நாச்சியார் கோவில் கல் கருடன் அமைந்த விதம்.



தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த காற்றை சுவாசிக்கும் கல் கருடன்

செங்கட்பெயர் கொண்ட செம்பியர்கோன்’ என்றும், ‘காவிரிக்கரையெங்கும் எழுபது மாடக் கோயில்களைக் கட்டியவன்’ என்றும் பெயர் பெற்ற கோச்செங்கட்சோழன்.
தேவசேனாபதியாரின் சிற்பக் கூடத்தில் பயின்ற மாணவன் மயூரசன்மன். முப்பத்தியிரண்டு சிற்ப நூல்களையும், பதினெட்டு உப நூல்களையும் கரதலப் பாடமாக அறிந்தவன்.
அது மட்டுமல்ல, இரு திங்களாக ‘யந்த்ர சர்வாஸ’ மந்திரத்தையும் உபதேசித்திருக்கிறேன். நீ எழுப்பும் அத்தனை ஆலயங்களுக்கும் தேவையான எந்த சிற்பத்தையும் வடித்துத் தரக்கூடியவன்" என்றவர், சற்றுத் தள்ளி நின்ற சீடனை நோக்கி, நீ சென்று மயூரசன்மனை அழைத்து வா" என்றார் தேவசேனாபதி.
சற்று நேரத்தில் உள்ளே நுழைந்து மன்னனையும் சிற்பியையும் வணங்கி நிமிர்ந்தவனின் பிராயம் இருபதுக்கு மேலிராது. கறுத்துச் சுருண்டு தோள்களை எட்டிய குழல்களும், அகன்ற நெற்றியில் சந்தனமும், விழிகளில் தீட்சண்யமுமாக நின்றவனைக் கண்டதும் மன்னன் முகத்தில் திருப்தி தெரிந்தது.
இவன் மயூரசன்மன், எனது பிரதான சீடன். உனது ஆலயப் பணிக்கு இவனை அழைத்துக் கொண்டு போகலாம் மன்னா" என்ற சிற்பி, முதலில் இவனை எங்கு அழைத்துச் செல்லப்போகிறாய்?" என்றும் வினவினார்.
மன்னனிடமிருந்து பதில் உடனே வந்தது, திருநறையூருக்கு" என்று.
‘செந்தளிர் கோதிக் குயில் கூவும்’ திருநறையூரின் ஆலயத்தை மன்னனுடன் அடைந்த மயூரசன்மனின் பார்வை திருக்குளத்தை ஒட்டி அடுக்கப்பட்டிருந்த பாறைகளின் மேல் விழுந்தது. பார்த்தவுடன் அவை கங்க நாட்டிலும் குவளாலபுரியிலும் விளையும் நீரோட்டமிக்க அடுக்குப்பாறைகள் என்பது புரிந்தது அவனுக்கு.
மயூரசன்மனின் விழிகள் பாறைகளை வெறிப்பதையும், அவற்றில் விரிந்த கனவையும் கவனித்த மன்னன், அவனை நெருங்கினான்.
மயூரா... ஏன் அந்தப் பாறைகளை அப்படிப் பார்க்கிறா?" என்றான் மன்னன்.
மன்னவா, இந்த ஆலயத்தில் நான் செய்துக்க வேண்டிய சிற்பம் எது?" மயூரனின் பதில் கேள்வி யாகவே வந்தது. அவனது குரலும் கனவிலிருந்து ஒலிப்பது போலிருந்தது.
இங்கு எம்பெருமானுக்கு திருமணத்தை நடத்திவைத்த பெரிய திருவடியான கருடனைத்தான். மூலவரின் உயரமான ஆகிருதிக்கு ஏற்ற வடிவில் வடிக்க வேண்டும்" என்றான் மன்னன்.
மன்னவா, இந்த அடுக்குப் பாறைகள் பூமியின் நீரோட்டங்களுக்கு நடுவிலிருந்தவை. இவற்றுள் சில வற்றில் நீரோட்டம் கடந்து சென்ற மெல்லிய பாதைகள் இருக்கும். அவற்றைத் தேர்ந்தெடுத்து, சுத்தப்படுத்தினால் காற்று ஊடே செல்லும் பாதைகிட்டும். காற்று சென்று வரக்கூடிய வழி கிடைத்தால் இவை சுவாசிக்கும் பாறைகளாகும்.
மனிதருக்கு சப்த நாடிகள் உள்ளது போல் இவற்றுக்கும் நாடிகள் உண்டு. காற்றை சுவாசிக்கும் எந்த ஜீவனும் பூமியின் விசையை எதிர்த்து நடமாடக்கூடியது. நாம் செய்யக் கூடிய சிற்பத்தின் நாசியில் அந்தப்பாதை வருமாறு அமைத்தால், சந்திரனின் ஒளியை உள்வாங்கும் சந்திர காந்தக் கல்லைப்போல் இவை பூமியின் விசைக்கெதிராக சக்தி பெறும். பின்னர், ‘யந்திரசர்வாஸ’ மந்திரமும் வடிக்கும் சிற்பத்துக்குண்டான மந்திரத்தையும் பிரயோகிக்கும்போது அவை உயிர்பெற்று விடும்."
மன்னனுடன் ஆலயத்துள் நுழைந்த மயூரசன்மன் மூலவரின் இடப்புறம் உள்ள பகுதியைத் தேர்ந்தெடுத்தான். மன்னவா, அந்தப் பாறைகளைக் கொண்டு இங்கு மண்டபத்தை அமைக்கிறேன். இங்கிருந்து பிராகாரத்தில் இறங்கும் வழிநெடுக நான் கூறும்படி அந்தப் பாறைகளைக் கொண்டு பாதை அமைத்து விடுங்கள். மண்டபத்தின் பீடத்தில் பூமியின் விசை எதிர்ப்புறம் இருக்கும்படி அமைத்து விட்டால், கருட சிற்பத்தின் எடை மிகக் குறைவாகவே இருக்கும். அதே பாறைகளைக்கொண்டு வெளிப் பிராகாரம்வரை பாதையாக அமைத்து விடலாம்" என்றான் மயூரசன்மன்.
சரி மயூரா, அதனால் என்ன நிகழும்?" என்றான் மன்னன்.
மயூரசன்மனின் விழிகள் மின்னின. மன்னா, மூலவரின் உயரத்துக்கும் ஆகிருதிக்கும் ஏற்றபடி சுமக்கும் கருடனுக்கும் உருவம் அமைத்தால் ஆயிரம் மடங்கு எடையும் அதிகமாக இருக்கும். ஆனால், அந்த எடை இந்த மண்டபத்தில் பத்து மடங்கு குறை வாகவே இருக்கும். கருடன் புறப்பாடு காணும் போது கருடனைத் தூக்க நால்வரே போதும். மண்ட பத்தை விட்டுக் கீழிறங்கினால் தூக்குபவர் எண்ணிக்கை இரு மடங்காக வேண்டும்.
பாதை நெடுக நான் அமைக்கும் அடுக்குப்பாறைத் தளத்தில் ஈர்ப்பு விசை பாதிப்பாதியாகக் குறைந்துகொண்டே வரும். எனவே, மேற்கொண்டு செல்லச் செல்ல கருடன்தன் சுய எடையைப் பெற்றுவிடுவார். அப்போது தூக்கு பவர் எண்ணிக்கையும் இரண்டிரண்டு மடங்காக உயர்ந்துகொண்டே செல்லும். மீண்டும் மண்டபத் துக்குத் திரும்பி வரும்போது அதே எண்ணிக்கையில் எடை குறைந்துகொண்டே வரும்" என்றான் மயூரசன்மன்.
செங்கட்சோழனின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. அப்படியே செய்துவிடு மயூரா. உனக்கு உதவியாக கல் தச்சர்களையும், ஆட்களையும் இப்போதே ஏற்பாடு செய்கிறேன்" என்றான் மன்னன்.
தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த அந்தக் கல் கருடன் இன்றளவும் அப்படியே நாச்சியார்கோயில் என்று அழைக்கப்படும் திருநறையூரில் நிற்கிறது.
மார்கழியிலும் பங்குனியிலும் பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது. கருட சேவையின்போது பிரம்மாண்டமான அந்தக் கல் கருடனை முதலில் நால்வரும், மண்ட பத்தை விட்டு இறங்கியதும் எண்மரும், பின் வெளிப் பிராகாரத்துக்கு வரும்வரை இரண்டிரண்டு மடங்காக அறுபத்திநான்கு பேர் வரை தூக்கி வர வேண்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி, ஆலயத்தை விட்டு வெளி வந்ததும், கல் கருடனின் மேனியில் மனிதர்களைப் போல் வியர்வை வழியத் தொடங்குகிறது!.....

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...