தூத்துக்குடி சிவன் கோவில்...!

தூத்துக்குடியில் (திருமந்திர நகர்) முத்திரை பதித்த ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீசங்கரராமேஸ்வரர் திருக்கோவில்....!!!

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்தவுடன் இந்திரன் தனது மகளாகிய தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து வைத்தார் என கந்தபுராணத்தில்  கச்சியப்ப சிவாச்சாரியார் தெய்வானை திருமணப் படலத்தில் விரிவாக இதை விளக்கியுள்ளார். சிவபெருமானும் பார்வதியும் தங்கள் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிய மணமக்களை மார்புறத் தழுவி வாழ்த்துகின்றனர். முருகப்பெருமானின் திருமணத்தைக் கண்டுகளிக்க வந்த சிவபெருமானும், பார்வதிதேவியும் சோலை சூழ்ந்த இவ்வூருக்கு எழுந்தருளி தங்குகின்றனர். அவ்வமயம் உமையாள் சிவபெருமானிடம் வேதங்களின் விழுப் பொருளாகிய திருமந்திரத்தை உபதேசிக்குமாறு  வேண்டுகிறார். இறைவனிடம் அம்பிகை உபதேசம் பெற்ற திருத்தலமாதலின் இவ்வூர்  திருமந்திர நகர் என அழைக்கப்பட்டது.

புராணச் சிறப்பு :

இக்கோயிலை காசியப முனிவர், கவுதமர், பரத்துவாசர், அத்திரி போன்ற மா முனிவர்கள் வணங்கி அருள்பெற்றதாக தல புராணத் திரட்டுகள் கூறுகின்றன. தெய்வீக பயணமாக திருச்செந்தூர் வேலவனை வழிபட வந்த  காசியப முனிவர் சோலை மிகுந்த இவ்வூரைக் கண்டு மகிழ்ந்து இங்கு ஒரு சிவலிங்கத்தை எழுந்தருளச்செய்து வழிபாடு நிகழ்த்தினார் என்றும் அதுவே சங்கர  ராமேஸ்வரர் கோயில் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரம்பரிய சிறப்பு :

பாண்டிய மன்னராட்சியின் பிற்கால பாண்டிய மரபில் குறுநில மன்னரான சந்திரசேகர பாண்டியனின் புதல்வரான சங்கரராம பாண்டியன் கயத்தாறை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்து வந்தார். மன்னர் குலம் தழைக்க, மனை விளங்க ஒரு மழலைச் செல்வம் இல்லாது வருந்தினார். மன்னனின் வருத்தத்தைக் கண்ட  பெரியோர்கள் காசி போன்ற புண்ணிய திருத்தலங்களுக்குச் சென்று புனித நீராடி வருமாறு பணித்தனர். மன்னன் தனது பாரிவாரங்களுடன் புனித நீராடச்  செல்லும்போது இறைவனது குரல் அசாரீயாக ஒலித்துள்ளது. அப்போது வேந்தே நீ திருமந்திர நகரில் உள்ள, காசிக்கு இணையான வாஞ்சா புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி, அங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டு வா என ஒலித்தது. இதையடுத்து மன்னன் தீர்த்தத்தில் நீராடியவுடன் அசாரீயாக மீண்டும் அரசே காசியப முனிவரால் ஸ்தாபிக்கப்பட்டு, பூசிக்கப்பட்ட சிவலிங்க பெருமானுக்கு அங்கு கோபுரத்துடன் கூடிய திருக்கோயில் எழுப்புவாயாக என்றும் கேட்டுள்ளது.

அந்த  அசரீரியாக ஒலித்த இறைவனின் கட்டளைக்கு ஏற்ப மன்னரால் இத்திருக்கோயில்  கட்டப்பட்டது. சங்கரராமேஸ்வரருக்கு சொந்தமான 98 ஏக்கர் நிலங்கள்  இருப்பதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

குழந்தை பேறு திருத்தலம் :

இத்திருக்கோயிலில் உள்ள ‘வாஞ்சா புஷ்கரணி’ என்ற தீர்த்தத்தில் நீராடி  இறைவனை வழிபட்டு வந்தால் பிள்ளை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும்  பிள்ளைபேறு வேண்டுவோர் இங்கு வந்து வழிபட்டால் குழந்தை வரம் தரும்  அற்புதத் திருத்தலமாக இவ்வாலயம் விளங்குகிறது.

கோயில் திருவிழாக்கள் : 

இக்கோயிலில் ஆண்டுமுழுவதும் பல்வேறு திருவிழாக்கள் சிறப்பாக நடந்துவருகின்றன. சித்திரை திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இதில் 10ம் திருநாளில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையாகியதை தொடர்ந்து இருவரும் தனித்தனி தேரில் எழுந்தருளியதும் தேரோட்டம் நடைபெறும். இதே போல் கோயிலில் வைகாசி மாதம் சண்முகருக்கு நடைபெறும் புஷ்பாஞ்சலி தனித்துவமிக்கது. புரட்டாசியில் நவராத்திரி திருவிழா மற்றும் பாரிவேட்டை வெகு சிறப்பாக நடைபெறும். இதற்காக இங்கு பரந்து விரிந்த பாரிவேட்டை  மைதானம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசியில் திருக்கல்யாண திருவிழா 10 நாட்களும், கார்த்திகையில் திருக்கார்த்திகை   திருவிழாவையொட்டி சொக்கபனை ஏற்றுதலுல் விமரிசையாக நடந்து வருகிறது. மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 3 மணிக்கு நடைதிறந்து  திருபள்ளி எழுச்சி வழிபாடு, திருவாதிரை வழிபாடு நடைபெறும். தை மாதத்தில் நடைபெறும் தைப்பூசம்  மற்றும் தெப்பத் திருவிழா காண்போரை வெகுவாகக் கவரும். மாசியில் நடைபெறும் மகா சிவாரத்திரி விழாவில் ஆயிரக்கணக்கான சிவநேச செல்வர்கள் பங்கேற்பர். பங்குனி மாதம் காரைக்கால் அம்மையார் சிவபெருமானிடம் மாங்கனி பெற்ற  நிகழ்ச்சியும் ஆண்டுதோறும் பாரம்பரியம், வைதீகம் மாறாமல் நடந்து வருகிறது.

நடை திறப்பு :

தினமும் அதிகாலை  5 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 9.30 மணி  வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும். அதிகாலை 5.30 மணிக்கு திருவனந்தல் பூஜையும், காலை 8மணிக்கு  விளா பூஜையும், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையும் நடைபெறும். மாலை 6  மணிக்கு சாயரட்சையும், இரவு 8.30 மணிக்கு அர்த்தசாம பூஜையும் நடத்தப்பட்டு வருகிறது.

அமைவிடம் :

முத்து நகராம் தூத்துக்குடியின் இதயமாகத் திகழும் மத்திய பகுதியில்  இக்கோயில் அமைந்துள்ளது. தூத்துக்குடி  பழைய  பஸ் நிலையத்தில் இருந்தும், ரயில் நிலையங்களில் இருந்தும் நடந்து  செல்லும் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து வசதி :

தூத்துக்குடி நகர பஸ் மற்றும் ரயில் மூலம் தமிழகத்தின் அனைத்து  பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. அருகில் விமானநிலையமும் மற்றும் துறைமுகமும்  உள்ளன.

அன்னதானம் :

தமிழக அரசால் துவங்கப்பட்ட அன்னதான திட்டம் இக்கோயிலில் கடந்த 2003ம் ஆண்டு முதல் வெகு சிறப்பாக நடந்து வருகிறது. தினமும்  மதியம் 12 மணிக்கு 100  பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அன்னதானத் திட்டத்துக்கு நன்கொடை வழங்குவோருக்கு  வருமான வரிச்சட்டப்பிரிவுகளின் கீழ் வருமானவரி  விலக்கு அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...