விஜயாபதி_விசுவாமித்திரர்கோவில்__வெற்றிக்கு_ஒரு_தலம் - விஜயாபதி!




விஜயாபதி - திருநெல்வேலி மாவட்டம்.




வசிஷ்டரின் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றவர் விசுவாமித்திரர். ஆனால், அந்தப் பட்டம் அவருக்கு உடனே கிடைத்துவிடவில்லை. கடுமையான தவம் இயற்றிய பிறகே அவருக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைத்தது. விசுவாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் பெற்ற வரலாறு: ஒரு நாட்டின் மன்னனாக இருந்த கௌசிகன் என்பவன், வேட்டையாடுவதற்காக படைபரிவாரங்களுடன் காட்டுக்குச் சென்றான். வேட்டையாடி விட்டு திரும்பும் வழியில், வசிஷ்டரின் ஆசிரமம் பக்கமாக வருகிறார். தன் ஆசிரமம் பக்கமாக வந்த கௌசிக மன்னனையும் படைபரிவாரங்களையும் உணவு தந்து உபசரிக்க விரும்பிய வசிஷ்டர், கௌசிகனிடம், ‘‘உங்களுக்கும் உங்களுடைய படையினருக்கும் நான் உணவு பரிமாறுகிறேன், நீங்கள் உணவு உண்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும்’’ என்று சொன்னாராம்.

அதற்கு கெளசிகர், ‘’எனக்கும் என் படை யினருக்கும் உங்களால் உணவு பரிமாற முடியாது, காட்டுப் பகுதியில் ஆசிரமத்தில் தனிமையில் இருக்கும் நீ எப்படி இத்தனை பேருக்கும் உணவு சமைத்து பரிமாற முடியும்?’’ என்று கேட்டார்.

வசிஷ்டர், ‘‘முடியும் மன்னா, நீங்களும் உங்கள் பரிவாரங்களும் சற்றே இளைப்பாற அமருங்கள். சற்றுநேரத்துக்குள் உங்களுக்கு அறுசுவை விருந்து தயாராகிவிடும்’’ என்றார்.

பிறகு வசிஷ்டர், ஆசிரமத்துக்குப் பின்புறம் இருந்த கோமாதாவிடம் சென்று, ‘‘வந்திருக்கும் அனைவருக்கும் அறுசுவை விருந்து தயார் செய்து, பணிப்பெண்கள் மூலம் பரிமாற வேண்டும்’’ என்றார். அப்படியே சற்றுநேரத்தில் அறுசுவை விருந்து தயாரா னது.  பரிமாறுவதற்கு பணிப்பெண்களும் வந்தனர்.

வசிஷ்டரின் ஆசிரமத்தில் இப்படி ஒரு தெய்விகப் பசு இருப்பதைக் கண்ட கௌசிகன், ‘‘கேட்டதைத் தரும் அட்சய பத்திரமான கோமாதா, சாதாரண முனிவரான உன்னிடம் இருக்கக்கூடாது. நாட்டின் மன்னனான என்னிடம்தான் இருக்க வேண்டும்’’ என்று சொல்லி, அந்த தெய்விகப் பசுவைத் தனக்குத் தருமாறுக் கேட்டார். வசிஷ்டர் மறுத்தார்.

வசிஷ்டரின் மகிமை தெரியாத கௌசிகன், தன்னுடைய படையினரைப் பார்த்து, அந்தப் பசுவை இழுத்து வருமாறு கூறினான். படையினர் கோமாதாவை இழுத்து வரச் சென்றனர். அவர்கள் அனைவரையும் எரித்து சாம்பலாக்கும்படி சாபம் கொடுக்கிறார் வசிஷ்டர். அப்படியே படைவீரர்கள் அனைவரும் எரிந்து சாம்பலாகி விடுகின்றனர்.

அப்போதுதான் வசிஷ்டரின் தவ வலிமையை உணர்ந்துகொண்ட கௌசிகன், ‘‘தங்களுக்கு எப்படி இந்த வலிமை கிடைத்தது? தங்களைப் போலவே நானும் பிரம்மரிஷி ஆகவேண்டும். அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?’’ என்று கேட்டான்.

‘‘கடுமையாகத் தவம் இயற்றினால் மட்டுமே பிரம்மரிஷி பட்டம் கிடைக்கும். சுகபோகங்களில் திளைத்த உன்னால் அப்படி கடும் தவம் புரியமுடியாது’’ என்று வசிஷ்டர் சொல்ல,

‘‘படைபரிவாரங்கள் இல்லாமல் நான் நாட்டுக்குப் போவதும் ஒன்றுதான். போகாமல் இருப்பதும் ஒன்றுதான். எனவே நானும் தங்களைப் போல் கடும் தவம் புரிந்து, உங்கள் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெறுகிறேன்’’ என்று சபதம் செய்வதுபோல் கூறிவிட்டு தவம் இயற்றச் சென்றுவிட்டார்.

தவத்தின் பயனாக அளவற்ற ஆற்றலும் பெற்றார். விசுவாமித்திரர் என்ற பெயரும் ஏற்பட்டது. ஆனால், தவப் பயனாகத் தான் பெற்ற ஆற்றலை, திரிசங்கு சொர்க்கம் அமைத்துக் கொடுத்ததால் இழந்துவிட்டார். இழந்த சக்தியைப் பெறுவதற்காக மீண்டும் தவம் இயற்றும் பொருட்டு வட திசையில் இருந்து தென் திசைக்கு வந்து சேர்ந்த இடம்தான் விஜயாபதி. விஜயாபதி கடற்கரைக்கு அருகில் லிங்கத்திருமேனியாக இறைவனையும், இறைவியையும் எழுப்பி பூஜை செய்து, ஓமகுண்டம் வளர்க்க ஆரம்பித்தார். அப்போது யாகம் செய்ய விடாமல் தாடகை  என்ற அரக்கி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தாள். தாடகையின் தொல்லையைப் பொறுக்கமுடியாமல், விசுவாமித்திரர், ராம லட்சுமணர்களை அழைத்து வருகிறார். ராமபிரான் தாடகையை அழிக்க அஸ்திரம் தொடுத்தார். ராமரின் அஸ்திரத்துக்கு பலியான தாடகை, அருகில் உள்ள மலையில் விழுந்து மடிகிறாள். தாடகை விழுந்து மடிந்த மலை, தாடகை மலை என்றே அழைக்கப்படுகிறது. (கன்னியாகுமரி மாவட்டம், தோவாளைக்கு அருகில் இருக்கும் தாழக்குடி என்ற இடத்துக்கு அருகில் உள்ள இந்த மலை, ஒரு பெண் படுத்திருப்பதைப் போலவே காட்சி தருகிறது).

யாகத்தின் முடிவில், இறைவனும், இறைவியும் விசுவாமித்திர மகரிஷிக்கு தம்பதி சமேதராகக் காட்சி கொடுத்து ’’இழந்த சக்திகளைப் பெற்று விட்டாய்., காசிக்குச் சென்று உன்னை சபித்த வசிஷ்டர் வாயாலேயே ரிஷிகளில் உயர்ந்த பட்டமான ‘பிரம்மரிஷி’ பட்டத்தைப் பெறுவாய். வசிஷ்டரே உனக்கு குருவானவர். மேலும் நீ தவம் புரிந்த இந்த இடத்துக்கு வந்து செல்பவர்களுக்கு தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை’’ எனச் சொல்லி அருளினர். விசுவாமித்திரரும் காசிக்குச் சென்று, வசிஷ்டர் வாயாலேயே பிரம்ம ரிஷி என அழைக்கப்பட்டார். 

’விஜயம்’ என்றால் வெற்றி, ’பதி’ என்றால் இடம். விஜயாபதி என்றால் ‘வெற்றிக்கான இடம்’ என்பதாகும். விசுவாமித்திரர் யாகம் செய்த இடமாதலாலும், இழந்த சக்திகளை மீண்டும் பெற்று விட்ட இடமாதலாலும் இங்கு இவருக்குத் தனிக்கோயில் உள்ளது. இந்தியாவிலேயே விசுவாமித்திர மகரிஷிக்கு தனிக்கோயில் இருப்பது விஜயாபதியில்தான். திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது விஜயாபதி.

கடற்கரையை நோக்கி கையில் கமண்டலத் துடனும், கழுத்தில் ருத்திராட்ச மாலையுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார் விசுவாமித்திர மகரிஷி. அருகிலேயே உள்ளது விசுவாமித்திர மகாலிங்க சுவாமி கோயில். இறைவனை விசுவாமித்திரர் வழிபட்ட காரணத்தால், இத்தல இறைவனுக்கு விசுவாமித்திர மகாலிங்க சுவாமி என்றும், இறைவிக்கு அகிலாண்டேஸ்வரி என்றும் திருநாமம் வழங்கப்படுகிறது. இறைவனும், இறைவியும் தனித்தனி மண்டபத்தில் தனித்தனிச் சந்நிதிகளில் காட்சியளிக்கின்றனர். கோயிலின் தல விருட்சம் வில்வமரம்.

விசுவாமித்திரர் யாகம் செய்வதற்கு முன்னால், இங்குள்ள விநாயகரை வழிபட்டுவிட்டுத்தான் யாகம் செய்துள்ளார். அதனால், இந்த விநாயகருக்கு ஓமகுண்ட கணபதி என்று பெயர்.கணபதி சந்நிதிக்குள் வலப்புறம் ராமர், இடப்புறம் லட்சுமணர் உருவம் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. விசுவாமித்திரர் யாகம் செய்த ஓமகுண்டம் தற்போது கிணறு போல காட்சியளிக்கிறது. விசுவாமித்திரர் சித்திரை மாதம் அனுஷம் நட்சத்திரத்தன்று யாகமும், மாசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று தியானத்தையும் தொடங்கினாராம்.

விசுவாமித்திரரின் ஜன்ம நட்சத்திரம் விசாகம். ஒவ்வொரு மாதமும் அனுஷம், உத்திரட்டாதி, விசாகம் ஆகிய நட்சத்திரங் களிலும், பெளர்ணமி தினத்தன்றும் விசுவாமித்திரருக்கு சிறப்பு அபிஷேகமும்  புஷ்ப அர்ச்சனையும் நடைபெறு கின்றன. இதில் கலந்து கொண்டால், பித்ருக்கள் சாபம் நீங்குவதாகச் சொல்லப் படுகிறது. கடலில் நீராடி, ஈர ஆடையுடனே ஓமகுண்ட கணபதிக்கு சிதறு தேங்காய் உடைத்து, விசுவாமித்திரருக்கு சிவப்பு வெள்ளை வஸ்திரம் அணிவித்து, அவருக்கு உகந்த ரோஜாப்பூ மாலை சாத்தி, 11 நெய் தீபமேற்றி, விசுவாமித்திரர் சந்நிதியை மூன்று முறைச் சுற்றி வந்து, மறுபடியும் ஒரு முறை விசுவாமித்திரரை தரிசனம் செய்துவிட்டுச் சென்றால் சில நாட்களிலேயே முன்னேற்றம் தெரிவதாகக் கூறுகின்றனர் பலன் பெற்றவர்கள்.

விசுவாமித்திர மகாலிங்க சுவாமிக்கு வெள்ளை வஸ்திரம், வெள்ளை அரளி மாலை அணிவித்து, அகிலாண்டேஸ்வரி அம்பிகைக்கு சிவப்பு நிறப் பட்டு, செவ்வரளி மாலை சாத்தி நெய் தீபமிட்டு வழிபட்டால் நினைத்த காரியம் ஸித்தியாகுமாம். தைமாதம் தைப்பூசத்தில் இறைவனையும், இறைவியையும் விசுவாமித்திரர் பிரதிஷ்டை செய்ததால், தைப் பூசத்தன்று சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

அடைந்த தோல்வியை மாற்றி வெற்றியை அருளும் விஜயாபதி விசுவாமித்திரர் கோயிலுக்குச் சென்று, ஐயனையும் அம்பிகையையும் வழிபடுவதுடன், விசுவாமித்திரரையும் தரிசித்து வாழ்க்கையில் தோல்விகளைத் தவிர்த்து, எங்கும் எதிலும் வெற்றிகளே கிடைக்க பிரார்த்திப்போம்...

திருத்தலம்: விஜயாபதி

மூலவர்: விசுவாமித்திர மகாலிங்க சுவாமி

அம்பாள்: அகிலாண்டேஸ்வரி

ஸ்தல விருட்சம்: வில்வம்

வழிபட்டவர்: விசுவாமித்திரர்

பிரார்த்தனைச் சிறப்பு:  ஒவ்வொரு மாதமும் அனுஷம், உத்திரட்டாதி, விசாகம் ஆகிய நட்சத்திரங்களிலும், பெளர்ணமி தினத்தன்றும் விசுவாமித்திரருக்கு சிறப்பு அபிஷேகமும்  புஷ்ப அர்ச்சனையும் நடை பெறுகிறது. இதில் கலந்துகொண்டால், பித்ருக்கள் சாபம் நீங்குவதாகச் சொல்லப்படுகிறது.

எப்படிச் செல்வது..?

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது விஜயாபதி.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 முதல் 12 மணி வரை; மாலை 4 முதல் 8:30 மணி வரை.
                         

தெய்வத்தின் அன்பைப் பெறுவதற்குத் தேவையான தகுதி, கருணையும் புலனடக்கமுமே. முழுமையான நம்பிக்கையோடு தெய்வத்தின் பெயரை இடையறாமல் ஜபிப்பதன் மூலம் இவற்றைப் பெறமுடியும்.

ஒருநாள் காசி விஸ்வநாதர் கோவிலில் திடீரென்று ஏதோ உலோகம் விழும் ஒலி கேட்டது. பார்த்தால், தரையில் ஒரு தங்கத்தட்டு கிடந்தது. கர்ப்பகிருகத்தின் முன்னிருந்த அரங்கத்தின் உச்சியிலிருந்த திறந்தவெளி வழியே அது விழுந்திருக்க வேண்டும்.

எல்லோரும் ஆச்சரியத்துடன் அதைச் சூழ்ந்து நின்றனர். அதனருகே தலைமைப் பூஜாரி சென்று கூர்ந்து பார்த்தார். "என் பிரியமான பக்தனுக்கு உரியது இது" என்று அதில் எழுதப்பட்டிருந்தது. புரோகிதர் அதை உரக்கப் படித்தார். எல்லாப் பூஜாரிகளும் அதைப் பிடுங்கிக்கொள்ளப் போட்டி போட்டனர், "என்னைவிட யார் பெரிய பக்தன்? எனது நேரம், திறமை, பலம் எல்லாவற்றையும் நான் விஸ்வநாதரைப் பூஜிப்பதிலேயே செலவிடுகிறேன்!" என்றனர். ஆனால், யார் தொட்டாலும் அந்தத் தட்டு மண்ணால் ஆனதாக மாறிப்போனது.

தங்கத் தட்டைப் பற்றிய தகவல் காட்டுத்தீ போல எங்கும் பரவியது. பண்டிதர்கள், பாடகர்கள், கவிஞர்கள், உபன்யாசகர்கள் என்று எல்லோரும் அங்கே வந்தனர். ஆனால் யாருக்கும் அதிர்ஷ்டம் இருக்கவில்லை. காலம் உருண்டோடியது. தங்கத்தட்டு கேட்பாரில்லாமல் இருந்தது.

ஒருநாள் ஓர் வெளியூர்க்காரன் அங்கே வந்தான். கோவில் வாசலில் நின்றிருந்த பிச்சைக்காரர்கள், கண்ணிழந்தோர், காது கேளாதோர், அங்கம் குறைந்தோர் போன்றவர்கள் பிச்சை கேட்கும் பரிதாபக் குரலைக் கேட்டு அவன் கண்களில் நீர் நிரம்பியது. அவர்களுடைய துன்பத்தையும் பசியையும் தன்னால் நீக்க முடியவில்லையே என்று அவன் வெட்கமடைந்தான். அதற்காக தெய்வத்திடம் பிரார்த்திக்கலாம் என்றெண்ணிக் கோவிலுக்குள் நுழைந்தான்.

ஓரிடத்தில் மக்கள் கும்பலாக நின்றுகொண்டு எதையோ விவாதிப்பதைப் பார்த்தான். அவர்களிடையே நுழைந்து பார்த்தான். நடுவில் ஒரு தங்கத்தட்டு இருந்தது. அதன் கதையைக் கேட்டறிந்தான். அங்கிருந்தவர்களும் பூஜாரிகளும் பிரபஞ்ச நாயகனான விஸ்வநாதனைப் பெற முயலாமல், தங்கத்தட்டை அடைய முயற்சிப்பதை அறிந்து அவன் வருத்தமுற்றான். தங்கத்தட்டை அவன் கண்டுகொள்ளவில்லை என்பதைப் பார்த்து பூஜாரி அவனிடம் அந்தத் தட்டை எடுக்கும்படிக் கூறினார். அதற்கு அவன், "மரியாதைக்குரியவரே! எனக்கு வெள்ளியோ தங்கமோ ஒரு பொருட்டல்ல. கடவுளின் கருணை ஒன்றுக்காகவே நான் ஏங்கித் தவிக்கிறேன்" என்றான்.
பூஜாரிக்கு அவன்மீதிருந்த மரியாதை கூடியது. "எங்களுக்காகவாவது நீ அதை உன் கையில் எடு" என்றார் அவர். அதன்மீது சற்றும் பற்றில்லாமல் அதைத் தொட்டான். என்ன ஆச்சரியம்! அந்தத் தட்டு பலமடங்கு ஒளிவீசியது!

எல்லாப் புரோகிதர்களும் அவனைச் சூழ்ந்துகொண்டு, "ஐயா, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன படித்திருக்கிறீர்கள்? எந்தெந்த கல்விப் பிரிவுகளில் நீங்கள் வித்வான்? எத்தனை ஆண்டுகள் நீங்கள் தவம் செய்திருக்கிறீர்கள்?" என்றெல்லாம் கேட்டனர்.

"நான் எவ்வூரையும் சேர்ந்தவனல்ல. கடினமாக உழைத்து எனது ரொட்டியை நான் சம்பாதிக்கிறேன். நான் நாமஸ்மரணம் என்னும் சாதனை ஒன்றுமட்டுமே செய்கிறேன். அது என் இதயத்தைத் தூய்மையாக்கி அன்பாலும் கருணையாலும் நிரப்பியிருக்க வேண்டும். என் மனதையும் புலன்களையும் அடக்கும் ஆற்றலை அது எனக்குத் தந்தது. எந்த சாஸ்திரத்தையோ கல்வியையோ நான் கற்கவில்லை. தெய்வ நாமத்தைச் சொல்லும் கலை ஒன்றைத்தான் நான் கற்றுள்ளேன். நான் செய்யும் ஒரே செயல் ஏழைகளுக்குக் கருணை காட்டுவதுதான்" என்றான் அவன்.

தெய்வத்தின் அன்பைப் பெறுவதற்குத் தேவையான தகுதி, கருணையும் புலனடக்கமுமே. முழுமையான நம்பிக்கையோடு தெய்வத்தின் பெயரை இடையறாமல் ஜபிப்பதன் மூலம் இவற்றைப் பெறமுடியும்.

முக்தியை நோக்கி பயணப்படுக....

#அன்புடன் அகஸ்த்தியதேவி,,.

#ஆத்மாவை தீ சுடுவது இல்லை. நீர் நீறம்பபடுத்துவதில்லை. ஆயுதங்கள் ஊனப்படுதுவது  இல்லை. காரணம், ஆத்மாவிற்கு அழிவே இல்லை. ஆத்மா தற்காலிகமாக வாழுகின்ற இந்த உடல் மட்டும் தான் மரணத்தால் அழிந்து போகிறது. வாழுகிற வாழ்க்கையில், நாம் செய்த வினைப்பயனாக கிடைக்கின்ற பாவ புண்ணியங்களை அனுபவிப்பதற்கு ஆத்மா வேறொரு உடலை நாடி போகிறது.

#பற்றுகளை விட்டு விட்டால், ஆசைகளை துறந்துவிட்டால், செயல்களால் ஏற்படும் பலன்களை தியாகம் செய்து விட்டால், கர்ம வினைகள் அற்றுப் போய்விடுகின்றன. இதனால், பிறப்பற்ற நிலை ஏற்படுகிறது. பொய்மையிலிருந்து உண்மைக்கு வருவது போல, இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வருவதை போல, இறப்பிலிருந்து இறவாமைக்கு வருவது தான் உண்மையான முக்திநிலை என்று பல உபநிடங்கள் ஓங்கிய குரலில் உறுதியாக பேசுகின்றன.

#ஜீவன் என்பது பல்லாயிரம் பிறவிகளை எடுத்து, இறுதியாக எடுத்திருக்கும் பிறவியே மனிதப்பிறவியாகும். மனிதனாக பிறந்திருப்பது பாவத்தின் சம்பளத்தால் அல்ல. அறிய தவத்தின் பலநாள் ஆகும். காரணம், தெய்வமாக இருந்தால் கூட அது மனிதனாக பிறந்தால் மட்டுமே முக்தி என்ற உயரிய நிலையை அடைய இயலும் .

#கர்மா ஏற்படுத்திய தடைகளில் கட்டுப்பட்டு கிடக்கிற ஆத்மா ஜனனம், மனனம், மரணம் என்ற சக்கரத்திற்குள் அகப்பட்டு கொண்டு, வெளியே வரமுடியாமல் துடித்துக்கொண்டிருக்கிறது. இந்த சக்கரத்தை உடைத்து விட்டால் கர்மாவை முற்றிலுமாக அழித்து விட்டால் ஆத்மா, அளவிட முடியாத அறிவு, அளவிட முடியாத சக்தி, அளவிட முடியாத ஆனந்தம் போன்றவற்றை தருகின்ற முக்தி நிலையை கைவல்ய நிலையை அடையலாம்.

#முக்தி நலையை
நிர்வாண நிலை என்று சித்தர்கள்  கூறுகிறார். விளக்கில் உள்ள தீபம் ஏற்றப்படுவதற்கு முன்பு எங்கே இருந்ததோ அணைக்கப்பட்ட பிறகு எங்கே செல்கிறதோ, அந்த மஹா சூன்யத்தில் நிரந்தரமாக கலந்துவிடுவது தான் நிர்வாணம், முக்தி .

பூவனூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் :


      இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூரில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. அதை போன்று தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பூவனூரில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு என தனி சன்னதி உள்ளது.
   நீடாமங்கலத்தில் இருந்து பூவனூர் 3கிமீ தூரத்தில் பூவனூர் உள்ளது. இங்குள்ள சதுரங்க வல்லபநாதர் கோவில் தேவார பாடலாசிரியர் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற பெருமை உடையது.
   மூர்த்தி, தலம்,தீர்த்தம்
ஆகிய மூன்றாலும் சிறப்பு மிக்க இத்தலத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் தனி சன்னதியில் எழுத்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
    கலியுகத்தில் அம்பிகை மானிடப் பெண்ணாக நெல்லையை ஆண்ட வசுனேனன் என்ற மன்னனின் மகளாக பிறந்தார். ராஜராஜேஸ்வரி என்ற பெயரில் அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்றாள். குறிப்பாக சதுரங்க(செஸ்) ஆட்டத்தில் வல்லவராக திகழ்ந்தாள். தன்னை சதுரங்க ஆட்டத்தில் வெல்பவரையே மணப்பேன் என வைராக்கியத்தோடு இருந்தாள். அம்பிகையை சதுரங்கத்தில் வெல்ல எவராலும் முடியவில்லை. மன்னன், தனது மகளின் திருமண பாக்கியத்திற்காக வேண்டிய தலங்களை வழிபட்டு பூவனூர் வந்து சேர்த்தார்.
     பூவனூரில் சிவபெருமான் முதியவர் வேடத்தில் வந்து இளவரசியோடு சதுரங்கம் ஆடினார். அமாவாசைக்கு பிறகு வரும் 9 நாட்களுக்கு இந்த போட்டி நடைபெற்றது. இது நவராத்திரி காலமாகும். இறுதியில் விஜயதசமியன்று இறைவன் அம்பிகையை திருமணம் செய்து கொண்டதாக புராணம் கூறுகிறது.
  பூலோகத்தில் சிவன்,பார்வதி முன்னிலையில் நடைபெறும் வழிபாடு மற்றும் வேள்விகளில் ஆதிபராசக்தியின் அம்சமாக சாமுண்டீஸ்வரி தோன்றுவதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

தெய்வத்திருமணம்:
   மனித வடிவில் பூவனூருக்கு வந்த சிவன்,பார்வதி தெய்வ திருமணத்தை தரிசிக்க எண்ணற்ற சித்தர்களும், மகரிஷிகளும் ஒன்று கூடினர். சர்வேஷ்வரன் நடன கோலத்தில் காட்சி கொடுத்தார்.
சிவபெருமான் , உமாதேவியுடன் சதுரங்கம் ஆடியதால் சாமியின் பெயர் சதுரங்கவல்லபநாதர் ஆகும். கற்பகவல்லி,ராஜராஜேஸ்வரி என்று அம்மன் சன்னதிகள் உள்ளன.
2 அம்பிகை உள்ள தலங்களே நவராத்திரி வழிபாட்டுக்கு மிகச்சிறப்பானது என்பதாலும், நவராத்திரி வழிபாட்டிற்கு மேன்மை தரும் ராஜராஜேஸ்வரி சன்னதியோடு சாமுண்டீஸ்வரி அம்மன் தனிச்சன்னதி கொண்டு விளங்கி வரும் பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவில் சாரதா நவராத்திரி உள்ளிட்ட அனைத்து நவராத்திரிகளுக்கும் மிக உகந்ததாகும்.

அம்புபோடும் நிகழ்ச்சி:
     தக்கவரன் கிடைக்காமல் எங்கே தன் மகன்/மகளுக்கு வயதாகிவிடுமோ என்ற மனக்கவலையுடன் வாழும் பெற்றோர்கள் பூவனூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்து நவராத்திரி காலத்தில் புனித நீராடி விரதமிருந்து வழிபட்டு வந்தால் திருமணம் விரைவில் கைகூடும் என்றும் சிவன்,பார்வதி இருவருமே மனித வடிவில் நடந்து வந்து தம் பாதங்களை பதித்த தலம் பூவனூர் என்பதாலும் பக்தர்கள் நினைத்த காரியங்கள் விரைவில் கைகூடும் என்று தலபுராணம் கூறுகிறது.
  இந்த கோவிலில் நவராத்திரி விழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு நவராத்திரி உற்சவம் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் 1ம் தேதி  மகிசாசுரமர்த்தினி அலங்காரமும், நேற்று 2ம் தேதி சரஸ்வதி அலங்காரமும் சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்புபோடும் நிகழ்ச்சி இன்று 3ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

ஶ்ரீ மஹாலிங்கஸ்வாமி மஹிமை:

"மஹாலிங்கம்!! மத்யார்ஜுனா!!" என்றபடி திருவிசைநல்லூர் க்ருஹத்திலிருந்து வெளியில் எட்டிப் பார்த்தார் ஶ்ரீதரஐயாவாள். பேய் மழை கொட்டிக் கொண்டிருந்தது. இம்மழையைத் தாண்டி, காவேரி வெள்ளம் ஓடும் வாய்க்காலைத் தாண்டி திருவிடைமருதூர் கோவிலுக்கு எப்படி போக முடியும்!! ஶ்ரீதர ஐயாவாளுக்கு ஒரே கவலை!! மஹாலிங்கத்தை தர்சிக்காமல் அன்னம் புசிப்பதில்லை என்ற வ்ரதத்தில் இருக்கும் ஶ்ரீதர ஐயாவாள் அன்றிரவு உபவாஸம் இருப்பதாகத் தீர்மாணித்துக்கொண்டார்!!

திடீரென்று ராத்ரி நேரத்தில் வீட்டுக் கதவை யாரோ படபடவென்று தட்டும் சப்தம்!! கதவைத் திறக்கிறார் ஶ்ரீதரர். திருவிடைமருதூர் மத்யார்ஜுனர் கோவில் சிவாச்சாரியார்!!

"அடாடாடாடா!! ஸ்வாமி!! இந்த கொட்ற மழைல நனைஞ்சுண்டு வந்துருக்கேளே!! உள்ளே வாங்கோ!! வாங்கோ!!" தொப்பலாக மழையில் நனைந்துகொண்டு வந்திருக்கும் மஹாலிங்கஸ்வாமி அர்ச்சகரை உள்ளே அழைத்துக்கொண்டு வந்தார் ஶ்ரீதர ஐயாவாள்!!

"மஹாலிங்கஸ்வாமி ப்ரஸாதம் கிடைக்காத நீங்க சாப்பிட மாட்டேள்ன்னு நேக்குத் தெரியும்!! இந்த மழையில நீங்க எப்படி வர முடியும்!! சரின்னு நானே வந்துட்டேன்!!" ஶ்ரீதர ஐயாவாள் கண்களில் ஜலம் தளும்பி வழிகிறது!! மஹாலிங்கத்தின் கருணையை நினைத்தா அல்லது சிவாச்சாரியாரின் அன்பை நினைத்தா!! இரண்டுமே கலந்து தான்!!

புது வஸ்த்ரம் கொடுத்து அவரை உடுத்திக்கச்சொல்லி விட்டு, இருவருமாக பேசிக்கொண்டே ஶ்ரீதர ஐயாவாளின் மனைவி பரிமாறிய அன்னைத்தை இருவரும் சாப்பிடனர்!!
"ஆஹா!! ஸ்வாமி!! மழைல நினைஞ்சுண்டு வந்தது ரொம்ப பசிக்க ஆரம்பிச்சுடுத்து!! உங்க பார்யை கையாலே புசிக்கற அன்னம் தேவாம்ருதமா இருக்கு!!"

இருவரும் சாப்பிட்டுவிட்டு வீட்டின் கூடத்திலேயே படுத்துக்கொண்டனர்!! இருவரும் பேசிக்கொண்டே இருந்துவிட்டு எப்போது தூங்கினாரென்றே தெரியாதபடிக்கு ஶ்ரீதர ஐயாவாள் அசந்து விட்டார்!!

விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து பார்த்தால், பக்கத்தில் படுத்திருந்த சிவாச்சார்யாரைக் காணவில்லை.
"காலம்பற சீக்ரம் எழுந்து போய்ட்டார் போலருக்கே!! என்ன கார்யம்ன்னு தெரியல்லே!! நோக்கு ஏதாவது தெரியுமோ!! எப்போ புறப்பட்டார்ன்னு!!" தன் மனையாளிடம் கேட்டார் ஶ்ரீதர ஐயாவாள்.

"தெரியலியேந்நா!! நானும் உள்ள அசந்து தூங்கிட்டேன்!! சரி எழுப்ப வேண்டாமேன்னு கிளம்பிட்டார் போலருக்கு அண்ணா!! விடுங்கோ!! கோவிலுக்கு போறேளோன்னோ!! அங்க தான் இருப்பார்!! விஜாரிச்சுக்கலாம்!!" இது மனைவி.

"இல்லேடீ!! வாய்க்கால்லே வெள்ளமா ஜலம் ஓடறதேடீ!! எப்படி அவர் தாண்டி திருவிடைமருதூர்க்கு போவார்ன்னு தெரியல்லியே!!"

"ஏன்னா!! இதே வெள்ளம் தானே நேத்து ராத்ரியும் இருந்துருக்கும்!! எப்படி அவர் வந்தார்ன்னு நீங்க கேட்கல்லியே!!"

"அடாடாடா!! அது ஞாபகமில்லையே!! இந்த ப்ரளய ஜலத்துல மனுஷன் எப்படி நீந்திண்டு வந்தார்!! மஹாலிங்கம்!! மஹாலிங்கம்!!" என்றபடி அங்கலாய்த்துவிட்டு ஸ்நாநம் ஸந்த்யாவந்தனம் சிவபூஜை எல்லாம் முடித்து மத்யார்ஜூனேச்வரன் கோவிலுக்கு கிளம்பினார் ஶ்ரீதர ஐயாவாள்.

மழை நன்றாக விட்டிருந்தது!! வாய்க்காலில் முட்டிக்கால் அளவு ஜலம் ஓடிக்கொண்டிருந்தது!! எப்படியோ தாண்டி மத்யார்ஜுனர் கோவிலை அடைந்தார் ஶ்ரீதர ஐயாவாள்!!

நேராக மஹாலிங்கம் ஸந்நிதிக்கு சென்றார்!! அர்ச்சகரிடம் "ஏன் ஸ்வாமி!! மஹாலிங்கம் ஏதோ ரொம்ப களைப்பா இருக்கறாப்ல இல்லே!! மழை கொட்றதோல்லியோ!! ஒத்துக்கலை போலருக்கு!!" என்றார்!!

"இருக்கட்டும் ஸ்வாமி!! ஒரு நாள் தவறாத மஹாலிங்கம் ஸந்நிதியை தர்சிக்காத ப்ரஸாதம் வாங்காத நீங்க சாப்டதே இல்லே!! நேத்து ப்ரளயம் மாதிரி மழை!! என்னாலேயும் வந்து ப்ரஸாதம் கொடுக்க முடியல்லே!! என்ன பண்ணினேள்!! சிவாச்சாரியாரின் கேள்வியில் அதிர்ந்தார் ஶ்ரீதர ஐயாவாள்.

"ஸ்வாமி!! என்ன சொல்றேள்!! நீங்க தானே!! கொட்ற மழைல காவேரி வாய்க்காலைத் தாண்டி ஆத்துக்கு வந்து ப்ரஸாதம் கொடுத்தேள்!! புது வஸ்த்ரம் கூட கொடுத்தேன்!! அதைக் கட்டிண்டு எங்கூட சாப்டேள்!! விடியகாலம்பற தானே கிளம்பா போனேள்!! ராத்ரி எப்படி ப்ரளய ஜலம் மாதிரி ஓடற வாய்க்காலைத் தாண்டினேள்ன்னு கேட்கனும்ன்னு நினைச்சுண்ட்ருக்கேன்!!"

"என்ன சொல்றேள்!! நானா!! நான் வரவேயில்லையே!! இந்த மழைல வரமுடியல்லியேன்னு நீங்க என்ன பண்ணுவேளோன்னு நினைச்சுண்ட்ருந்தேனே!!"

"அப்போ!! வந்தது!!" மஹாலிங்கம் ஸந்நிதியில் பார்த்தால், நேற்று இரவு எந்த வஸ்த்ரத்தினை சிவாச்சாரியாருக்கு அளித்தாரோ, அதே வஸ்த்ரம் மஹாலிங்கத்தின் மேல்!!

ஶ்ரீதர ஐயாவாளுக்கு விதிர்விதித்து போய்விட்டது!! "ஆஹா!! ஆஹா!!அப்பா !! மஹாலிங்கம்!! மஹாலிங்கம்!! மத்யார்ஜுனா!! சங்கரா!! நீயா வந்தே!! எனக்காகக் கொட்ற மழைல நினைஞ்சுண்டு, உன் ப்ரஸாதத்தை நீயே கொடுத்து, புது வஸ்த்ரம் கட்டிண்டு, என் பக்கத்துலயே உட்கார்ந்து சாப்பிட்டு, என் கூடவே இருந்துண்டு, பரமேச்வரா!! பரமேச்வரா!! ஸர்வேச்வரா!! என்னால தாங்க முடியல்லே!!" இரண்டு கண்களும் ஜலத்தை ப்ரவாஹமாக பொழிந்தது!!

மஹாலிங்கத்தினுடைய அவ்யாஜ கருணையை என்னவென்று கூறுவது!! பக்தனுக்கும் பரமனுக்கும் இருக்கும் உறவே அலாதியானது!! பக்தனுக்காக பரமேச்வரன் எதையும் செய்வார் என்பதற்கான ப்ரத்யக்ஷ ஸாக்ஷியே ஶ்ரீதர ஐயாவாளுக்காக பரமேச்வரன் செய்தது!!

சிவ திவ்ய நாமங்கள், சிவ தோடயமங்கலம், சிவ நாம ஸங்கீர்த்தனம் பஜனை ஸம்ப்ரதாயத்தில் உயிர்ப்புடன் இன்றும் விளங்கு ஶ்ரீதர ஐயாவாளன்றோ காரணம்!!

சிவக்கீரை

கும்பகோணத்தில் மளிகைக்கடை நடத்தியவர் குமரேசன் செட்டியார். அவர் மனைவி சிவகாமி ஆச்சி. ஒரு சிறுவனை தத்தெடுத்து வளர்த்தனர்.

*‘சிவ சிவ’* என்ற நாமம் தவிர வேறு எதையும் அறியாதவர் குமரேசன்.

தினமும் காவிரியில் நீராடி விட்டு, அங்குள்ள சிவன் கோயில்களுக்கு சென்று வழிபடுவார்.  அன்னதானம் செய்வார். 

பக்தர்கள் விரும்பும் காய்கறியை, சிவகாமி சமைப்பார். வேலையாள் யாருமில்லை.

ஒரு நாள் நல்ல மழை பெய்தது. பக்தர்கள் யாரும் உணவு கேட்டு வரவில்லை. குமரேசன் குடையுடன் மகாமக குளக்கரைக்கு சென்றார். 

மண்டபத்தில் சாமியார் ஒருவர், தேவாரம் பாடிக் கொண்டிருந்தார். அவரை வீட்டுக்கு ருந்தினராக அழைத்து வந்தார்.

சிவகாமி அவரிடம், ஐயா!  தங்களுக்கு பிடித்த காய்கறியை சொன்னால்,சமையலை தொடங்குவேன், என்றார். உடனே சாமியார் காய்கறிகள் பயிரிட்டிருந்த இடத்துக்கு சென்றார்.

அங்கே கீரை வளர்ந்திருந்தது. _’கீரைத்தண்டு சாம்பாரும், முளைக்கீரை கூட்டும் போதும்’_

என்றார் சாமியார். குமரேசனும் கீரை பறித்தார்.  சாமியாரும் உதவிக்கு வந்தார்.

குமரேசன் பறித்த கீரையையும், சாமியார் பறித்த கீரையையும் தனித்தனியாக சமைத்தார் சிவகாமி. சாமியார் பறித்த கீரையை பூஜையறையில் நைவேத்யம் செய்தார்.

சாமியாருக்கு பெருமை பிடிபடவில்லை. தான் பறித்த கீரைக்கு முக்கியத்துவம் தர எண்ணியே, இப்படி நடப்பதாக எண்ணினார். சாப்பிடும் போது சிவகாமியிடம் இதுபற்றி கேட்டார்.

ஐயா! என் கணவர் சிவநாமம் சொல்லி பறித்ததால் முளைக்கீரை, *சிவக்கீரை* ஆகி விட்டது. அதனால் பூஜையில் வைக்க அவசியமில்லை. நீங்கள் மவுனமாக பறித்தீர்கள். அதனால் அதை நைவேத்யம் செய்தேன், என்றார்.

இது கேட்ட சாமியார் கலங்கிப் போனார். தம்பதியின் சிவபக்தி முன், தனது துறவு போலி என்பதை உணர்ந்தார்.  இந்த தெய்வத்தம்பதிகள் ஒரே நாளில் இறந்தனர்.

இருவரும் ஒரே நேரத்தில் சிவனடி சேர்ந்தது கண்டு ஊர் மக்கள் அதிசயித்தனர்.

சிவசக்தி சொரூபத்தில் காட்சி தரும் மூகாம்பிகை



கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, கொல்லூர் மூகாம்பிகை ஆலயம். இந்தக் கோவிலில் மூகாம்பிகை, சிவசக்தி சொரூபத்தில் காட்சி தருகிறாள். மகிஷாசூரனை வதம் செய்த மூகாம்பிகை அம்மன் எழுந்தருளி உள்ள இந்த ஆலயம், மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவில், கொடசாத்திர மலை அடிவாரத்தில் ஓடும் வற்றாத ஜீவ நதியான சவுபர்னிகா ஆற்றின் கரையில் இருக்கிறது.

தாய் மூகாம்பிகை, ரத்தின கற்களால் ஆன ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு அலங்கார ரூபிணியாய் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள்.

இந்த கோவிலில் உள்ள ஜோதிர்லிங்கத்தின் மத்தியில், தனித்தன்மை வாய்ந்த அதிசயிக்கத்தக்க தங்க நிற கோடு ஒன்று இருக்கிறது. இது லிங்கத்தை சரிபாதியாக பிரிக்கிறது. லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் போது மட்டும் இது ஒளிரும். லிங்கத்தின் வலது பாதி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரையும், இடது பாதி காளி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரையும் சுட்டிக்காட்டுகிறது. இந்த பஞ்சலோக சிலைக்கு ஆதிசங்கரர் அபிஷேகம் செய்து வழிபட்டிருக்கிறார்.

இந்த ஆலயம் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

உடுப்பி, மங்களூரு, பெங்களூருவில் இருந்து இந்த ஆலயத்திற்குச் செல்ல பஸ் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. பெங்களூருவில் இருந்து 458 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது.

THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE

Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser?   Get up ten minutes earlier at 5.50 and get used t...