ரிக்வேதத்தில் பல ரிக்குகளுக்கும், சாமவேதத்தில் பல கானங்களுக்கும் கௌதமர் கர்த்தா ஆவார்.
ஒரு காலத்தில் பிரம்மா தன் சக்தி முழுவதையும் பயன்படுத்தி,உலகில் உள்ள சகல வஸ்துக்களின் அழகையெல்லாம் ஒன்று திரட்டி அதன் மூலமாக ஒரு பெண்ணை சிருஷ்டி செய்து அவளுக்கு அகலிகை என்று பெயரிட்டனன்.
லோக பாலர்கள் அனைவரும் அவளை அடைய எண்ணிப் பிரம்மாவைத் தொல்லைப்படுத்தினர். அகலிகையைக் கௌதமரிடம் ஒப்புவித்தார் பிரம்மதேவர். வாலிபப் பருவம் உள்ள இருவரும் கானகத்தில் ஒன்றாக இருந்து தவ வாழ்க்கை மேற்கொண்டனர். இருவரும் புலன் அடக்கத்துடன் நடந்து கொண்டனர்.
பல ஆண்டுகளுக்குப் பின் பிரம்மா அழைக்கவே அகலிகையை அழைத்துச் சென்று அவரிடம் ஒப்புவித்தார் கௌதமர்.
கௌதமரின் புலன் அடக்கத்திற்கு மகிழ்ந்தார் பிரம்மதேவர்.தனியிடம், அடர்ந்த காடு, தனிமை, தடுப்பதற்கு ஒருவரும் இல்லை. இருப்பினும், தவறேதும் செய்யாமல் அகலிகையைப் பரிசுத்தமாய் ஒப்புவித்தார் கௌதமர். எனவே அகலிகையை அவருக்கே மனைவியாகத் தந்தார் பிரம்மதேவர்.
(அகலிகையை வேண்டி உலக பாலகர்கள் தன்னைத் தொல்லைப்படுத்தவே, பிரம்மாண்டத்தை மும்முறை சுற்றி வருபவர்க்கு அகலிகை உரியவள் என்று அறிவித்தார்.)
இந்நிலையில் நாரதர் கௌதமரை அழைத்துக் கொண்டு பிரம்மலோகம் வந்தார். வழியில் காமதேனு படுத்து இருந்தது.கௌதமர் காமதேனுவை மும்முறை வலம் வந்து வணங்கினார்.பின் இருவரும் பிரம்மலோகம் வந்தனர்.
கௌதமரைப் பிரம்மா வரவேற்றார். நாரதர் அகலிகையைக் கௌதமருக்குக் கொடுக்க வேண்டும் என்றார். பிரம்மாண்டத்தை மும்முறை சுற்றி முன்னதாக வர வேண்டும் என்றார் பிரம்மா.கௌதமர் காமதேனுவை வலம் வந்து வணங்கியதை நாரதர் அறிவித்தார். பிரம்மா வியந்தார். பசுவின் உடம்பில் பதினான்கு லோகங்களும் அடங்கி இருக்கின்றன என்று நான் சொல்லி இருக்கின்றேன். காமதேனுவைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?என்று வியந்து அகலிகையைக் கௌதமருக்கு மனைவியாகக் கொடுத்தார் பிரம்மா - என்ற இவ்வரலாறுகள் சிற்சில வேறுபாடுகளுடன் இதிகாச புராணங்களில் காணப்படுகின்றன.
அகலிகையையின் மீது ஆசை கொண்ட இந்திரன் கௌத முனிவரை வஞ்சித்தான். பின் முனிவரின் சாபத்தினால் உடம்பில் ஆயிரம் பெண் குறிகளைப் பெற்றான். இவையே மற்றவர்க்குக் கண்களாகவும் தென்படும் என்றமையின் இந்திரன் ஆயிரங்கண்ணன் ஆயினன். கல்லாய்ச் சபிக்கப்பட்ட அகலிகை ஸ்ரீராமன் பாதத்தூளியால் சாபவிமோசனம் பெற்றாள்.கௌதமருடன் சேர்ந்து வாழ்ந்தாள் என்பது இராமாயணத்தில் காணப்படும் வரலாறு.
உத்தங்க மகரிஷி கௌதம முனிவரின் சீடர். உத்தங்கர் தம் குருபத்தினி அகலிகைக்குச் சௌதாசன் என்னும் மன்னன் மனைவி அணிந்து இருந்த நாகரத்தினக் கற்கள் பதித்த கம்மல்களைக் குருதட்சிணையாகக் கொண்டு வந்து கொடுத்தார். கௌதமர் காயத்ரி தேவியைப் பக்தியுடன் உபாசித்து வந்தார். ஆலயம் ஒன்று அமைத்து அதில் காயத்ரியைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார்.
ஒருமுறை பூமியெங்கும் பதினைந்து ஆண்டுக்காலம் மழை பெய்யவில்லை. உணவும், நீரும் இன்றி உயிரிழந்தோர் பலர். நிலம் எங்கும் பாலை நிலம் ஆயிற்று. இருபிறப்பாளரான அந்தணர்கள் புகலிடம் தேடி அலைந்தனர். காயத்ரிதேவியின் அருளால் கௌதமரின் ஆசிரமம் எல்லாச் செழிப்புகளுடன் விளங்கியது.
கௌதமரின் ஆசிரமமே நம் அனைவரின் புகலிடம் என்று அந்தணர்கள் அனைவரும் அங்கு வந்து தங்கினர். வந்தவர்களை எல்லாம் கௌதமர் வரவேற்றார். தங்க இடமும், உண்ண உணவும் பிறவும் தந்தார். நாள்தோறும் ஆசிரமத்தில் கூட்டம் பெருகலாயிற்று. பல்லாயிரக்கணக்கானோரைக் காக்கவேண்டிய நிலையில் இருந்த கௌதமர் காயத்ரியிடம் சரண் புகுந்தார்.காயத்ரிதேவியே! மஹாவித்யே! மந்த்ர ரூபிணி! சூர்ய மண்டலவசின்யே! வேதாந்தஸ்வரூபிணியே! காலை, நண்பகல்,மாலை என முக்காலங்களிலும் மூன்று விதங்களில் காட்சி தருபவளே! என அம்மையைப் பிரார்த்தித்தார்.
முனிபுங்கவருக்குத் தேவி தரிசனம் தந்தாள். கௌதமரிடம் ஒரு அட்சய பாத்திரம் தந்தாள். அனைவருக்கும் இப்பாத்திரம் வேண்டியன வழங்கும் என்று அருளி மறைந்தாள்.
அம்பிகை தந்த அட்சய பாத்திரத்தின் வழியாக அனைவருக்கும் வேண்டியன வழங்கி வந்தார் முனிவர்.
யாகங்கள் செழித்தன. வைதீகக் கிரியைகள் சிறப்புற நடந்து வந்தன. கௌதமர் ஆசிரமம் சுவர்க்கத்தை விஞ்சியது. அங்கு அனைவருக்கும் வேண்டியன கிடைத்தன. ஆனந்தம் எங்கும் தாண்டவமாடியது.
முனிவரின் புகழ் எங்கும் பரவியது. அனைவரும் அவரைப் போற்றினர். இம்மேன்மைகளைக் கேள்வியுற்று தேவரிஷி நாரதர் அங்கு எழுந்தருளினார். அனைத்தையும் கண்டு மகிழ்ந்தார்.காயத்ரியின் மகிமைகள் தேவரிஷியைப் புளகாங்கிதம் அடைய வைத்தது. தேவியின் ஆலயம் சென்றார். வேதமாதாவைத் தொழுதார்.
இந்திரன் சபையிலும் கௌதமர் புகழ் பேசப்பட்டது. இதனைக் கேட்க கேட்க இருபிறப்பாளரான அந்தணர்க்குப் பொறாமை ஏற்பட்டது. தக்க சமயத்தில் கௌதமருக்குப் பழி உண்டாக்க வேண்டும் என்று காத்து இருந்தனர்.
ஆண்டுகள் பல சென்றன. மழை பொழிய நாடுகள் செழித்தன.அந்தணர்கள் அவரவர் இருப்பிடம் செல்ல ஆயத்தம் ஆயினர்.போகுமுன் கௌதமருக்குப் பழி உண்டாக்க எண்ணிச் சூழ்ச்சி செய்தனர்.
தம் மாயையால் ஒரு கிழப்பசுவைப் படைத்தனர். அப்பசுவைக் கௌதமரின் அக்நிஹோத்ர சாலைக்குள் ஏவினர். பசுவினைக் கண்ட கௌதமர், அக்நியால் பசுவினுக்குத் தீங்கு ஏற்பட்டு விடலாகாது என்று எண்ணி அதனைத் தம் ஊங்காரத்தால் விரட்டினார்.
பசுவோ மாயப்பசு. அது அங்கேயே விழுந்தது. யாகசாலைக்குள் தன் உயிரை விட்டது. தயாராய் இருந்த இரு பிறப்பாளர்கள் உள்ளே வந்தனர். அனைவரும் ஒரே குரலாய் சொல்லி வைத்தாற்போல் கௌதமர் கோஹத்தி செய்து விட்டார் (பசுவினைக் கொலை செய்தார்) என்று கூக்குரலிட்டனர். இவர் மாயாவி என்றனர்.
இதனைக் கேட்டார் கௌதமர். வியப்படைந்தார். தம் அனுட்டானங்களை முடித்துக் கொண்டார். தம் திவ்ய ஞான திருஷ்டியால் அந்தணர்களின் மாயையை உணர்ந்தார். அடங்காக் கோபம் கொண்டார்.
அந்தணர்களே! காயத்ரியிடமும் - வேதத்திலும் - வேதகர்மங்களிலும் உங்களுக்குப் பக்தி இல்லாமல் போகட்டும் என்று சபித்தார்.
காயத்ரியின் ஆலயம் சென்றார். தேவியை வணங்கினார். தேவி சிரித்துக் கொண்டே முனிவர் முன் தோன்றினாள். மகனே!பாம்பிற்குப் பால் வார்த்தாய்! அது நஞ்சைத் தானே கக்கும்!மனசாந்தி கொள் என்று முனிவரைத் தேற்றினாள்.
அந்தணர்கள் மனம் வருந்தி கௌதமரைப் பணிந்தனர்.சாபவிமோசனம் வேண்டினர். கிருஷ்ணாவதார காலம் வரை உங்களுக்கு நரகம் சித்திக்கும். அதன்பின் மீண்டும் பிறப்பீர்!அப்போது காயத்ரியைச் சரணம் அடைந்தால் நரகம் இல்லை.இல்லை எனில் நரகமே கிட்டும் என்று சாப விமோசனம் தந்தார்.
எனவே இன்றளவும் காயத்ரியை ஜெபிக்கும் இரு பிறப்பாளர்கள் சாபவிமோசனம் சொல்லி அதற்காகக் கௌதமரைத் தியானித்து ஜெபம் செய்கின்றனர்.
இயற்கை பிராமணத்வம் கொண்ட தேவாங்கர்க்கு இச்சாபம் இல்லை. எனவே சாப விமோசனமும் இல்லை.
கோதாவரி நதி :
புண்ணியம் செய்யப்போனால் பல இடையூறுகள் வரும். ஆனாலும், விடாமுயற்சியுடன் அந்தப் புண்ணியத்தைச் செய்து பலன் தேடிக்கொள்ள வேண்டும்.
ஆனால், பாவம் செய்வதற்கு எந்த இடையூறும் வராது. சுலபமாகச் செய்துவிடலாம்.
அப்படி தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் பாவத்தைப் போக்கக்கூடியவை புண்ணிய நதிகள். பாரத தேசத்தில் பல புண்ணிய நதிகள் ஓடிக்கொண்டி ருக்கின்றன. அதனால்தான் பாரத தேசம் புண்ணிய பூமி என்று அழைக் கப்படுகிறது.
புனித நதிகளில் முனிவர்களும் ஞானி களும் ரிஷிகளும் மகான்களும் பக்தியுடன் நீராடி ஞானத்தைப் பெற்றார்கள். அந்த நதிக்கரைகளில் அமர்ந்து தவம், தியானம், யோகம் செய்து பல நன்மைகளை அடைந்திருக்கிறார்கள்.
அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் நதியில் நீராடினால் சித்தம் சுத்தி அடைகிறது. உடல் பிணியைத் தீர்க்கிறது. மோட்சத்தை அளிக்கிறது.
எவ்வளவுதான் பணத்தை செலவு செய்தாலும் ஒரு நதியை உருவாக்க முடியாது. கடவுளின் கருணைதான் நதியை வரவழைக்கும். பாவத்தை சுமந்துகொண்டு, அதை இறக்கிவைக்க இடம் தெரியாமல் தடுமாறும் மனிதர்களுக்கு சரியான இடம் நதிகள்தான். பாவத்தை ஏற்றுக்கொள்ளும் சுமைதாங்கிகள் அவை. வடநாட்டில் கங்கை, தென்னாட்டில் காவேரி. இதில் மூழ்கி எழுந்தால் பாவங்கள் குறைகின்றன; பாரங்கள் தொலைகின்றன.
இவைபோன்றே தலைசிறந்த புண்ணிய நதியாகக் கருதப்படுவது கோதாவரி. ஏழு புண்ணிய நதிகளிலே கங்கையைப் போன்று கோதாவரியும் பெருமைக்குரிய நதி. கௌதம முனிவரின் தவத்தாலும், அவருடைய தவத்தைப் போற்றிய மகேஸ்வரனின் அனுக்கிரகத்தாலும் இந்த பூமிக்கு கோதாவரி வந்தது.
புராண காலத்தில் ஒருசமயம் பாரத பூமியில் பஞ்சம் நிலவியது. அப்போது மழை பொழிந்து பூமியில் தானியத்தை முளைக்கச் செய்ய கௌதம மகரிஷி மாபெரும் தவமியற்றினார். வருண பகவானின் அருளால் பூமியில் தானியங்கள் வளர்ந்தன. ஒரு குழியிலிருந்து முளைத்த தானியங்கள் முனிவரின் ஆசிரமத்தை நிறைத்தன. அவரது ஆசிரமத்தைச் சுற்றி தானியங்கள் கிடந்தன.
அவற்றையெல்லாம் மக்களுக்குக் கொடுத்தார்.
கௌதம முனிவர் பாராட்டப்படுவதைக் கேள்வியுற்ற சில முனிவர்கள் பொறாமை கொண்டு, கௌதம முனிவரின் ஆசிரமத்திலிருக்கும் தானியங்களை நாசப்படுத்த ஒரு பசுவை அனுப்பினார்கள். பசுவும் சென்று தானியங்களை நாசப்படுத்தியது. ஆனால், அந்த பசுவின்மேல் பரிதாபப்பட்டு, அதற்குப் புல்லைக் கொடுத்து உண்ணச் சொன்னார் கௌதம முனிவர். ஆனால், அந்தப் பசு தானியத்தையே குறிவைத்து நாசப்படுத்தியது.
வேறு வழி தோன்றாமல் முனிவர் அந்த பசுவைத் துரத்தினார். பசு அடி வாங்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் தானியத்தை நோக்கியே ஓடியது. இப்போது அதிக வேகமாக பசுவை அடித்துத் துரத்திச் சென்றார். வேகமாக ஓடிய பசு தடுமாறி ஒரு கிணற்றுக்குள் விழுந்து இறந்துபோனது. பசுவைக் கொன்ற பாவத்துக்காக விமோசனம் தேடி பரமேஸ்வரனை நோக்கித் தவமிருந்தார் கௌதமர். அவரது கடுமையான தவத்தைக் கண்ட ஈசன் தன் சடைமுடியிலிருந்து கங்கையைப்போல ஒரு நதியை உருவாக்கி அதில் கௌதமரை மூழ்கி எழச்செய்து பாவத்தைப் போக்கினார். அப்படி உருவான நதிதான் கோதாவரி.
இந்த நதி "த்ரயம்பக' என்னும் மலையிலிருந்து உற்பத்தியாகி கிழக்கு, தெற்காக ஓடுகிறது. இந்த நதிக்கரையில் பல முக்கிய தலங்கள், நகரங்கள், நீராடும் கட்டங்கள் உள்ளன. கோதாவரியின் தென்கரையிலிருக்கும் நாசிக்கும், வடகரையிலிருக்கும் பஞ்சவடியும் மகாபுண்ணிய க்ஷேத்ரங்கள். இங்குள்ள "ராமகுண்டம்' என்ற தீர்த்தம் "சுக்லதீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment