ஆரோக்கியத்திற்குச் சிறந்தது நெய்யா, வெண்ணெயா என்ற விவாதம் பட்டிமண்டபம் போன்று தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. 'பால்' என்ற ஒரே மூலப்பொருளிலிருந்தே நெய், வெண்ணெய் இரண்டும் பெறப்படுகின்றன. இரண்டுக்கும் பல விஷயங்கள் பொதுவாய் உள்ளன.
பாலில் இருந்து நெய், வெண்ணெய் இரண்டும் பெறப்படுகின்றன. வெண்ணெயில் அதிக அளவு கொழுப்பு இருப்பதால், கொலஸ்ட்ரால் அளவுகள் கூடுவதற்குக் காரணமாகிறது. ஏற்கனவே இதய நோய் இருப்பவர்களுக்கு மாரடைப்பு, ஸ்ட்ரோக் என்னும் மூளையில் இரத்தக்குழாய் அடைப்பு, இதய இரத்தநாளம் சம்மந்தப்பட்ட நோய், நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆகியவை ஏற்பட வாய்ப்பு அதிகம்.
வெண்ணெய்
'வெண்ணெய் வெட்டி சிப்பாய்' 'கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடித்தல்' போன்ற பல சொற்றொடர்கள் தமிழில் புழக்கத்தில் இருந்து வருகின்றன. இதைக் கொண்டு தமிழ்ச்சமுதாய வாழ்வில் வெண்ணெய் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
பாலிலிருந்து கிடைக்கும் தயிரை கடைந்து கொழுப்பை பிரித்தெடுத்து வெண்ணெய் பெறப்படுகிறது. பட்டர்ஃபேட் என்னும் இயற்கையான கொழுப்பு வெண்ணெயில் அதிகம் காணப்படுகிறது.
அதாவது வெண்ணெயில் ஏறத்தாழ 80 விழுக்காடு பட்டர்ஃபேட் என்ற இயற்கை கொழுப்பு உள்ளது. எஞ்சிய விழுக்காடு நீர், பால் புரதம், சில சமயத்தில் சோடியம் ஆகியவற்றால் நிரப்பப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 10 கிராம் வெண்ணெயில் 5 கிராம் பூரிதகொழுப்பு, 2 கிராம் மோனோ பூரிதமில்லா கொழுப்பு ஆகியவையும் சிறிதளவு பலபடித்தான பூரிதமில்லா கொழுப்பும் காணப்படுகிறது. வைட்டமின்கள் ஏ, டி மற்றும் ஈ ஆகியவையும் ஓரளவுக்குக் காணப்படுகின்றன.
வெண்ணெயின் பயன்கள்
பிரெட் என்னும் ரொட்டி மற்றும் அதன் டோஸ்ட் மீது பூசுவதற்கு, மசித்த உருளைக்கிழங்கு மற்றும் சமைத்த காய்கறிகளுடன் மற்றும் பல சமையல், பேக்கரி பண்டங்கள், பல்வேறு உணவுகள் தயாரிக்க வெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
வெண்ணெய் நண்பனா? பகைவனா?
வெண்ணெயில் அதிக அளவு பூரித கொழுப்பு இருப்பதால், செரம் லிப்பிடு என்ற கொழுப்பு மற்றும் முழு கொலஸ்ட்ரால் அளவுகள் கூடுவதற்குக் காரணமாகிறது. ஏற்கனவே இதய நோய் இருப்பவர்களுக்கு மாரடைப்பு, ஸ்ட்ரோக் என்னும் மூளையில் இரத்தக்குழாய் அடைப்பு, இதய இரத்தநாளம் சம்மந்தப்பட்ட நோய், நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆகியவை ஏற்படுவதற்கு வெண்ணெய் வழிவகுத்து விடும்.
தினசரி எடுத்துக்கொள்ளும் கலோரியில் 7 விழுக்காட்டுக்கும் அதிகமாக பூரித கொழுப்பின் அளவு இருக்கலாகாது என்று உடல் நலம் மற்றும் உணவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆகவே, கூடுமானவரைக்கும் குறைந்த அளவே வெண்ணெய் சாப்பிடுவது நல்லது.
நெய்
வெண்ணெயை உருக்கி, அதிலுள்ள நீரை முற்றிலுமாக நீக்கி, காய்ச்சுவதன் மூலம் அசுத்தங்கள், மாசு ஆகியவற்றையும் வெளியேற்றிய பின்னர் கிடைப்பதே நெய். லாக்டோஸ் உள்ளிட்ட பால் சார்ந்த புரதங்கள் வெண்ணெயிலிருந்து நீக்கப்படுகின்றன. இந்தியாவில் நெய் மிகவும் முக்கியமானது. பல்வேறு சமையல்களில் இது பயன்படுத்தப்படுகிறது.
வெண்ணெயில் 80 விழுக்காடு கொழுப்பு காணப்படுகிறது;நெய்யிலோ 99.5 விழுக்காடு கொழுப்பு உள்ளது. ஆனால், வெண்ணெயைக் காட்டிலும் நெய்யின் புகைநிலை அதிகமாகும். 500 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில்தான் நெய் சூடாகி, புகை வெளிவர ஆரம்பிக்கும். உணவுக்கு வெண்ணெயை காட்டிலும் அதிக சுவை கொடுக்கும் ஆற்றல் நெய்க்கு உண்டு.
நெய்யின் பயன்கள்
சமையலுக்கு பயன்படுகிறது. வதக்குவதற்கு, கிளறி பொரிப்பதற்கு மற்றும் முற்றிலும் பொரிப்பதற்கு என்று பல வகைகளில் நெய் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேத மருந்துகளிலும் நெய் இடம்பெறுகிறது.
சில ஆய்வுகள், நெய் கொலஸ்ட்ரால் அளவை மட்டுப்படுத்தி, இதயத்திற்கு ஆரோக்கியத்தை தருவதாக கூறுவதாக கருதப்படுகிறது. நெய்யில் பூரித கொழுப்பு அதிக அளவில் இருப்பதால் இதய ஆரோக்கியம் குறித்த இந்தக் கருத்தை உறுதி செய்வதற்கு மேற்கொண்டு ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.
எது உடலுக்கு நல்லது?
பூரிதம் மற்றும் மோனோபூரிதமற்ற கொழுப்புகள் வெண்ணெய், நெய் இரண்டிலுமே அதிக அளவு உள்ளன. இரண்டுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. ஆகவே, இரண்டையும் அளவாக சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்லது.
லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாதவர்கள் வெண்ணெயை சேர்த்துக்கொண்டால் அஜீரணம் ஏற்படலாம். ஆனால், நெய் சாப்பிட்டால் இதுபோன்ற விளைவுகள் ஏற்படாது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். என்னதான் சுவை மிகுந்ததாக இருந்தாலும் நெய்யை மட்டுமல்ல, வெண்ணெயையும் மட்டாய் சாப்பிடுவதே நல்லது.