போகமான வாழ்வு அமைவதற்கும், ஜென்ம பந்தத்திலிருந்து விடுபடவும் ஓத வேண்டிய மூன்றாம் திருமுறையின் 48வது தேவாரப் நமசிவாய திருப்பதிகம் பற்றி சிறு பதிவு :

பாடல் 1 :

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.

பொருள்:
மிக்க அன்பு கொண்டு கசிந்து கண்களில் நீர் மல்க ஒதுகின்ற அன்பர்களை நன்னெறிக்கு ஆட்படுத்த வல்லது சிவபெருமானின் திருநாமமான ஸ்ரீபஞ்சாட்சரம். இத்திருமந்திரம் நான்கு வேதங்கள் சுட்டும் மெய்ப் பொருளாகவும் விளங்குகிறது.

பாடல் 2:

நம்புவார் அவர் நாவின் நவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது ஒப்பது
செம்பொனார் திலகம் உலகுக்கெலாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே.

பொருள்:
விரும்பி திருஐந்தெழுத்தைக் கூறுவது 'வாசனை பொருந்திய புது மலரில் உள்ள தேனின் சுவைக்கு' ஒப்பானதாகும். ஸ்ரீபஞ்சாட்சரம் மந்திரங்கள் அனைத்திற்கும் செம்பொன் திலகம் போன்று விளங்குவது.

பாடல் 3:

நெக்குள் ஆர்வம் மிகப்பெருகி நினைந்து
அக்கு மாலைகொடு அம்கையில் எண்ணுவார்
தக்க வானவராத் தகுவிப்பது
நக்கன் நாமம் நமச்சிவாயவே.

பொருள்:
உள்ளத்தில் ஆர்வம் மிகுந்து, உருத்திராக்க மாலைகளின் மணியை உருட்டியோ அல்லது கை விரல்களின் இடையே உள்ள கோடுகளைக் கொண்டோ ஸ்ரீபஞ்சாட்சர மந்திரத்தை ஜபிப்பவர்கள் தேவர்களுக்கு இணையான சிறப்பினைப் பெறுவார்கள்.

பாடல் 4:

இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம் வந்து ஓதவல்லார் தமை நண்ணினால்
நியமம் தான் நினைவார்க்கு இனியான் நெற்றி
நயனன் நாமம் நமச்சிவாயவே.

பொருள்:
திருஐந்தெழுத்தை நியமத்தோடு ஓதவல்லார்க்கு திருநெற்றியில் கண்களை உடைய இறைவன் மிக இனிமையானவர். அத்தகைய அன்பர்களை கூற்றுவனின் தூதுவர்கள் எந்நாளும் நெருங்கார்.

பாடல் 5:

கொல்வாரேனும் குணம்பல நன்மைகள்
இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சிவாயவே.

பொருள்:
கொல்லும் தன்மையினராகவும் நற்குணங்கள் ஏதுமின்றியும் இருப்பினும், திருஐந்தெழுத்தை உரைப்புடன் ஓதி வந்தால், முன்பு புரிந்த தீமைகள் அனைத்தினின்றும் விடுபட்டு உய்வு பெறுவர். நன்மைகள் அனைத்தையும் வழங்கவல்ல ஒப்பற்ற மந்திரம் திருஐந்தெழுத்து.

பாடல் 6:

மந்தரம் அன பாவங்கள் மேவிய
பந்தனை அவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே.

பொருள்:
மலையை ஒத்த பாவச் செயல்களைப் புரிந்தவர்களும், சிவபெருமானின் திருநாமமாகிய ஸ்ரீபஞ்சாட்சரத்தை இடைவிடாது ஓதி வந்தால் கொடிய வினைகள் யாவும் நீங்கப் பெறுவர். மிகுந்த செல்வச் செழிப்பையும் பெற்று இன்புறுவர்.

பாடல் 7:

நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்
உரை செய்வாயினர் ஆயின் உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சிவாயவே.

பொருள்:
நரகங்கள் பலவும் புகும் தன்மையில் பாவச் செயல்களைப் புரிந்து இருப்பினும், வரம் தரும் இறைவனாகிய சிவபெருமானின் ஸ்ரீபஞ்சாட்சரத்தை உரை செய்து வந்தால் (அனைத்து வினைகளும் நீங்கப் பெற்று) உருத்திர கணங்களோடு சேர்ந்திருக்கும் பெறும் பேற்றினைப் பெறுவர்.

பாடல் 8:

இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல்
தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
நலங்கொள் நாமம் நமச்சிவாயவே.

பொருள்:
கயிலை மலையை பெயர்க்க முற்பட்ட இராவணனைத் தன் திருவடிப் பெருவிரலால் ஊன்றித் தண்டித்தார் சிவபெருமான். அச்சமயம் அவ்வரக்கன் அப்பாவச் செயலில் இருந்து உய்வு பெறக் காரணமாக இருந்தது திருஐந்தெழுத்தே.

பாடல் 9:

போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்
பாதம் தான்முடி நேடிய பண்பராய்
யாதும் காண்ப அரிதாகி அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே.

பொருள்:
காண்பதற்கு அரிதான நிலையில் விளங்கும் சிவபெருமானை 'நமசிவாய' எனும் திருநாமம் கொண்டே அனைத்து தேவர்களும் துதித்து வழிபடுவர்.

பாடல் 10:

கஞ்சி மண்டையர் கையிலுண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால்
விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய்
நஞ்சு உண் கண்டன் நமச்சிவாயவே.

பொருள்:
கஞ்சி குடிக்கும் கலனை கையில் கொண்டவர்களும், 'மண்டை' எனப் படும் ஓட்டை கையில் ஏந்தியவர்களுமான சமணர்களின் தவறான கொள்கைகளை ஏற்காதவராகவும், தேவர்களைக் காக்கும் பொருட்டு நஞ்சை உண்டருளியவராகவும் விளங்கும் பெருமானின் திருநாமம் திருஐந்தெழுத்தாகும்.

பாடல் 11:

நந்தி நாமம் நமச்சிவாய எனும்
சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எல்லாம்
பந்த பாசம் அறுக்க வல்லார்களே.

பொருள்:
இறைவனின் திருநாமமாகிய ஸ்ரீபஞ்சாட்சரத்தைப் போற்றி சந்தம் மிகுந்த தமிழ்ப் பாக்களால் ஞான சம்பந்தன் நவின்ற இப்பதிகத்தை சிந்தை மகிழுமாறு ஓத வல்லவர்கள் பிறவித் தளைகளான பந்த பாசத்தை அறுத்து உய்வு பெறுவார்கள்.

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...