சுமார் 77 வருடங்களுக்கு முன் மகா ஸ்வாமிகள் சொன்ன கருத்துக்கள் இன்றைய சமூகத்துக்கும் பொருந்தி வருவது கவனிக்கத் தக்க ஒன்று! எல்லா காலத்துக்கும் பொருந் துகிற பொக்கிஷ வரிகள் இவை!
ஜகத்குரு, நடமாடும் தெய்வம், மகா பெரியவா, பெரியவா, மகா ஸ்வாமிகள், கலியுக தெய்வம், கண்கண்ட கடவுள், கருணைக் கடல் என்று பலராலும் பல பெயர்களால் அழைக்கப்படுபவர் – காஞ்சி காமகோடி மடத்தின் 68-வது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். பொதுவாக பலருக்கும் இவர் ‘பெரியவா’. குழந்தைகளுக்கு ‘உம்மாச்சி தாத்தா’.
மகா ஸ்வாமிகளின் இயற்பெயர்- சுவாமிநாதன். கி.பி. 1894-ஆம் வருடம் மே மாதம் 20–ஆம் தேதி (ஜய வருடம் வைகாசி மாதம் 8-ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை, அனுஷ நட்சத்திரத்தில் சுப்ரமண்ய சாஸ்திரிகள்-மகாலட்சுமி அம்மையார் தம்பதியின் திருமகனாக அவதரித்தார் மகா ஸ்வாமிகள். அவதரித்த இடம் : விழுப்புரம் நகரத்தில் நவாப் தோப்புக்கு அருகில் உள்ள அக்ரஹாரம்!
தன் சீடர்கள் மற்றும் பக்தர்களால் சிவ சொரூபமாகவே வணங்கப்பட்டவர் மகா ஸ்வாமிகள். ‘சாட்சாத் சிவபெருமானின் அம்சம் இவர்’ என்று போற்றப்பட்டவர். இந்தக் கலியுகத்தில் நடமாடும் தெய்வமாக வாழ்ந்த பெரியவாளை தரிசித்தவர்கள் பாக்கியசாலிகளே!
மகா பெரியவரை, குலதெய்வமாகவே போற்றி வணங் கும் குடும்பங்களும் இருக்கின்றன. பெரியவா இருந்த போது, காஞ்சிக்குச் சென்று அவரது ஆசி பெற்று, தங்கள் குடும்ப வைபவங்களை சிறப்புறச் செய்து வந்தனர். இப்போதும், தங்கள் குடும்பங்களில் ஏதேனும் சுப நிகழ்வு என்றால், சொந்தங்கள் சூழ காஞ்சிக்கு வந்து, மகானது அதிஷ்டானத்தின் முன்னே நின்று பிரார்த்தனை செய்து விட்டுத்தான் சுப காரியத்தைத் துவக்குகின்றனர்.
நூற்றாண்டைக் கடந்து வாழ்ந்த அந்த மகானின் திவ்ய தேகம், அங்கே பூரணமாக உறைந்திருக்கிறது. வழிபாடுகளும், பாராயணமும் ஸ்வாமிகளுக்கு தினமும் நடைபெறுகிறது.
கோடிக்கணக்கான சொத்துகளைக் கொண்ட உயர்ந்த தொரு பீடத்தின் மடாதிபதி என்கிற எந்த டாம்பீகமும் இல்லாதவர் மகா ஸ்வாமிகள். தவிர, பக்தர்களிடம் பாகுபாடு காட்டாதவர்! மிகுந்த வறுமையான நிலையில் உள்ள பக்தர் தன்னிடம் வந்தால், அவருக்கு உணவிடும்படி மடத்து ஊழியர்களிடம் சொல்லுவார்; அவருக்கு வஸ்திரங்களும் வழங்குவார்.
இவரை தரிசிக்க இயலாதவர்கள் கூட, ‘மகா ஸ்வாமிகள் எப்படி இருப்பார்?’ என்று கேட்க மாட்டார் கள். ஏனெனில், இவரின் திவ்யமான திருவடிவம் அனைவரின் நெஞ்சங்களில் பதிந்து விட்ட ஒன்று!
காவி வஸ்திரம் போர்த்திய கெச்சலான உடல்; தேகமெங்கும் துலங்கும் விபூதிக் கீற்று; கழுத்தில் தவழும் ருத்திராட்ச மாலைகள். எதிரில் இருப்பவரின் எண்ண ஓட்டத்தை, தன் பார்வையாலேயே அளந்து அறியும் தீட்சண்யமான கண்கள்! தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சம்ஸ்க்ருதம், இந்தி, மராட்டி, ஜெர்மன், பார்ஸி உள்ளிட்ட பதினான்கு மொழிகளில் ஸ்வாமிகளுக்குப் பரிச்சயம் உண்டு. புராணம், இதிகாசம், உபநிஷதம் ஆகியவற்றை நன்கு அறிந்தவர்.
மடத்தில் இருந்து யாத்திரை செல்லும் காலங்களில், தண்டத்தைக் கையில் ஏந்தியபடி சாலையில் இறங்கி இவர் நடக்க ஆரம்பித்தால், பின்னால் வரும் சீடர்களும், பக்தர்களும் ஓடித்தான் வர வேண்டும். நடையில் அப்படியரு வேகம்! தேகத்தில் காணப்படும் சுருக்கங்களுக்கும், ஓடியாடும் சுறுசுறுப்புக்கும் சம்பந்தமே இருக்காது.
இவரது நினைவாற்றல் பிரமிக்கத்தக்க ஒன்று! பக்தரை ஒரு முறை பார்த்து விட்டால் போதும்… பிறகு பல வருடங்கள் கழித்து சந்திக்க நேர்ந்தாலும், அந்த பக்தரது பெயர்- பெற்றோர்- கோத்திரம் என்று அவரின் ஜாதகத்தையே சொல்லி, திகைக்க வைப்பார் ஸ்வாமிகள்!
கஷ்ட ஜீவனம் நடத்தி வரும் எவரேனும் ஸ்ரீமடத்தை அணுகினால், அவருக்கு ஏதேனும் உதவியைச் செய்வது ஸ்வாமிகளின் வழக்கம். உபநயனம், கல்வி, திருமணம் முதலான விசேஷங்களுக்கு மகா ஸ்வாமிகளை அணுகி, அவரிடம் இருந்து உதவியையும் அவரது ஆசியையும் பெற்றவர்கள் ஏராளம்.
தூக்கம் வந்து விட்டால், உட்கார்ந்திருந்த இடத்தில் அப்படியே படுத்து விடுவார் ஸ்வாமிகள். அது மரத்தடியோ, மணல்மேடோ, புல்தரையோ… எல்லா இடமும் ஸ்வாமிகளுக்கு ஒன்றுதான்! சுமார் இரண்டு மணி நேரம்தான் படுத்திருப்பார். அதன் பின் அவருக்கு விழிப்பு வந்து விடும்.
சென்னையில், ஸ்வாமிகள் தங்கி இருந்தபோது, ஓர் இடத்தில் இருந்து அடுத்துள்ள இடத்துக்கு முகாமை மாற்றுவதற்கு, கால நேரம் எதுவும் பார்க்க மாட்டார். அதிகாலையோ… நள்ளிரவு நேரமோ… மனதுக்குத் தோன்றியதும் உடனே யாத்திரையைத் தொடங்கி விடு வார். தீப்பந்த வெளிச்சத்தில்… பக்த கோஷங்கள் முழங்க… சென்னைத் தெருக்களில் பொன்னிற மேனியராக வலம் வரும் ஸ்வாமிகளைக் கண்டு மெய்சிலிர்த்துப் போவார்கள் பக்தர்கள். ஒரு பகுதியில்… எந்தத் தெருவையும் புறக்கணிக்கமாட்டார். தரிசனம் தேடி வருபவர்களில் – குடிசை மக்களாகட்டும்… கோடீஸ்வரர் ஆகட்டும்… எல்லோருக்கும் தரிசனம் தந்து பிரசாதம் தருவார்.
தேசத்தின் பல பகுதிகளுக்கும் யாத்திரை மேற்கொண்டிருக்கிறார் ஸ்வாமிகள். காசி முதல் ராமேஸ்வரம் வரையிலான தலங்கள் பலவற்றையும் தரிசித்துள்ளார். ஆந்திரா, கேரளா, கர்நாடகம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பீஹார், ஒரிஸ்ஸா, மேற்கு வங்காளம் என்று இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணித்திருக்கிறார்.
சென்னை நகரத்துக்கு விஜயம் செய்த இவர், சென்னையின் பல இடங்களுக்கும் நடந்தே யாத்திரை மேற்கொண்டார். வேறோர் இடத்துக்கு முகாம் மாறும் போது மேனாவையோ, ரிக்ஷாவையோ எதிர்பார்க்க மாட்டார். ‘மேனா (பல்லக்கு) தயாராக இருக்கிறது. கூண்டு வண்டி (ரிக்ஷா) காத்திருக்கிறது. பெரியவா அதில் அமர்ந்து வரணும்’ என்று பக்தர்கள் அன்புடன் வேண்டிக் கொண்டாலும், அதை ஏற்க மறுத்து விடுவார்.
1932-ஆம் வருடம் நவம்பர் மாதம் 17-ஆம் தேதி மயிலாப்பூரில் மகா ஸ்வாமிகள் திரளான பக்தர்களிடையே உரையாற்றினார். நீதித்துறை யினர், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் முதலானோர் இதில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
அப்போது மகா ஸ்வாமிகள் ஆற்றிய உரை, மிகவும் அர்த்தம் பொதிந்தது; ஆழ்ந்து கவனிக்கத் தக்கதும்கூட! அவர் தனது உரையில் கூறியதாவது: ”கிராமங்களில் வசிக்கிறவர்கள் இப்போது நகரங்களை நோக்கி இடம் பெயரத் தொடங்கி இருக்கிறார்கள். இத்தகைய கிராமவாசிகளில் சிலர் தங்களது கிராமத்து வீடுகளை விற்று விட்டு, அதில் இருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு நகரங்களில் வசதியாக வாழ்கின்றனர்.
நிலங்களை இப்படி விற்று விட்டு முதலில் நகரங்களுக்கு வந்தவர்கள் – பிராமணர்கள்தான்! அவர்களைப் பின்பற்றி கிராமத்தில் உள்ள மற்ற சமூகத்தவர்களும் தங்கள் நிலங்களை விற்கத் துவங்கினார்கள். கிராமங்களில் உள்ள பல வீடுகள், முறையான பராமரிப்பு இல்லாததால் இடிந்து போய், குட்டிச் சுவர்களாகக் காட்சி அளிக்கின்றன. சரி… நகரத்துக்கு வந்தாயிற்று… இங்கேயாவது நிம்மதியாக இருக்க முடிகிறதா? வாழ்க்கை அமைதியாக இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை.
காரணம்- தேவைக்கு அதிகமான பொருட்களை வாங்கி, ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் சேர்த்துக் கொள்கிறார்கள். ஒரு பொருளை வாங்குவதற்கு முன் ‘இது நமக்குத் தேவைதானா? அவசியம்தானா?’ என்று எவரும் யோசிப்பதில்லை. ஆக, வீட்டில் சேர்ந்துள்ள பொருட்களின் எண்ணிக்கை நாளாவட்டத்தில் பெருகி விடுகிறது. இதனால், ஒரு கட்டத்தில் – குடி இருக்கும் வீட்டையே – அதாவது வசதிகள் அதிகம் இருக்கக் கூடிய இடமாகப் பார்த்து ஜாகையை மாற்ற வேண்டி உள்ளது.
நகரத்தில் எல்லாமே வேகமாக நடைபெற வேண்டி இருக்கிறது. இதனால் பணச் செலவும் அதிகம். இங்கு நிதானமும் பொறுமையும் இருப்பதில்லை. பொதுவாக, இத்தகைய பணப் பற்றாக்குறையைப் போக்க மூன்று விதமான யோசனைகள் எனக்குத் தோன்றுகின்றன.
முதல் யோசனை: பெண்கள் உட்பட அனைத்துத் தரப்பினருமே ஆடை விஷயத்தில் செலவழிக்கும் பணம் அதிகம். எனவே, முதல் தரத்தில் உள்ள ஆடைகளையும் விலை அதிகம் உள்ளவற்றையும் தவிர்க்க வேண்டும்.
இரண்டாவது யோசனை: காபி சாப்பிடு வதற்குப் பதிலாக கோதுமைக் கஞ்சியை சாப்பிடலாம்; அல்லது மோர் குடிக்கலாம்.
மூன்றாவது யோசனை: கல்யாணம் முதலான நிகழ்வுகளின்போது ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து விட வேண்டும். வரதட்சணை வாங்கக் கூடாது. கிளப், பீச் என்று பொழுதுபோக்கு இடங்களுக்குச் செல்லும் நேரங்களை குறைத்துக் கொண்டு அந்த வேளையில் உங்களது நித்ய கர்மானுஷ் டங்களை செய்து முடிக்க வேண்டும்.”
சுமார் 77 வருடங்களுக்கு முன் மகா ஸ்வாமிகள் சொன்ன கருத்துக்கள் இன்றைய சமூகத்துக்கும் பொருந்தி வருவது கவனிக்கத் தக்க ஒன்று! எல்லா காலத்துக்கும் பொருந் துகிற பொக்கிஷ வரிகள் இவை!
புராதனம் மிக்க பழைமையான ஆலயங்களுக்குச் சென்று, அதன் மகிமைகளைப் பலரிடமும் சொல்லி, திருப்பணிகளை மேற்கொள்ள ஊக்கப்படுத்தினார் ஸ்வாமிகள். பள்ளிக்கூடம் போன்ற கலாசாலைகளுக்குச் சென்று மாணவர்களுக்குக் கல்வியுடன் பக்தியையும் போதித்தார். தன்னை சந்திக்க வருபவர்களிடம் அன்பு, ஒற்றுமை, கூட்டுக் குடும்பம் – இவற்றின் அவசியம் குறித்து பல விஷயங்களை அறிவுறுத்துவார்.
சென்னைப் பல்கலைக்கழக நூலகத்துக்குச் சென்று, அங்குள்ள நூல்களை ஆர்வத்துடன் பார்த்தார். மியூஸியம் சென்று அங்குள்ள பொக்கிஷங்களைப் பற்றி விசாரித்துக் கேட்டறிந்தார். ‘இது எனக்கு சம்பந்தம் இல்லை’ என்று எதையும் ஒதுக்க மாட்டார். சென்னை ஐ.சி.எஃப்-பில் உள்ள ரயில்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைக்குச் சென்று, ரயில்பெட்டிகள் தயாராகும் முறையை வியப்புடன் கவனித்தார். அங்குள்ள நவீன கருவிகளையும் அதன் செயல்பாடுகளையும் கேட்டறிந்தார். சென்னையில் உள்ள பத்திரிகை அலுவலகம் ஒன்றில், செய்திகள் அச்சு வடிவம் பெறும் முறை குறித்து விவரம் கேட்டறிந்தார்.
எப்போது, எங்கு சென்றாலும் தன்னுடன் வரும் பக்தர்கள் மற்றும் மடத்து ஊழியர்களையும் நன்றாகவே கவனிப்பார் ஸ்வாமிகள்!
பெரியவாளுக்கு காபி குடிக்கும் வழக்கம் இல்லை. அதே நேரம் மடத்துக்கு வருகிற பக்தர்களுக்கு காபி கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். தான் அதிகாலையில் கிளம்புவதாக இருந்தால், கிளம்பும் முன் தன் உதவியாளர்களிடம், ”எல்லாரும் காபி சாப்டாச்சோ? ஏன்னா சில பேருக்கு பெட்ரோல் போடலேன்னா வேலையே ஓடாது” என்று சொல்லி, பலமாகச் சிரிப்பாராம் ஸ்வாமிகள்.
பெரியவா தன் வாழ்நாளில் பணத்தைக் கையால் தொட்டதில்லை. ”அங்கே வெச்சுட்டுப் போ” என்று தரையைக் காண்பிப்பார். பணத்துடன் வந்தவரை, திருப்பியும் அனுப்பியிருக்கிறார். சில சந்தர்ப்பங்களில் சிலரது பணத்தை, அங்கு வந்துள்ள வேறு பக்தரின் உதவிக்காகத் தரச் சொல்லி விடுவார். ஒருவர் கொடுக்கும் பணத்தை மகான் ஏற்கிறார் என்றால், அதற்கு சம்பந்தப்பட்டவர் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
No comments:
Post a Comment