திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில், விருதுநகர்

மூலவர்: நின்ற நாராயணப் பெருமாள், வாசுதேவன், திருத்தங்காலப்பன்
தாயார்: செங்கமலத்தாயார், கமல மகாலட்சுமி, அன்ன நாயகி, ஆனந்தநாயகி, அமிர்த நாயகி

தீர்த்தம்: பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி

ஊரின் பெயர்: திருத்தங்கல், விருதுநகர்

மங்களாசாசனம் செய்தவர்: திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார்

தலச் சிறப்பு:
திவ்ய தேசங்களுள் ஒன்று.

இது குடைவரை கோவில்.

விமானம் - சோமசந்திர விமானம்.

தனித் தனி சன்னதிகளில் அனுமன், சக்கரத்தாழ்வார் ஆகியோர் உள்ளனர்.

மார்க்கண்டேயர், அருணன், பிருகு மகரிஷி ஆகியோர் மூலஸ்தானத்தில் உள்ளனர்.

இத்தலம் இருக்கும் மலையிலேயே சிவன், முருகன் ஆகிய கடவுள்களுக்குக் கோவில்கள் உள்ளன.

இத்தலத்தில் உள்ள பெருமாளுக்கு நான்கு தாயார்கள் உள்ளனர்.
அவர்கள்:
அன்னநாயகி ( ஸ்ரீதேவி)
அம்ருதநாயகி ( பூமா தேவி)
அனந்தநாயகி ( நீளாதேவி)
ஜாம்பவதி

இத்தலத்தில்தான் பெருமாளுக்கும் ஜாம்பவதிக்கும் திருமணம் நடந்திருக்கிறது.

தாயார் ஸ்ரீதேவி நின்ற கோலத்தில் மிக உயரமாக உள்ளார். தாயாருக்கு தினந்தோறும் திருமஞ்சனம் நடைபெறுகிறது. பெருமாளுக்கு விசேஷ நாள்களில் தைலக்காப்பு  நடைபெறுகிறது.

இத்தலத்தைக் குறித்த செய்தி சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது.

இம்மலை தங்காலமலை என்று அழைக்கப்படுகிறது.

இம்மலைக்கோவிலில் இரண்டு நிலைகள் உள்ளன. மேல் நிலையில்நின்ற கோலத்தில் மூலவர் 'நின்ற நாராயணப் பெருமாள்' என்ற பெயருடன் காணப்படுகிறார். இவரது திருமேனி சுதையினால் ஆனதாகும். இவருக்கு திருத்தங்காலப்பன் என்ற பெயரும், தெய்வீக வாசுதேவன் என்ற பெயரும் உண்டு.

இரண்டாவது நிலையில் செங்கமலத் தாயார் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இவருக்குக் கமல மகாலட்சுமியின் அன்னநாயகி, ஆனந்தநாயகி, அமிர்தநாயகி என்ற பெயர்கள் உண்டு.

மகாபலி சக்கரவர்த்தியின் மகன் வாணாசுரனுக்கு, உஷா என்ற மகள் இருந்தாள். அவள் தன் கனவில் அழகிய அரசகுமாரனை கண்டாள்.

தமது தோழி சித்திரலேகாவிடம் அந்த இளவரசனைப் பற்றிக் கூறி அவனை ஓவியமாக வரையச் செய்தாள். அந்த வாலிபன் பகவான் கிருஷ்ணரின் பேரனான அநிருத்தன் என்பது தெரிய வந்தது. அவனையே திருமணம் செய்ய வேண்டும் என்று அடம் பிடித்தாள். சித்திரலேகா துவாரகாபுரி சென்று அங்கு தூங்கிக் கொண்டிருந்த அநிருத்தனைக் கட்டிலுடன் தூக்கிக்கொண்டு இவளது மாளிகைக்குக் கொண்டுவந்து விட்டாள். விழித்துப் பார்த்த அநிருத்தன் தன் அருகில் அழகிய பெண்ணொருத்தி இருப்பதைக் கண்டான். நடந்தவற்றை அறிந்து உஷாவை காந்தர்வ மணம் புரிந்து கொண்டான். இதையறிந்த வாணாசுரன் அவர்களைக் கொல்ல முயன்றான். அப்போது வானத்தில் இருந்து அசரீரி சொன்னது, "இவர்களைக் கொண்டால் நீயும் அழிந்து போவாய்".

இதைக் கேட்டவுடன் வாணாசுரன் அநிருத்தனைச் சிறை வைத்தான். பகவான் கிருஷ்ணர் வாணாசுரனுடன் போரிட்டு அவனை வென்றார்.

துவாரகையில் அவர்களுடைய திருமணத்தை முறைப்படி நடத்த முடிவு செய்தார். ஆனால் திருத்தங்கலில் தவமிருந்த புரூர சக்கரவர்த்தியின் விருப்பத்தின் பேரில் இந்த தலத்திலேயே இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்து நின்ற நாராயணப்பெருமாளாகக் காட்சியளிக்கிறார்.

சுவேதம் என்ற தீவில் இருந்த ஓர் ஆலமரத்திற்கும் ஆதிசேஷனுக்கும் 'தங்களில் யார் பெரியவர்' என்ற சண்டை ஏற்பட்டது.  இருவரும் பிரம்மனிடம் சென்றனர். பிரம்மா "ஆதிசேஷனே சிறந்தவன்; காரணம், பெருமாள் ஆதிசேஷன் மீதுதான் பள்ளி கொண்டுள்ளார்" என்று கூறினார். இதனால் ஆலமரம் பெருமாளை நோக்கித் தவம் இருந்தது. பெருமாளும் ஆலமரத்தின் தவத்தை மெச்சிக் காட்சி கொடுத்து அதன் விருப்பத்தைக் கேட்டார். ஆலமரம், "தாங்கள் எப்போதும் நான் உதிர்க்கும் இலைமீது பள்ளி கொண்டு அருள வேண்டும்" என்று வேண்டிக் கொண்டது.

பெருமாள் ஆலமரத்திடம், "திருத்தங்கலில் நீ மலையாகச் சென்று அமர்க. நான் திருமகளைத் திருமணம் செய்யும் காலம் வரும். அப்போது உன் மீது நின்றும், பள்ளி கொண்டும் உனக்கும் உலக மக்களுக்கும் அருள் புரிகிறேன்" என்றார். மலை வடிவில் இங்கு தங்கிய ஆலமரம், தங்கும் ஆல மலை எனப்பட்டது. காலப்போக்கில் தங்காலமலை என்று ஆனது.

காலவரிஷி முனிவரின் மகனாகிய சிந்து மாமுனிவருக்கு பிரம்மனின் அருளால் சுகிருதி விகுருதி என்ற மகள்கள் பிறந்தனர். இருவருக்கும் முனிவர் அவர்களுடைய கண்வர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைத் தந்தார். சுகிருதி  சூரியனையும், விகிருதி  சுசர்மா என்பவரையும்  கணவர்களாகத் தேர்ந்தெடுத்தனர். சூரியனைக் கணவனாக அடைய சுகிருதி தவமிருந்தாள். சண்டகோஷன் என்ற அரக்கன், தவம் புரிந்துகொண்டிருந்த சுகிருதியைத் தூக்கிச் சென்றான்.  சூரியன் தமது சக்திகளில் ஒன்றான சண்ட சக்தியை அரக்கனைக் கொல்ல ஏவினார். அரக்கன் சுகிருதியை விட்டுவிட்டு ஒரு பிராமணரின் அருகில் சென்று நின்று விட்டான். அரக்கனை அழிக்க வந்த சண்ட சக்தி பிராமணனையும் சேர்த்து அழித்து விட்டது. இதனால் சூரியனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. சூரியன் பெருமாளை வேண்டினார். பெருமாள் சூரியனிடம் மகாலட்சுமி தவம் செய்த திருத்தங்கல் தீர்த்தத்தில் நீராடித்  தம்மை வணங்க தோஷம் நீங்கும் என்று கூறினார். அதன்படி நீராடி பிரம்மகத்தி தோஷம் நீங்க பெற்றார்.

கருடாழ்வார் இங்கு நான்கு திருக்கரங்களுடன் காணப்படுக்கிறார். முன்னிரண்டு கரங்கள் வணங்கிய நிலையில் காணப்படுகின்றன. பின்னிரு கரங்கள் அமிர்தகலசம், வாசுகி நாகம் ஆகியவற்றை ஏந்தியபடி இருக்கின்றன.  தமது எதிரியான வாசுகியை நண்பனாக ஏற்று கருடாழ்வார் கையில் ஏந்தியுள்ளார். இத்தலத்தில் மட்டுமே காணப்படும் அரிய காட்சி இதுவாகும்.  எதிரிகளால் துன்பப்படுபவர்கள் இத்தலத்தில் உள்ள கருடாழ்வாரை வழிபட்டால் எதிரிகளும் நண்பர்களாகி விடுவார்கள் என்பது ஒரு நம்பிக்கை.

தல வரலாறு
பாற்கடலில் பகவான் பள்ளி கொண்டிருந்த போது அவர் அருகில் இருந்த ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி ஆகிய மூவருக்கும் யார் உயர்ந்தவர் என்ற சச்சரவு ஏற்பட்டது. ஸ்ரீதேவியின் தோழிகள் "ஸ்ரீதேவி உயர்ந்தவர்; இவரே அதிர்ஷ்ட தேவதை; இவரே மகாலட்சுமி; இந்திரன் இவரால் தான் பலம் பெறுகிறார்; வேதங்கள் இவளைத் திருமகள் என்று போற்றுகின்றன; இவரது பெயரை முன்வைத்தே பெருமாளுக்கு ஸ்ரீநிவாசன் ஸ்ரீபதி ஸ்ரீநிகேதன் என்ற பெயர்கள் இருக்கின்றன" என்று கூறினர்.

பூமாதேவியின் தோழிகள், "பூமாதேவியே இவ்வுலகத்திற்கு ஆதாரமாக விளங்குபவர்; அவர் மிகவும் அமைதியானவர்; பொறுமையானவர்; இவரைக் காப்பதற்காகவே பெருமாள் வராக அவதாரம் எடுத்தார்" என்று கூறினர்.

நீளாதேவியின் தோழிகள், "நீளாதேவியை தண்ணீரின் தேவதை தண்ணீர்தான் நாரம் என்று அழைக்கப்படுகிறது. இதனால்தான் பெருமாளுக்கு நாராயணன் என்ற பெயர் ஏற்பட்டது. தண்ணீரைப் பாலாக மாற்றி அதில் ஆதிசேஷனை மிதக்க வைத்துத் தாங்குபவள் நீளாதேவி" என்றனர்.

கோபம் கொண்ட ஸ்ரீதேவி வைகுண்டத்தை விட்டுப் புறப்பட்டு பூமிக்கு வந்து தங்காலமலையில் செங்கமல நாச்சியார் என்ற பெயரில் கடுமையான தவம் புரிந்தார். பெருமாள் ஸ்ரீதேவிக்குக் காட்சி கொடுத்து அவரை ஏற்றுக்கொண்டார். திருமகள் இத்தலத்தில் வந்து தங்கியதால் திருத்தங்கல் என்ற பெயர் ஏற்பட்டது என்று கூறுவர்.

திருவிழா: வைகுண்ட ஏகாதசி

வேண்டுதலும் நேர்த்திக்கடனும்
திருமணத் தடை நீங்க இங்குள்ள பெருமாளுக்குப் பரிவட்டம் சாற்றி, திருமஞ்சனம் செய்து புளியோதரை படைத்து நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...