என்பதால், தன்னிடம் இருக்கக்கூடிய நில, புலன்களை எல்லாம் விற்று, ”அம்மா! ஒரு வேளை நான் இறந்து போய்விட்டாலும், இந்த செல்வத்தைக் கொண்டு, பிறரை நாடாமல், கையேந்தாமல் வாழ்ந்து கொள்” என்று ஏற்பாடு செய்து, ஒரு பெரிய இல்லத்தையும் வாங்கித் தந்து விட்டு, சில காலங்களில் இறந்தும் விடுகிறார். “தந்தை எனக்கு சில விஷயங்களை போதித்தார்! அவற்றை செயல்படுத்தினால் என்ன?” என்று மகளுக்கு ஒரு ஆசை. எனவே, பல ஊர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு இலவசமாக, தன் இல்லத்திலே தங்க இடம் தருவதும், உணவு தருவதும் என்று ஒரு அறப் பணியைத் துவங்க, காலம் செல்லச் செல்ல “இப்படிப்பட்ட அறப்பணிகளை ஒரு பெண் செய்கிறார்”என்று அறிந்து பலர், மருத்துவ உதவி, கல்வி உதவி வேண்டும் என்று கேட்க, இவளும் செய்து கொண்டே வருகிறாள்.
இறைவனின் திருவுள்ளம்,இந்தப்
பெண்ணை, சோதிக்க எண்ணியது.அந்தக் காசி மாநகரம் முழுவதும், இவள் புகழ் பரவத் தொடங்கியது. அனைத்து செல்வங்களையும் தந்து, தந்து, ஒரு கட்டத்தில், வறுமை இவளை சூழ்ந்து கொண்டது. இப்பொழுதும் பலரும் வந்து உதவிகள் கேட்க, வேறு வழியில்லாமல், அக்கம், பக்கம் உள்ளவர்களிடம் சிறு தொகைகளை கடன் வாங்கி தர்மம் செய்யத் துவங்குகிறாள். ஒரு கட்டத்திலே, அவர்களும் இவளுக்குக் கடன் தர மறுத்து விடுகிறார்கள். அது மட்டும் அல்லாமல், ”முன்னர் நாங்கள் அளித்த கடன்களைக் கொடு”என்று கேட்கவும் துவங்கி விடுகிறார்கள். இரவில் படுத்தால், இவளுக்கு உறக்கம் வரவில்லை. சிறு பெண் என்பதால், அச்சமும் ஆட்கொண்டுவிட்டது. இந்த வேதனையோடு காசி விஸ்வநாதரை வணங்கி “எந்த ஜென்மத்தில் நான் செய்த பாவமோ, இப்படிக் கடனாக என்னை இடர்படுத்துகிறது. இறைவா! நான் செய்தது சரியோ? தவறோ? தெரியவில்லை. ஆனால் தர்மம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடு நான் இருந்ததால், என் சக்திக்கு மீறி தர்மம் செய்து விட்டேன். ஊரைச் சுற்றி கடன் வாங்கி விட்டேன். எல்லோரும்,கடனை, திரும்பக் கேட்கிறார்கள். என்னால் கொடுக்க முடியவில்லை. அவர்கள் கேட்பது தவறு என்று நான் கூறவில்லை. அந்த கடன்களை திருப்பிக் கொடுக்கும் சக்தியை கொடு என்றுதான் கேட்கிறேன்”என்று மனம் உருகி, இறைவனை வணங்கி வேண்டுகிறாள். ஒரு நாள்,ஒரு பழுத்த மகான், இவளைத் தேடி வருகிறார்.
”மகளே! கவலையை விடு. இந்தக் காசி மாநகரத்திலே, மிகப் பெரிய தனவான் ஒருவர் இருக்கிறார்.அவரைச் சென்று பார். உனக்கு உதவி கிடைக்கும்” என்று அந்த மகான் கூறுகிறார். “எனக்கு அவரை அறிமுகம் இல்லை. நான் சென்று கேட்டால் தருவாரா? அல்லது மறுத்து விடுவாரா?” என்ற அச்சம் இவளுக்கு ஏற்படுகிறது. என்றாலும், துறவி கூறியதால், அன்று மாலை அந்த தனவான் இல்லத்திற்குச் செல்கிறாள். அந்த செல்வந்தன் இந்தப் பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் நேரில் பார்த்தது இல்லை. இருந்தாலும் கூட, மிகப் பெரிய ஞான நிலையில் இருப்பவள் என்று கேள்விப்பட்டதால், அவளை உள்ளே அழைத்து அமர வைக்கிறார். அவரைச் சுற்றி ஊர்ப்பெரியவர்கள் பலர் அமர்ந்திருக்கும் நிலையிலே”பெண்ணே! உனக்கு என்ன வேண்டும்?. எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறாய்?” என்று செல்வந்தன் கேட்க, இவள் தயங்கி, தயங்கி, தனக்கு ஏற்பட்டுள்ள கடன், மற்ற பிரச்சினைகளைப் பற்றிக் கூறி,அக்கால கணக்கின்படி “ஐந்து லக்ஷம் கடன் ஆகிவிட்டது. பலரிடம் கடன் வாங்கியதால், எல்லோரும் இடர் படுத்துகிறார்கள். எனவே, நீங்கள், ஐந்து லக்ஷம் தந்தால், காசி விஸ்வநாதர் சாட்சியாக எப்படியாவது சிறு,சிறு பணிகளை செய்து தங்களிடம் பட்ட கடனை அடைத்து விடுவேன். நீங்களோ, மிகப்பெரிய செல்வந்தர். ஒரு துறவி தான் என்னை இங்கு அனுப்பினார்.” என்று தயங்கி, தயங்கி கூறுகிறாள். அந்த செல்வந்தர் யோசிக்கிறார். ”இவள் மிகப் பெரிய புண்ணியவதி என்று தெரிகிறது. ஆனால் இப்பொழுது இவளிடம் எதுவும் இல்லை. ஐந்து லக்ஷம் கேட்கிறாள். சுற்றிலும் ஊர் பெரியவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். ”தர முடியாது” என்றால் இவள் மனம் வேதனைப்படும். நம்மைப் பற்றி ஊர் தவறாக நினைக்கும். எனவே நாகரீகமாக இதிலே இருந்து வெளியே வர வேண்டும்” என்று எண்ணி, அந்த செல்வந்தர் மிக சாமர்த்தியமாகப் பேசுகிறார்.
“பெண்ணே! நான் கூறுவதை நீ தவறாக எண்ணக்கூடாது. உன் தந்தை ஓரளவு செல்வத்தை உனக்கு சேர்த்து வைத்தார். நீ அந்த செல்வத்தை வைத்து நன்றாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு, ஆங்காங்கே ஏரிகளை அமைப்பதும், நீர்த்தடங்களை அமைப்பதும், கல்விச் சாலைகளை கட்டுவதும் ஆகிய தர்ம காரியங்களை செய்தாய். பாராட்டுகிறேன். ஆனால், உனக்கென்று கொஞ்சம் செல்வத்தை வைத்துக் கொள்ள வேண்டாமா? சரி. உன் செல்வத்தை தர்மம் செய்தாய். ஆனால் எந்த தைரியத்தில் கடன் வாங்கி, தர்மம் செய்தாய்? கடன் வாங்கும் முன் என்னைக் கேட்டாயா? சரி. நீ செய்தது எல்லாம் நியாயம் என்றாலும், இப்படி தர்மம் செய்த நீயே, நடு வீதிக்கு வந்து விட்டாய்.
எப்படி உன்னால், என்னிடம் வாங்கிய கடனை, திருப்பித் தர முடியும்? அடுத்ததாக, நான் கடன் கொடுத்தால், அதற்கு ஈடாக ஏதாவது ஒரு பொருள் வேண்டும். அதற்கு உன்னிடம் ஏதாவது இருக்கிறதா? உன்னிடம் எதுவுமில்லை என்று நீ கூறுகிறாய். எதை நம்பி, நீ கேட்கின்ற அந்த பெரிய தொகையை நான் தர முடியும்? அடமானம் வைக்க உன்னிடம் என்ன இருக்கிறது?” என்று அந்த செல்வந்தர் கேட்கிறார். இந்தப் பெண் இறைவனை எண்ணியபடி,
”அய்யா! நீங்கள் கூறுவது உண்மைதான். ஏதோ ஒரு ஆர்வத்தில் செய்து விட்டேன். அடமானம் வைக்க என்னிடம் எதுவுமில்லை. உங்களிடம் கோடி, கோடியாக செல்வம் இருக்கிறது என்று ஊர்மக்கள் சொல்கிறார்கள். அதில் ஒரு சிறு பகுதியைத்தான் கேட்கிறேன். காசி விஸ்வநாதர் மீது ஆணை. எப்படியாவது சிறுக, சிறுக கடனை அடைத்து விடுகிறேன். உதவி செய்யுங்கள்" என்று கேட்கிறாள்.“மன்னித்து விடு பெண்ணே! அடமானம் இல்லாமல், நான் எதுவும் தருவதற்கு இல்லை”என்று செல்வந்தர் கூற, அந்தப் பெண் சற்று யோசித்து விட்டு, ”அய்யா! உங்களுக்கே தெரியும். உங்கள் வாயாலேயே ஒப்புக் கொண்டுள்ளீர்கள். நானும், என் தந்தையும் ஆங்காங்கே, பல்வேறு அறச் செயல்கள் செய்திருக்கிறோம் என்று.
தங்களின் மாளிகை முன்பு இருக்கக்கூடிய ஊர் பொதுக்குளம் கூட, அடியேன் கட்டியதுதான். இந்த நீரை, தினமும், ஆயிரக்கணக்கான மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள். ஏன்? விலங்குகளும் இந்த நீரைப் பருகுகின்றன. இவையெல்லாம் புண்ணியம் என்று நீங்கள் அறிவீர்கள் அல்லவா?
என்றாலும், இந்த பொதுக் குளத்தை, எதையும் எண்ணி அடியேன் அமைக்கவில்லை. இருப்பினும், எனக்கு உடன்பாடில்லை என்றாலும், நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தத் திருக்குளத்திலே, நாளைக் காலை, சூரிய உதயத்தில் இருந்து, யாரெல்லாம் நீர் பருகிறார்களோ, அதனால் அடியேனுக்கு வரக்கூடிய புண்ணிய பலன் முழுவதையும் உங்களிடம் அடகு வைக்கிறேன்.
ஐந்து லக்ஷத்திற்கு உண்டான அசல், வட்டிக்கு சமமான புண்ணியம், எப்பொழுது உங்களிடம் வந்து சேருகிறதோ, அப்பொழுது அடியேன் தங்களிடம் பட்ட கடன் தீர்ந்ததாக வைத்துக் கொள்ளலாமா? அல்லது அதனையும் தாண்டி நான் தர வேண்டுமென்றாலும் தருகிறேன்”
என்று கேட்க, அந்த செல்வந்தர் சிரித்துக் கொண்டே, ”பெண்ணே! ஏதாவது ஒரு பொருளைத்தான் அடமானம் வைக்க முடியும். புண்ணிய,பாவங்களை அல்ல. ஒரு பேச்சுக்கு, நீ கூறியபடி, நீரைப் பருகுவதால் ஏற்படும் புண்ணியம், என் கணக்குக்கு வருவதாக வைத்துக் கொண்டாலும், புண்ணியம் அரூபமானது.
கண்ணுக்குத் தெரியாதது. உன் கணக்கில் இருந்து, புண்ணியம், என் கணக்கிற்கு வந்து விட்டது என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது?” என்று கேட்கிறார்.
“அய்யா! அது மிக சுலபம். கட்டாயம் நீங்கள் புரிந்து கொள்ளும்படியான ஒரு ஏற்பாட்டை செய்கிறேன். என்னுடன் வாருங்கள்என்று, அந்த செல்வந்தரின் வீட்டிற்கு எதிரில் உள்ள குளக்கரைக்கு அழைத்துச் செல்கிறாள்.அங்கே குளக்கரையிலே கருங்கல்லால் ஆன சிவலிங்கத்தைக் காட்டி,
”எம்பிரானே! அடியேன் செய்த அறக்காரியங்களை சொல்லிக்காட்டக் கூடாது. என்றாலும், கடனிலிருந்து தப்பிக்க, இந்த அபவாதத்தை செய்கிறேன். தேவரீர், இந்த திருக்குளத்தின் அடியில் இருக்க வேண்டும். எப்பொழுது, அடியேன் கணக்கில் இருந்து அசலும்,வட்டியுமான புண்ணியம், இந்த செல்வந்தரின் கணக்கிற்கு சென்று சேர்கிறதோ, அப்பொழுது நீங்கள் மேலே வந்து மிதக்க வேண்டும்என்று கூறி, பல முறை பஞ்சாக்ஷரம் கூறி வணங்கி, அடியாட்களின் துணை கொண்டு, அந்த சிவலிங்கத்தை கடினப்பட்டுத் தூக்கி, திருக்குளத்தின் நடுவே இடுகிறாள்.சிவலிங்கம் நீரின் அடியிலே சென்று அமர்ந்து விட்டது. பிறகு, அந்த செல்வந்தரைப் பார்த்து,
”அய்யா! நீரின் உள்ளே இருப்பது, வெறும் கல் என்று எண்ணாதீர்கள். சாக்ஷாத் சிவபெருமான்தான் உள்ளே இருக்கிறார். நாளைக் காலை, சூரிய உதயத்தில் ஆறு மணியில் இருந்து கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். யாரெல்லாம் நீரைப் பயன்படுத்துவார்களோ, எத்தனை காலம் ஆகுமோ? எனக்குத் தெரியாது. ஆனால், எப்பொழுது அடியேன் கணக்கில் இருந்து, தங்கள் கடன் தொகைக்கு சமமான புண்ணியம் வந்து சேருகிறதோ, அப்பொழுதே, இந்த சிவலிங்கம் மிதக்கும்”என்று கூறுகிறாள்.
செல்வந்தரோ நகைத்து, ”அம்மா! சற்று முன் நீ கூறியபடி புண்ணியத்தை அடகு வைப்பதைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால், கருங்கல் மிதக்கும் என்பது சாத்தியமில்லையே. இதை எப்படி நான் நம்புவது? யாராவது கேட்டால் கூட நகைப்பார்களே”.“இல்லை. நம்புங்கள். சிவபெருமான் மீது ஆணை. கட்டாயம் சிவலிங்கம் மிதக்கும். இதைக் கல் என்று பார்க்காதீர்கள். பகவான் என்று பாருங்கள்”என்று அந்தப் பெண் உறுதியாகக் கூறுகிறாள். செல்வந்தர் யோசிக்கிறார். ”இவளோ புண்ணியவதி. நம்மைச் சுற்றி ஊர் மக்கள் வேறு இருக்கிறார்கள். வாதம் செய்து, பணம் தர மாட்டேன் என்றால், நம் புகழுக்கு களங்கம் வந்துவிடும்.
மேலும், இவள் கேட்பது மிகச் சிறிய தொகை. அது மட்டுமல்லாது, இவள் கூறுவது மெய்யா? பொய்யா? என்பதை சோதிக்க நமக்கு இது நல்ல தருணம். ஒரு வேளை சிவலிங்கம் மிதந்தால், இவள் புண்ணியவதி என்பதை நானும், ஊரும் உணர வாய்ப்பு கிடைக்கும். மாறாக நடந்தால்,இவள் செய்வது வீண் வேலை என்பதை நிரூபிக்க ஏதுவாக இருக்கும்.” என்று எண்ணி, அவள் கேட்ட தொகையைத் தருகிறார். அதைப் பெற்றுக்கொண்டு வீடு சென்று யார், யாருக்கு தர வேண்டுமோ, அவற்றை எல்லாம் திருப்பி தந்து விட்டு “இறைவா! உன்னை நம்பித்தான், இந்த பெரும் தொகையை கடனாக வாங்கி இருக்கிறேன். என்னைக் கைவிட்டு விடாதே” என்று வேண்டிக் கொண்டு உறங்கச் செல்கிறாள்.
இங்கே செல்வந்தரோ, ”அவசரப்பட்டு விட்டோமோ? ஏமாந்து தனத்தைக் கொடுத்து விட்டோமோ?” என்று உறக்கம் வராமல், எப்பொழுது விடியும்? என்று பார்த்து, விடிந்ததும் சில வேலையாட்களை ஏற்பாடு செய்து,
”நீங்கள் குளக்கரையில் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு, கையில் ஒரு ஏடும், எழுத்தாணியும் வைத்துக் கொண்டு, ஒரு தினம் எத்தனை பேர் நீர் அருந்துகிறார்கள்? எத்தனை பேர் நீரை எடுத்துச் செல்கிறார்கள்? மறுகரையில் எத்தனை விலங்குகள் நீரைப் பருகுகின்றன?” என்று குறித்துக் கொண்டே வாருங்கள். எத்தனை காலம் ஆகும்? என்று தெரியவில்லை. ஆனால் தினமும் நீங்கள் கணக்கு எடுக்க வேண்டும்”
என்று ஏற்பாடு செய்து விட்டு, இவரும் வீட்டின் மேல்விதானத்தில் அமர்ந்து கொண்டு, குளக்கரையை பார்வையிடத் துவங்குகிறார். காலை மணி ஆறு ஆகிறது.காலை மணி ஆறு ஆகிறது.
காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான காளை ஒன்று, குளத்து நீரை அருந்தி விட்டு மேலே செல்கிறது. அவ்வளவுதான்.
குபுகுபுவென தூப, தீப, சாம்பிராணி, குங்கும சந்தன மணத்தோடு மேளத்தாளத்தோடு, உடுக்கை ஒலிக்க பகவான் (சிவலிங்கம்) மேலே வந்து மிதக்கிறார்.* அவ்வளவுதான். அந்த செல்வந்தருக்கு உடம்பெல்லாம் நடுங்கிவிட்டது.
ஒரு மாடு நீர் அருந்திய புண்ணியமே, ஐந்து லக்ஷத்திற்கு சமம் என்றால், அந்த புண்ணியவதி செய்த அறப்பணிகளுக்கு முன்னால், என் செல்வம் அத்தனையும் வீண்”
என்பதை புரிந்து கொண்டு, “என் கண்களைத் திறந்து விட்டாய் மகளே! செல்வம்தான் நிலையானது என்று இருந்தேன். அப்படியல்ல என்பதை பரிபூரணமாக உணர்ந்து கொண்டேன். எம்பிரான் மிதக்கிறார். எல்லோரும் வந்து பாருங்கள்.” என்று கூற, ஊரே சென்று பார்த்தது.
அதன் பிறகு, தன் செல்வம் முழுவதையும் அந்தப் பெண்ணிடம் தந்து, அந்த பெண்ணை தன் பெண்ணாக தத்து எடுத்து கொண்டு, தானும் கடைவரை தர்மம் செய்து வாழ்ந்தார். இது 300,400 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த உண்மை சம்பவம்
எப்பொழுதெல்லாம் நம் மனம் சோர்வு அடைகிறதோ,
”தர்மங்களை செய்கிறோம்? இருப்பினும் நம் வாழ்க்கை சிறக்கவில்லையே? ஒரு வேளை நாம் முட்டாள்தனமாக வாழ்கிறோமா? மற்றவர்கள் எல்லாம் மிகவும் சாமர்த்தியமாக வாழ்கிறார்களே? நாமும் அது போல வாழவில்லையே? தனத்தை சேர்த்து வைக்கவில்லையே?”
என்ற எண்ணம் வரும்போதெல்லாம், இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தால், மனதிற்கு கட்டாயம் உற்சாகம் கிடைக்கும். எனவே, மெய்யன்பர்களே! இதைக் கதை என்று பார்க்காமல்,தர்மத்தின் பாதையை உணர வேண்டும்
தர்மத்தின் பாதை
Subscribe to:
Post Comments (Atom)
THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE
Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser? Get up ten minutes earlier at 5.50 and get used t...
-
Do you know MINIMALISM ? Do you know Minimalism Fulfilling real life! ------------------ Our father earned less than me. We are four childr...
-
அச்சம் என்ற உணர்வை நீக்கி, அரவணைப்பு என்று உணர்த்தி, அஞ்சேல் என்ற துணிவும் அருள்வதே இறைவன், அச்சம் என்ற உணர்வு ஓர் சிறு துளி இருக்கும் என்...
-
1. Correcting ourselves without trying to correct others. 2. Accepting others with their short comings. 3. Understanding the opinions of oth...
No comments:
Post a Comment