இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூரில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. அதை போன்று தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பூவனூரில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு என தனி சன்னதி உள்ளது.
நீடாமங்கலத்தில் இருந்து பூவனூர் 3கிமீ தூரத்தில் பூவனூர் உள்ளது. இங்குள்ள சதுரங்க வல்லபநாதர் கோவில் தேவார பாடலாசிரியர் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற பெருமை உடையது.
மூர்த்தி, தலம்,தீர்த்தம்
ஆகிய மூன்றாலும் சிறப்பு மிக்க இத்தலத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் தனி சன்னதியில் எழுத்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
கலியுகத்தில் அம்பிகை மானிடப் பெண்ணாக நெல்லையை ஆண்ட வசுனேனன் என்ற மன்னனின் மகளாக பிறந்தார். ராஜராஜேஸ்வரி என்ற பெயரில் அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்றாள். குறிப்பாக சதுரங்க(செஸ்) ஆட்டத்தில் வல்லவராக திகழ்ந்தாள். தன்னை சதுரங்க ஆட்டத்தில் வெல்பவரையே மணப்பேன் என வைராக்கியத்தோடு இருந்தாள். அம்பிகையை சதுரங்கத்தில் வெல்ல எவராலும் முடியவில்லை. மன்னன், தனது மகளின் திருமண பாக்கியத்திற்காக வேண்டிய தலங்களை வழிபட்டு பூவனூர் வந்து சேர்த்தார்.
பூவனூரில் சிவபெருமான் முதியவர் வேடத்தில் வந்து இளவரசியோடு சதுரங்கம் ஆடினார். அமாவாசைக்கு பிறகு வரும் 9 நாட்களுக்கு இந்த போட்டி நடைபெற்றது. இது நவராத்திரி காலமாகும். இறுதியில் விஜயதசமியன்று இறைவன் அம்பிகையை திருமணம் செய்து கொண்டதாக புராணம் கூறுகிறது.
பூலோகத்தில் சிவன்,பார்வதி முன்னிலையில் நடைபெறும் வழிபாடு மற்றும் வேள்விகளில் ஆதிபராசக்தியின் அம்சமாக சாமுண்டீஸ்வரி தோன்றுவதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
தெய்வத்திருமணம்:
மனித வடிவில் பூவனூருக்கு வந்த சிவன்,பார்வதி தெய்வ திருமணத்தை தரிசிக்க எண்ணற்ற சித்தர்களும், மகரிஷிகளும் ஒன்று கூடினர். சர்வேஷ்வரன் நடன கோலத்தில் காட்சி கொடுத்தார்.
சிவபெருமான் , உமாதேவியுடன் சதுரங்கம் ஆடியதால் சாமியின் பெயர் சதுரங்கவல்லபநாதர் ஆகும். கற்பகவல்லி,ராஜராஜேஸ்வரி என்று அம்மன் சன்னதிகள் உள்ளன.
2 அம்பிகை உள்ள தலங்களே நவராத்திரி வழிபாட்டுக்கு மிகச்சிறப்பானது என்பதாலும், நவராத்திரி வழிபாட்டிற்கு மேன்மை தரும் ராஜராஜேஸ்வரி சன்னதியோடு சாமுண்டீஸ்வரி அம்மன் தனிச்சன்னதி கொண்டு விளங்கி வரும் பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவில் சாரதா நவராத்திரி உள்ளிட்ட அனைத்து நவராத்திரிகளுக்கும் மிக உகந்ததாகும்.
அம்புபோடும் நிகழ்ச்சி:
தக்கவரன் கிடைக்காமல் எங்கே தன் மகன்/மகளுக்கு வயதாகிவிடுமோ என்ற மனக்கவலையுடன் வாழும் பெற்றோர்கள் பூவனூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்து நவராத்திரி காலத்தில் புனித நீராடி விரதமிருந்து வழிபட்டு வந்தால் திருமணம் விரைவில் கைகூடும் என்றும் சிவன்,பார்வதி இருவருமே மனித வடிவில் நடந்து வந்து தம் பாதங்களை பதித்த தலம் பூவனூர் என்பதாலும் பக்தர்கள் நினைத்த காரியங்கள் விரைவில் கைகூடும் என்று தலபுராணம் கூறுகிறது.
இந்த கோவிலில் நவராத்திரி விழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு நவராத்திரி உற்சவம் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் 1ம் தேதி மகிசாசுரமர்த்தினி அலங்காரமும், நேற்று 2ம் தேதி சரஸ்வதி அலங்காரமும் சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்புபோடும் நிகழ்ச்சி இன்று 3ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
No comments:
Post a Comment