" வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதம் நாமம் நமச்சிவாயவே."-என்ற ஞானசம்பந்த பெருமான் திருவாக்கிற்கிணங்க,
ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களில் ஒன்றான யஜூர் வேதத்தில் நடுநாயகமாக ஸ்ரீ ருத்ர மந்திரம் அமைந்துள்ளது.
காசி முதல் ராமேஸ்வரம் வரை நமது பாரததேசம்முழுவதும் சிவாலயங்களில் ஸ்ரீ ருத்ர ஜெப பாராயணமும், ஹோமமும் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.ஸ்ரீருத்ர மந்திரம் சாந்தி மந்திரமாகவும், ஸகல பாவங்களையும் போக்கும் பிராயச்சித்த மந்திரமாகவும் விளங்குகின்றது.
வேதபுருஷனுக்கு ஸ்ரீருத்ரம் கண்ணாகவும், அதனுள் இருக்கும் பஞ்சாட்சரம் கண்மணியாகவும் விளங்குவதாக ஹரதத்தாச்சாரியார் போற்றுகின்றார்.
ஸ்ரீ ருத்ரம் பரமேஸ்வரனை துதிக்கும் மிகமிக உயர்ந்த மந்திரமாகும்.
* "ருதம் த்ராவய தஇதி ருத்ர :"*- துக்கம் அல்லது துக்கத்திற்க்கு காரணமான பாவங்களை பொசுக்கி அருள் செய்து காப்பாற்றுவதால் ஸ்ரீ பரமேஸ்வரன் ருத்ரன் எனப்படுகின்றார்.
கந்தபுராணம், உருத்திரன் என்பதற்க்கு துன்பத்தை ஓட்டுபவன் என்று பொருள் கூறுகின்றது.
"இன்னலுங் கடலுள் பட்டோர் யாரையும் எடுக்கும் நீரால் உன்னரும் பரம மூர்த்தி உருத்திரன் என்னும் பெயர் பெற்றான் "என்று புகழ்கின்றது.
பொதுவாக துன்பக் கடலில் அகப்பட்ட பக்தனை எடுத்து இன்பக்கரைகண் ஏற்றுவதால் ருத்ரன் எனப் பெயர்கொண்டான்.
அப்பர்பெருமான் கஞ்சனூர் தேவாரத்தில்,
" உருத்திரனை உமாபதியை உலகு ஆளானை "-என்றும்,
இன்னம்பர் தேவாரத்தில்,
"உருத்திரமூர்த்தி போலும் உணர்வு இலார் புரங்கள் மூன்றும்
எரித்திடும் சிலையர் போலும் இன்னம்பர் ஈசனாரே "என்று போற்றுகின்றார்.
63 நாயன்மார்களில் ருத்திர பசுபதி நாயனார் ஸ்ரீ ருத்ரம் ஜபித்து சிவமுக்தி பெற்றவர்.
பெரியபுராணத்தில் சேக்கிழார்,
"ஆய அந்தணர் அருமறை உருத்திரங் கொண்டு, மால் அயன் அறியாவினா மாமலர்ச் சேவடி வழுத்தும் "-என்று போற்றுகின்றார்.
ஸ்ரீ ருத்ரம் நமது துன்பத்தை போக்குவதோடு முக்தியையும் அளிக்கவல்லது என்பதை பெரியபுராணம் காட்டுகின்றது.
ஒரு மரத்தின் வேரில் நீரூற்றினால் கிளைகள் எல்லாம் செழிப்பதுபோல், ஸ்ரீ ருத்திர ஜபத்தால் எல்லா தேவதைகளும் த்ருப்தியடைகின்றார்கள் என்பதை சூத சம்ஹிதை,
"விருக்ஷஸஸ்ய மூலவாகேன சாகபுஷ்யத்திவையதா, சிவருத்ர ஜபாது ப்ரிதே ஏவாஸ்ய தேவதா அதோ, ருத்ர ஜபாதேவ புக்திமுக்தி ப்ரஸித்தித :-என்று கூறுகின்றது.
ஸ்ரீ ருத்ர ஜபம், ஹோமம், அபிஷேகம் செய்பவன் பஞ்சமாபாதகங்களில் இருந்தும் விடுபடுகின்றான்.அஞ்ஞானம் ஒழிந்து ஆத்மஞானம் பெறுகின்றான்.இதற்க்கு ஈடுஇணை வேதத்திலும் சரி, ஸ்மிருதியிலும் சரி கிடையாது என்று மேலும் சூத சம்ஹிதை கூறுகின்றது.
இத்தகைய அதிஉன்னதமான ஸ்ரீ ருத்ரம் ஜபித்து ருத்ரஹோமமும், ருத்ராபிஷேகமும் செய்வது அதி உன்னத பலனை தரவல்லது.
பல பாழடைந்த சிவாலயங்களில் சுவாமிக்கு குளிர குளிர ருத்ராபிஷேகம் செய்தபின், திருப்பணிகள் கும்பாபிஷேகம் நடந்துள்ளன.மேலும் தடைப்பட்ட திருப்பணிகள் பூர்த்திஅடையவும் ருத்திர ஹோமம் செய்வது பலன் அளிக்கவல்லது.
தனிபட்ட மனித வாழ்வில் ஏற்படும் துன்பங்கள், இடர்களை களையவும்., சத்ரு, திருஷடி, கண்டம், மரணபயம், போன்றவைகள் நிவர்த்திபெறவும், பித்ரு, புத்திர பாப தோஷங்கள் விலகவும் ருத்ரஹோமம் செய்து பலன் அடையலாம்.
இயற்கை இடர்பாடுகளை அதாவது பஞ்சம், மழையின்மை, வறட்சி, போர்கால நெருக்கடிகளில் இருந்து நிவர்த்திபெறவும் ருத்ர ஹோமம் செய்வது உயர்ந்த பலனை தரும்.
பரம உன்னதமான ஸ்ரீ ருத்ரம் முறைப்படி ஜபிக்கும்பொழுது, ஏற்படும் ஸப்த ஒலி அலை அதிர்வுகளும், ருத்ர யாக தீயிலிருந்து வரும் ஒளிக்கதிர்களும், புகை மண்டலமும் பிரபஞ்சமாகிய உலகை தூய்மை படுத்துவதுடன், உலக வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள், துன்பங்களை அகற்றி சர்வ இஷ்ட சித்திகளை அளிக்கின்றது.
சிவார்ப்பணம்
No comments:
Post a Comment