தவம்

இடையறாது, இடையறாது அந்த ஆன்மாவை விசாரம் செய்வதற்குத்தான் தபஸ் என்று பெயர். தவம் செய்தல் என்று பெயர்.

தவம் என்பதென்ன?

ஒரு வகை தியானம்.

தியானம் என்பது என்ன?

ஒரு புள்ளியில் நிற்றலா? இல்லை. அது எந்நேரமும் முழு உணர்வோடு விழிப்போடு இருத்தல். இதற்கு மேல் இதை விளக்க முடியாது. இது சொல்லில் அடங்காத உணர்வு. விளக்க முடியாத விந்தை. பகிர்ந்து கொள்ள முடியாத ஒரு பக்குவம்.

அதனால்தான் இதைக் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று சொல்கிறார்கள். இது பயிற்சியில் வருவதன்று. புத்தியின் திறனைப் போல மனதின் வலிமையைப் போல, இதைப் பழக்கப்படுத்திக் கொள்ள முடியாது.

என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி உடனடியாக எழும். வெறுமே சும்மா இருக்க வேண்டியதுதான். உன்னுடைய எல்லாவிதமான அலசல்களையும், அறிவார்ந்த கேள்விகளையும் விலக்கிவிட்டு வெறுமே மௌனமாய் ஒடுங்கி உள்ளே உட்கார வேண்டியதுதான்.

அந்த விதமான முயற்சியால், இந்த விதமான நகர்வினால் இதை அடையமுடியும் என்று நினைத்தீர்களென்றால், நீங்கள் இந்த விஷயத்திற்கு அப்பால் போகிறீர்கள். விலகிவிடுகிறீர்கள்.

எந்தவித முயற்சியுமில்லாமல், வெறுமே வெறுமே வெறுமே கிடக்க முடிகிறபோது உள்ளுக்குள்ளே வேறு ஒரு விஷயம் கிளம்புகிறது. இந்த வெறுமே இருப்பது கூட முயற்சியற்று இயல்பாக நடைபெற வேண்டும்.

"செத்தாரைப் போல திரி" என்று சொல்லப்பட்டது இது குறித்துத்தான். ஆனால் "செத்தாரைப் போல திரி" என்பதும் ஒரு முயற்சியல்ல. முயற்சிகள் அனைத்தையும் கீழே உதறிவிட்டுக் கிடப்பதுதான். அது ஒரு பரமானந்த நிலை. இது தானாய் நடைபெற வேண்டிய ஒரு விஷயம்.

நேதி... நேதி... நேதி... இது இல்லை இது இல்லை என்று எல்லாவற்றையும் விலக்கிவிட்டு, எது விலக்க முடியாமல் உள்ளே இருக்கிறதோ அதுவே ஆன்மா என்பதை ஒருவன் உணர வேண்டும்.

உடம்பு நானல்ல, புத்தி நானல்ல, பெயர் நானல்ல, மனம் நானல்ல, இந்தச் சொத்து சுகங்கள் எல்லாம் நானல்ல, இந்தப் பட்டம் பதவிகள் எல்லாம் நானல்ல.

நான் யார்? நான் யார்?... என்று கதறினால், உள்ளுக்குள்ளே பெரும் கூவல் கூவி, உள்ளுக்குள்ளே பெரும் கூவலோடு அழுதால் ஏதோ ஒன்று உடைந்து, ஏதோ ஒன்று தோன்றுகிறது. இதையும் சொல்லில் விளக்க முடியாது.

சரண கமலாலயத்தில் ஒரு கணநேரம் மட்டும் நிற்கின்ற யோக்கியதை வந்துவிட்டால், நமக்குள்ளே இருக்கிற பேரொளியைக் கண்டுவிட்டால், இந்த உலகத்தோடு நாம் பின்னிப் பிணைந்து கொண்டிருக்கிற பல விஷயங்களோடு அறுபடுகிறோம்.

நான் அறுத்துவிட்டேன், நான் அறுபட்டு விட்டேன் என்று சொல்லிக் கொள்ளாமலே அறுபடுகிறோம். அறுந்தது தெரியாமலேயே நகர்ந்து விடுகிறோம். அறுந்ததை எவருக்கும் அறிவிக்காமலேயே மௌனமாய் உள்ளுக்குள் மூழ்கி விடுகிறோம்.

நான் எதுவுமில்லாதவன், வெறும் கோமணதாரி, ஸந்நியாசி என்று சொல்லிக் கொள்பவர்களெல்லாம் ஏதேனும் பிடித்துக் கொண்டு தொங்குவார்கள்.

எதுவுமற்று உள்ளே இருப்பவருக்கு எதையும் சொல்லிக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. எந்த அறிவிப்பும் அவனைப் பற்றித் தேவையில்லை.

அவன் அடையாளமில்லாதவனாகப் போய் விடுகிறான். மற்றவருக்கு ஏதேனும் அடையாளமாக அவன் இருப்பினும் அவனுக்கு அவன் எந்த அடையாளமும் இல்லாமல் மாறிவிடுகிறான்.

மற்றவர்கள் உங்களை பித்தர் என்றோ, பேயர் என்றோ, பாலர் என்றோ சொல்லிக் கொள்ளட்டும். உங்களுக்குள் நீங்கள் எதுவுமில்லை. வெறுமே... வெறுமே... இருக்கிறீர்கள்.

வெளி வேஷம் என்ன போட்டுக் கொண்டாலும் உள்ளுக்குள்ளே இடையறாது ஒரு களிநடனம் ஓடிக்கொண்டு இருக்கிறது. அந்தச் சுடரொளியோடு மனம் வாழ்ந்து கொண்டிருக்கும். இதுதான் ஆன்மபலம். உண்மையில் இந்த அறிவே மரணம்.

பறவைகள் போன வழியும், மீன்கள் போன பாதையும், ஞானிகள் நடந்த வழியும் மற்றவருக்குத் தெரியாது. இது பின்பற்றக் கூடிய விஷயமல்ல. இது ஒட்டுமொத்தமாய், கும்பல் கும்பலாய் கைகோர்த்துக் கொண்டு போகிற விஷயமல்ல.

இது மதம் தாண்டியது. கடவுள் வழிபாடு தாண்டியது. இது தத்துவங்கள் தாண்டியது.

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...