குருவின் சிறப்பு...!


இந்தியாவைத் தவிர உலகத்தின் எந்த பகுதியிலும் ‘குரு’ என்கிற விஷயம் பற்றி பெரிய சிலாகிப்பு இருக்கிறதா என்ற கேள்வி எனக்குள் உண்டு. இல்லையோ என்ற எண்ணமும் உண்டு. 

இந்த குரு ஆச்சார்யன் அல்ல, பாடம் சொல்லி கொடுக்கிறவரோ, வித்தை சொல்லிக் கொடுக்கிறவரோ,
பழக்க வழக்கங்கள் சொல்லி கொடுக்கிறவரோ அல்ல. மதபோதகரும் அல்ல. ஒரு மதத்தின் சட்ட திட்டங்களை, ஆசார அனுஷ்டானங்களைச் சொல்லித் தருபவரும் அல்ல.

ஒரு குருவிற்கு தந்தைக்குண்டான ரத்த பாசம் கிடையாது. ‘அவன் என் பிள்ளை. அவன் தவறே செய்யக்கூடாது, தவறு செய்தால் அவனைக் கண்டிப்பதற்குத்தான் நான் இருக்கிறேன்’ என்ற முரட்டுத்தனம் ஒரு குரு காட்டுவதில்லை.

பிரம்பால் விளாசுவதோ, பேச்சுகளை வகை தொகையின்றி வாரி இறைப்பதோ, உணவு உண்ணும்போது ‘தண்டச்சோறு’ என்று திட்டுவதோ அவருடைய வேலை அல்ல.

ஒரு தாயின் வெகுளித்தனமும் குருவிடம் கிடையாது. என் பிள்ளை என்ன செய்தாலும் என் பிள்ளை தானே, அவனை நான் பொறுத்துக் கொள்ளத் தானே வேண்டும். அவன் திருடனாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும் என்கிற அதீதமான நெகிழ்வும் குருவிடம் கிடையாது.

ஒரு கணவனுக்கு உண்டான உரிமை போல எந்தவிதமான உபயோகப்படுத்தலும் குருவுக்கு இல்லை. மனைவியைப் போல நீங்கள் பேசுவதற்கெல்லாம் தலையாட்டுகிறவரும் அல்ல.

அப்படியானால் குரு சிநேகிதனா, இல்லை. அதற்கும் மேலே.

சிநேகிதனிடம் கூட ஒரு பொறாமை இருக்கும். உங்களோடு ஒரு போட்டி இருக்கும். தனக்கு பின் படியில் தன் தோழன் இருக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும். நானே கதாநாயகன் என்ற மமதை இருக்கும். அதற்கான முனைப்புகள் இருக்கும்.

குரு அப்படிப்பட்டவரும் அல்ல. ஆமெனில், குரு எப்படிப்பட்டவர்
என்ற ஒரு கேள்வி வருகிறது.

குரு என்பவர் ஒரு நேர்த்தியான மனிதர்.

கருணை என்றால் ஒரு வரம்புதான் இல்லையோ, குருவின் அருளுக்கொரு உவமைதான் சொல்லவோ” என்று ஒரு பாடல் உண்டு.

நேர்த்தியான மனிதர் என்பதற்கு ஒரு வரைமுறையே இல்லை. எல்லா இடத்திலும் செயல் நேர்த்தியும், சொல் நேர்த்தியும், யோசிப்பு நேர்த்தியும், பழகு நேர்த்தியும் கொண்டவர் குரு.

குறையே இல்லாதவர் குரு. உங்களுக்குக் குறையாகத் தென்பட்டதெல்லாம் பிறகு மிகப் பெரிய நிறைவாக வெகு சீக்கிரமே தெரிய ஆரம்பித்து விடும்.

அவரை மறுத்துப் பேசியதோ, கீழ்ப்படிய மறுத்ததோ எத்தனை பெரிய முட்டாள்தனம் என்று வெகு சீக்கிரத்தில் நிரூபணம் ஆகும். குருவுக்கு மட்டும் இப்படிப்பட்ட ஒரு உயர்ந்த இடம் சொல்லக் காரணம் என்ன.

அப்படி அவரிடம் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு யார் குருவாக முடியும் என்கிற உபகேள்வியையும் போட்டுக் கொண்டால் பதில் கிடைப்பது எளிதாக முடியும்.

விருப்பு வெறுப்பு இல்லாமல் எவர் நடுநிலையில் இருக்கிறாரோ அவரே நேர்த்தியான மனிதராக முடியும்.

எது குறித்தும் எப்போதும், எந்த நிலையிலும் விருப்பு வெறுப்பற்று இருத்தல், யோசிக்கும்போதே, பிரச்சனைகளை அணுகுகின்ற போதே, நடு நிலையில் நிற்றல். மதம் சார்ந்தோ, மொழி சார்ந்தோ, தேசம் சார்ந்தோ, கலாச்சாரம் சார்ந்தோ இல்லாத போது நடுநிலையில் நிற்றல் என்றால் என்ன என்பது புரியும்.

இப்படி மொழி, மதம், தேசம் சாராது எல்லோராலும் இருக்க முடியாது. அதற்கு மிகப் பெரிய நேசிப்பு தேவை. சகல உயிர்களையும் நேசிக்கிறவர் இவைகளையெல்லாம் கடந்து
வந்து நிற்பார்.

எவரும் எதிரியில்லா, எதுவும் எதிரியில்லா ஒரு நிலை வேண்டுமெனில் எதையும் சார்ந்திராத ஒரு தனிமை, ஒரு அமைதி, ஒரு சந்தோஷம் மிக முக்கியம்.

அந்த சந்தோஷமான அமைதி தான் ஒருவரை குருவாக்குகிறது. சகலமும் அறிந்த சாந்தம் ஒருவரைத் தெளிவாக்குகிறது. தெளிவானவர் தான் குருவாக உருவாக முடியும். ஏனெனில் அவர் எதையும் சாராதவர். எந்த பக்கமும் இல்லாதவர். எப்போதும் நடுநிலையில் நிற்பவர். எந்த பாசப்பிடிப்பிலும் சிக்கித் தவிக்காதவர்.

குரு எப்படி பேசுவார்?

அவர் இளம் வயதில் மரணமடைந்து விட்டாரா என்ன செய்வது, நேற்று இருந்தவர் இன்று இல்லை என்ற சிறப்பு தான் உலகத்தின் இயல்பு . அடுத்தபடியாக ஆக வேண்டியதை கவனிப்போமே”

அடடே.. அவளுக்குக் குழந்தை பிறந்து விட்டதா . மிகவும் சந்தோஷம், பிறந்த குழந்தையின் மூலம் மகத்தான பணிகள் நிறைவேறட்டும், அன்பு பெருகட்டும், ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் அந்த வீட்டில் அன்பு அதிகரிக்கிறது என்று அர்த்தம். அன்பு அதிகரிக்க வேண்டும், அன்புதான் சந்தோஷத்தின் வெளிப்பாடு. நம்முடைய இயல்பு இடையறாத சந்தோஷத்தை நாடுவதுதான். சந்தோஷத்தைத் தேடித்தான் இத்தனை போட்டி, பொறாமைகள். ஆட்டம் பாட்டம் எல்லாம்” என்று விளக்கிச் சொல்வார்.

இந்த உலகத்தினுடைய பிரம்மாண்டத்தை, இந்த பிரபஞ்சத்தினுடைய பிரம்மாண்டத்தை, எல்லாக் கோள்களும் சரியாக அசைவதை, ஒழுங்காக நடப்பதை, சூரியன் சரியாக தினமும் காலையில் உதிப்பதை, அஸ்தமிப்பதை, நன்கு சுட்டெரிப்பதை, மழை வருவதை, காற்று வீசுவதை எல்லாம் பார்க்கும் போது, ஏதோ ஒன்று இயக்குகிறது என்று தோன்றவில்லையா. அதற்கு என்ன பெயர் வைப்பது, எல்லாவற்றையும் கடந்த ஒரு சக்தி என்பதை புரிந்து கொண்டு ,அதற்கு ‘கடவுள்’ என்று பெயர் வைத்தார்கள்.

எது அது. என்ன உருவம் அது. என்ன தன்மை அது, என்ன வலிவு அது. அது எங்கிருந்து வந்தது போன்ற கேள்விகள்.

நீ உண்மையாக இருப்பின் உனக்குள் எழும். அந்தக் கேள்விகளுக்கு பதில் நான் சொல்லி, நீ புரிந்து கொள்ள முடியாது, நீயாக அறிந்து கொள்ள வேண்டும். இதோ இந்தக் குடுவையிலிருந்து நான் தேன் குடித்து விட்டேன். தேன் மிகத் தித்திப்பாக இருக்கிறது, எவ்வளவு தித்திப்பாக இருக்கிறது என்று என்னால் உன்னிடம் சொல்ல முடியவில்லை. அப்படிச் சொன்னாலும் உனக்கு அது புரியாது.

நீ தேன் குடிக்கும் வரை உனக்கு அது தெரியாது. எனவே, என்னைத் தேன் எப்படியிருக்கிறது என்று கேட்பதை விட்டு விட்டு நீ குடி.”

ஒரு உத்தமமான குருவின் சத்தியமான வார்த்தைகள் இவைகள்.

தேன் குடித்தல் என்பது கடவுளைத் தேடுதல் என்று வைத்துக் கொள்வோம். அறிதல் என்று வைத்துக் கொள்வோம். வெறும் கடவுள் தேடுதல் மட்டும் சொல்பவரா குரு, இல்லை.

நடுநிலையில் நிற்பவரின் மனம் எப்பொழுதும் கருணையில் ஊறி நிற்கும். நாம் அருகே நிற்க, அது நம் தலையைத் தொட, நம்மை அணைத்துக் கொள்ள, அதனுடைய கருணை நம்முடைய கருணையை ஊற வைக்கும். அவரோடு வெறுமே சுற்றி இருப்பதால், பார்ப்பதால், உட்கார்ந்து பேசுவதால் நம்மையும் மீறி, நமக்குள் ஒரு மலர்ச்சி ஏற்படும். இதுதான் சொல்லாமல் சொல்லுதல்.

உன்னை மாற்றி விடுகிறேன், உனக்கு தீட்சை கொடுக்கிறேன், உனக்கு புதுப்பெயர் சூட்டுகிறேன்” என்றெல்லாம் பம்மாத்து செய்யாமல், எல்லாவற்றையும் கணக்குப் போட்டு காசு வாங்காமல், தன்னுள் இருப்பதை உன்னுள் கொட்டிவிட்டு தனியே அமர்ந்திருக்கின்ற மிகப்பெரிய உன்னதம் குரு.

குருவை அனுபவித்தவன், குருவாவதற்கு எந்த முயற்சியும் செய்யத் தேவையில்லை. அவன் வளர்ச்சியில் எந்தத் தடங்கலும் வராது. இது இந்துமதம் உணர்த்திடும் குருவின் தனிச்சிறப்பு.

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...