திருக்கழுக்குன்றம் திருக்கோயில் தல வரலாறு


இறைவர்திருப்பெயர்:
வேதகிரீஸ்வரர் (மலைமேல் இருப்பவர்). பக்தவசலேஸ்வரர் (தாழக்கோயிலில் இருப்பவர்).

இறைவியார் திருப்பெயர்: சொக்கநாயகி (மலைமேல் இருப்பவர்). திரிபுரசுந்தரி (தாழக்கோயிலில் இருப்பவர்)

தல மரம்: வாழை.

தீர்த்தம்: சங்குத்தீர்த்தம்.

வழிபட்டோர்: மார்க்கண்டேயர்.

*தல வரலாறு*

இத்தலம் வேதமே, மலையாய் இருத்தலின் 'வேதகிரி ' எனப் பெயர் பெற்றது; வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம் என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள்.
 
மலைமேல் ஒரு கோயில்; ஊருக்குள் ஒரு கோயில் உள்ளது. இவை முறையே மலைக்கோயில், தாழக்கோயில் என்றழைக்கப்பபடுகிறது.
 
500 அடி உயரமுள்ள இம்மலையில் நாடொறும் உச்சிப்போதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்கு 'பட்சிதீர்த்தம் ' என்றும்; திருக்கழுக்குன்றம் என்றும் பெயராயிற்று.
 
தாழக்கோயில் - மார்க்கண்டேர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும், அது முதற்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும் சொல்லப்படுகிறது.

*தேவாரப் பாடல்கள்*

1. சம்பந்தர் -தோடுடையானொரு காதில்.
2. அப்பர் -மூவிலைவேற் கையானை.
3. சுந்தரர் -கொன்று செய்த கொடுமை.
 

*சிறப்புகள்*

இத்தலத்திற்கு வரும் வடநாட்டு யாத்ரிகர்களுக்குப் 'பட்சி தீர்த்தம் ' என்று சொன்னால்தான் புரியும்.
 
மலைமீது ஏறிச் செல்ல நன்கமைக்கப்பட்ட மலைப்பாதை - செம்மையான படிகளுடன் உள்ளது. இம்மலையை வலம் வருதல் சிறப்புடையது.
 
இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் விடியற்காலையில் நீராடி, இம்மலையை வலம் வரின் உடற்பிணி நீங்கும். (இதைச்சில மருத்துவர்களே மேற்கொண்டு அநுபவத்தில் உணர்ந்துள்ளனர்.)
 
மணிவாசகருக்கு இறைவன் குருவடிவாய்க் காட்சி தந்தருளிய தலம்; அப்பெருமான் வாக்கிலும், திருவாசகத்திலும் இத்தலம் இடம் பெற்றுள்ளது.
 
இத்தலத்திற்கு அந்தக்கவி வீரராகவப் புலவர் பாடியுள்ள தலபுராணம் உள்ளது.
 
தாழக்கோயில் - கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்ட மிகப் பழமையான கோயில். கோயிலுக்கு வெளியே 5 தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
 
சந்நிதிக்கு எதிரில் உள்ள மிக்க புகழுடைய 'சங்கு தீர்த்த'த்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 'சங்கு' பிறக்கின்றது. இதில் கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.
 
வலம்வரும்போது நந்தி தீர்த்தத்தையடுத்து, அலுவலகச் சுவரில் அழகான அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் உள்ளது; இதன் கலையழகு கண்டுணரத்தக்கது.
 
பிரகாரத்தில் ஆத்மநாதத் சந்நிதி - பீடம் மட்டுமே உள்ளது; பாணம் இல்லை. எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி உள்ளது.
 
அம்பாளுக்கு மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது. ஆண்டில் ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்தியில் வரும் நவமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்படுகின்றது. நாடொறும் பாத பூஜை மட்டுமே நடக்கின்றது.

சித்திரை திருவிழாவில்  3ம் நாள்  காலை அதிகாரநந்தி சேவையன்று பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களோடு மலைவலம் வருதல் சிறந்த காட்சி.
 
இங்கு பைரவர் வாகனமின்றி உள்ளார்.
 
கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது.
 
7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.
 
கல்வெட்டுக்களில் இத்தலம் 'உலகளந்த சோழபுரம் ' என்று குறிப்பிடப்படுகிறது.

*அமைவிடம்*

மாநிலம் : தமிழ் நாடு

செங்கற்பட்டிலிருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன;

இங்கிருந்து 14-கி. மீ. தொலைவில் உள்ள இத்தலம். செங்கற்பட்டிலிருந்து மாமல்லபுரம், கல்பாக்கம் செல்லும் பேருந்துகளும் இவ்வழியே செல்கின்றன.

இக்கோயில் தொடர்பு எண் : 044 - 27447139, 09442811149

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...