பஞ்சபாத்ரம் என்று ஏன் சொல்லுகிறோம்? அதுக்கு ஏன் அப்பெயர் வந்தது?
பஞ்ச பாத்திரத்தை பற்றி மூன்று விதமான விவரங்கள் உண்டு.
முதலில் ஆராதனத்திற்க்கு பயன்படும் அந்த பஞ்ச பாத்திரம் இயற் பெயர் 'பஞ்ச பத்ர பாத்திரம்' என்பர் பெரியோர்.
அதாவது அந்த பாத்திரத்தில் ஐவகை பத்திரங்களை(இலைகள்) அதிலுள்ள நீரில் இட்டு அந்நீரை உத்தரணி என்ற சிறு கரண்டியால் எடுத்து பூஜைக்கு, ஆராதனைகளுக்கு பயன்படுத்துவதால் அப்பெயர்.
அது என்ன பஞ்ச பத்ரம்?
அதுவா துளசி, அருகு, வேம்பு, வில்வம், வன்னி ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள் என்பர்.
இந்த பத்திரங்களும் தீர்த்தமும் விடப்படும் பாத்திரம் 'பஞ்ச பத்ர பாத்திரம்'. இதுவே காலப்போக்கில் மருவி பஞ்ச பாத்திரம் என்றானது.
இந்த பத்திரங்கள் மூலிகைகளாகும். இந்த பத்ரங்கள் தெய்வீகமானவை பூஜைகளுக்கு ஏற்றவை.
இப்படியாக ஐந்து இலைகளையும் பகவத் கைங்கர்யத்திற்க்கு அர்ப்பணித்து அர்க்யம்,பாத்யம், ஆசமனியம் என தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
ஶ்ரீ வைஷ்ணவர்கள் விஷ்ணு பகவான் ஆராதனத்திற்கு உகந்தது துளசிதளம் ( திருத்துழாய்).
ஸ்மார்த்தார்கள் ஆராதிக்கும் சிவனுக்கு உகந்தது வில்வம் என்பர் (பெருமாள் கோவிலிலும் வில்வ அர்ச்சனை செய்வர்).
சிவனின் பத்னியான அம்மனுக்கு வேப்பிலை உகந்தது.
அவரின் புத்திரனான விநாயகருக்கு அருகம் புல் உகந்தது.
படைப்பு தொழிலை கவனிக்கும் பிரம்மனுக்கு அத்தி இலை சிறப்பானது.
இப்படியாக ஐந்து பத்ரங்களை ஒவ்வொரு ஆராதனைக்கும் அவரவர்கள் உபயோகிப்பதால் பஞ்ச பத்ர பாத்ரம் என்பர்.
திருவாராதனத்தில் பகவானுக்கு அர்க்கியம், பாத்தியம், ஆசமனீயம், ஸ்நானீயம், சுத்தோதகம் என்று பஞ்ச உபசாரம் செய்ய உபயோகிப்பதால் அந்த ஐந்து நீர்வட்டில் பஞ்ச பாத்ரம் என அழைக்கிறோம்.
பஞ்சபாத்திரம் = பஞ்ச+ பாத்திரம்.
பெரும்பாலும் இல்லத்தில் அல்லது நமது பெருமாள் கோவில்களில் 5 பாத்திரங்களில் பெருமாள் முன் தீர்த்தம் இருக்கும். ஆனால் தீர்த்த விநியோகம் செய்யும் போது ஒரு கிண்ணத்தில் உள்ள தீர்த்தத்தை மட்டுமே நமக்குத் தருகிறார்கள்.
பஞ்சோபசார பாத்ரம் என்றால் என்ன?
அதாவது பெருமாளுக்கு
அர்க்யம் -கைகளை சுத்தம் செய்ய
பாத்யம் - பாதங்களை சுத்திகரிக்க
ஆசமனீயம் - இது ஆசமனம்
ஸ்நானீயம் - திருமேனிக்கு
சர்வார்த்த தோயம் -
மேலே உள்ள உபசாரத்தை தவிர உள்ள மற்ற அனைத்து உபசாரங்களுக்கும் என பயன் படுத்துவதால் அந்த ஐந்து பாத்திரங்களையும் பஞ்ச பாத்திரங்கள் என்பர்.
அப்போ சொம்பு எதுக்கு?
மேலே சொல்லியுள்ள உபசாரங்களுக்கு தேவையான தீர்த்தத்தை வைப்பதற்க்கு அதில் இருந்து தீர்த்தம் எடுத்து தான் இந்த பஞ்ச பாத்திரங்களுக்கு தேவையான தீர்த்தத்தை விடுவார்கள்.
அப்படியானால் கோவிலில் தீர்த்த விநோயோகத்திற்கு எதில் இருந்து தீர்த்தம் தருவார்கள்?
அதாவது நமக்குக் கொண்டு வந்து கொடுக்கும் தீர்த்தம் சர்வார்த்த தோயம் என்ற அந்த ஐந்தாம் பாத்திரத்தில் இருந்து தருவார்கள்.
அந்த பாத்ரம் தான் நடுவில் வைக்கப்பட்டு இருக்கும். மற்ற அனைத்தின் உபசார தீர்தங்களும் இந்த ஐந்தாவது பாத்திரத்திற்க்கே தான் போயும் வரவும் செய்யும்.
இந்த தீர்த்தங்களில் பெரும்பாலும் இடப்படும் பொருட்களும் ஐந்தாகும்.
பச்சைக் கர்ப்பூரம் (ஶ்ரீவைஷ்ணவர்கள் மற்றும் பெருமாள் கோவில்களில் மட்டும் உபயோகிப்பர்).
ஏலக்காய், இலவங்கம் ஜாதிக்காய், வெட்டிவேர்.
இவற்றுடன் சிறிது மஞ்சள் கலந்து சில கோவில்களில் உபயோகிப்பர்.
மூன்றாவதாக பஞ்சபாத்ரம் என்று ஒரே ஒரு பாத்ரத்தை சொல்லுவர்.
பொதுவாக அந்த டம்ளர் போலுள்ள பாத்ரத்தை பஞ்சமுக பாத்ரம் என்பர்.
விளக்கில் தானே பஞ்சமுகம்? நீர் பாத்ரத்துக்கும் பஞ்சமுகம் என்பதா?
பஞ்சமுகம்என்பதற்குஅர்த்தமே வேறு.
வியாக்கரண சாஸ்திரப்படி பஞ்ச என்றால் விஸ்தாரம் என்று பொருள்.
இந்த பாத்திரத்தின் முகப்பு மாத்திரம் நன்றாக விரிந்து பெரியதாகவும் உடம்பு ஒடுங்கி சிறுத்தும் இருப்பதால் இதற்கு பஞ்சமுகம் என்றும் பெயர்.
அதேபோல் திருவாராதனத்திற்க்கு உபயோகிக்கும் அந்த டம்ளர் போன்ற பாத்திரத்தின் தலைப்பாகம் விரிந்தும் உடல் சிறுத்தும் இருப்பதனால் அந்த பாத்திரத்தை மட்டும் கூட பஞ்ச பாத்திரம் என்று கூறுவர் பெரியோர்.
யோகம்
ஒரு சிலர் தியானத்தில் அமர்ந்திருப்பதைப் பார்க்கும் பொழுதே, அவர்கள் உள்ளுக்குள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பது தெரிந்து விடும். முகம் தீவிரமாக எதையோ எட்டிப்பிடித்து விட வேண்டும் என்கிற பாவனையை வெளிப்படுத்தும். கண்கள் அசைந்து கொண்டேயிருக்கும். உடல் ஒரே நிலையில் இருக்காது. தன் இருப்பை மாற்றிக் கொண்டேயிருக்கும். கடுமையான போராட்டம் நடக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்து விடும். ஆனால், இவ்வளவு விரைப்புத் தன்மையும், போராட்டமும் தேவையில்லை. பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு, தியானத்தில் அமரும் பொழுது, குருவானவர் உடலையும், மனதையும் தளர்வாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதை கேட்கலாம். அதுதான் தியானத்திற்கான சரியான நிலையாகும். இறுக்கமாக, கட்டுண்டு கிடக்கும் எந்த ஒரு இயக்கமும் சீராக நடைபெறாது.
யோகாசனம், உடற் பயிற்சிகள் எல்லாம் செய்து நன்றாக முறுக்கேறி விட்ட பிறகு, நாடி நரம்புகளை இளக்கி அதாவது நன்றாகத் தளர்த்தி விட வேண்டும் என்று சொல்வது இதற்காகத்தான். அப்பொழுதுதான் இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், உயிர் ஓட்டம் எல்லாம் சீராக நடைபெற்று, பயிற்சியின் பலன் நமக்கு முழுமையாகக் கிடைக்கும். அதைப் போலவே தியானம் செய்யும் பொழுது நம் அறிவையும் தளர்த்தி வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். பலதரப்பட்ட பற்றுகளால், உபாதைகளால், எண்ணங்களால் கட்டுண்டு கிடக்கின்ற அறிவை தளர்த்தி இயல்பான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அதன் இயக்கம் சீரான இயக்கமாக விளங்கும்.
நம் அறிவுதான் நம்மை பல்வேறு விஷயங்களில் கட்டிப் பிடித்து வைத்திருக்கிறது. எனவே அது சதா சர்வ காலமும் இறுக்கமான கடின நிலையிலேயே இருக்கிறது. நாம் எப்பொழுதும் நமது இந்த தேகத்தைதான் நாம் என்று எண்ணி வருகிறோம். அப்படிப்பட்ட எண்ணம் வலிமை அடைவதற்கு அறிவுதான் காரணமாக இருக்கிறது. நம்மை இந்த உலகாய விவகாரங்களில் பிணைத்து வைப்பது உடல் பற்றுதான். இந்த உடலை நான் என்று எண்ணுபவனுக்கு ஒரு நாளும் மனம் வசப்படாது, ஒரு நிலைப்படாது. இப்பொழுது ஒரு கேள்வி வருகிறது. தேகத்தை கவனிக்காமல் விட்டு விட்டால் துன்பங்கள் ஏற்படுமல்லவா ? உண்மைதான், உங்களை யார் தேகத்தை கவனிக்க வேண்டாம் என்று சொன்னது. உடலைப் பராமரிப்பது மிகவும் அவசியமாகும். ஆனால், அதன் மீது பற்று வைக்காதே என்றுதான் சொல்கிறார்கள்.
பற்றுதல் என்றால் விடாமல் பிடித்துக் கொள்ளுதல் என்பது பொருள். புலன்களைப் பற்றிக்கொண்டு மனதை அவற்றின் போக்கில் போக விடாதே என்று சொல்கிறார்கள். படகு போன்றது உடல். வாழ்க்கை எனும் பெருங்கடலைக் கடக்க பேருதவி செய்வது இந்த உடல்தான். எனவே அதை நன்றாகப் பராமரிக்க வேண்டும். அதில் ஓட்டை விழுந்தால் நம் பயணம் முற்றுப் பெறாமல் போய் விடும். அதற்காக படகை எப்பொழுதும் தலையில் தூக்கி வைத்துக் கொள்ள வேண்டுமா என்ன ? அதுதான் பற்று. தரைக்கு வரும் பொழுது படகை தண்ணீரில் விட்டு விட்டுதானே வீடு திரும்ப வேண்டும் ? இங்கே நிலைமையே வேறு. நாம் அனைவருமே படகைத் தலையில் சுமந்து கொண்டு திரிபவர்களாகவே இருக்கிறோம்.
இந்த வாழ்க்கை என்பதே உடலின் சௌகர்யத்திற்காக மட்டுமே என்று ஆகி விட்டது. வானத்திலிருந்து பூமி மீது விழுகின்ற நீரானது, அது விழுகின்ற இடத்தின் தன்மையை அடைகின்றது. உதாரணமாக ஆற்று நீர், கடல் நீர், சாக்கடை நீர், செம்மண்ணில் விழுவது சிகப்பாக இருக்கிறது, வண்டல் மண்ணில் விழுவது அது ஒரு நிறத்தில் இருக்கிறது. கரிசல் மண்ணில் விழும் நீர் அது ஒரு தன்மையை அடைகிறது. இது போல இடத்தின் தன்மையை நீர் பெற்றுக் கொள்கிறது. ஆனால், சூரியனின் கதிர் பட்டு ஆவியாகும் பொழுது அது இந்தத் தன்மைகள் அனைத்தையும் விட்டு விட்டு தூய நன்னீராக மேலே போய் விடுகிறது. அதற்குப் பிறகு தண்ணீருக்கு எந்த வித தன்மைகளோ, பேதங்களோ கிடையாது.
அது போலவே நாமும். பரமாத்மாவிடம் இருந்து வருகிறோம். ஜீவிப்பதற்காக இந்த உடலைப் பெற்று வந்தோம். உதவி வேண்டும், துணை வேண்டும் என்பதற்காக உறவுகளைப் பெற்றிருக்கிறோம். போகும் போது அனைத்தையும் விட்டு விட்டு தூய மனதுடன் போக வேண்டும்தானே ? ஆனால் அவ்வாறு போக முடிகிறதா ? முடியவில்லையே ? சொந்த இடம், சொந்த ஊர், சொந்த வீடு, மனைவி, மக்கள், உறவுகள் என்று பட்டியல் போய்க் கொண்டேயிருக்கிறது. இவற்றை எல்லாம் விட்டு விட்டு எப்படிப் போவது ? இதுதான் பற்று. அந்தந்த நிலையில் நம் கடமையை பற்றற்ற நிலையில் சிறப்பாக செய்ய வேண்டும். வாழ்க்கை எனும் நாடகம் முடியும் பொழுது வேசத்தை கலைத்து விட வேண்டும். பல்வேறு பற்றுகள், எண்ணங்கள், உபாதிகளில் சிக்குண்டு கிடக்கிற மனமானது இவற்றில் கட்டுண்டு, இறுகிக் கிடக்கிறது. அதைத் தளர்த்தி, இளகிய மனமாக ஆக்க வேண்டும் என்பது கோட்பாடு.
அதன் தளைகளை தளர்த்தி விட வேண்டும். தளைதல் என்றால் பிணைத்தல் என்று பொருள். அந்தக் கட்டுகளைத் தளைகளை அறுத்து அறிவைத் தளர்த்தி விடும் பொழுது, இந்த ஊரும், பேரும், உற்றார், உறவினரும், இனமும் எல்லாம் தனக்குரியது என்று எண்ணிக் கொண்டிருந்த அறிவும் இளகி விடுகிறது. அதற்குப் பிறகு அதைப் பற்றிப் பிடித்துள்ள பொருளற்ற பல்வேறு எண்ணங்களை எளிதில் நீக்கி விடலாம். பூமியில் விழுந்து அசுத்தமான நீர் மீண்டும் தூய நீர் ஆவது போல, அறிவும் இளகி தூய்மை பெறும் பொழுது அது ஆனந்த சொரூபமாக வடிவெடுக்கிறது. அழுக்கு படிந்த அறிவு துன்பத்தை ஏற்படுத்திக் கொள்கிறது. அழுக்குகள் நீங்கிய தூய அறிவு ஆனந்த சொரூபமாக ஆகி விடுகிறது. ஆக அறிவைத் தூய அறிவாக ஆக்குவதே ஆத்ம சாதனமேயன்றி, வேறில்லை. அறிவு பேரறிவாகத், தூய அறிவாக ஆவதே ஆனந்தம். அறிவு தூய்மை அடைந்து அடைந்து ஆனந்த சொரூபமாக மாறி மாறி முடிவில் பேரறிவு நிலையை எட்டும். அதுவே இணைத்தல். அதுவே யோகம். அதுவே வீடுபேறு.
இறைவனுக்கு பூஜைகள் செய்து இறைவனை ஏன் அலங்கரிக்கிறோம்
கோவிலிலும் சரி, வீட்டிலும் சரி இறைவனின் சிலையை, படத்தை துடைத்து, அபிஷேகம் பண்ணி, பூவாலும், சந்தனத்தாலும், தங்க நகைகளாலும் ஏன் அலங்காரம் செய்து இறைவன் பவனி வரும் பல்லக்கு தேர் போன்றவற்றையும் நாம் ஏன் அலங்காரம் செய்கிறோம்?
இறைவன் நம்மை கேட்டானா ? என்னை அலங்காரம் செய் என்று... இறைவன் நம்மிடம் கோரிக்கை வைத்தானா இல்லையே...! பின் எதற்கு இந்த அலங்காரம்?
மனித மனம் அலைபாயக் கூடியது.
ஒரு இடத்தில் நிலைத்து நில்லாதது. அதை ஒரு இடத்தில் நிலைக்க வைக்க வேண்டும் என்றால் மனக் கட்டுப்பாடு என்பது அவ்வளவு எளிதில் வருவது இல்லை. முதலில் மனது ஒன்றின் மேல் படிய பதிய வைக்க வேண்டும். மனம் அதில் லயிக்க வேண்டும். அதிலேயே மனம் கலக்க வேண்டும். அதற்கு நம் முன்னவர்கள் கண்ட வழி அலங்காரம். அதனால் தான் கோவிலை நமது அனைத்து புலன்களுக்கும் இன்பம் தரும்படி அமைத்தார்கள்.
காதுக்கு இனிமையாக பாடல்கள், நாதஸ்வரம், சொற்பொழிவுகள் என்றும், மூக்குக்கு இனிமையாக கற்பூரம், ஊதுபத்தி, மலர்கள் என்றும், நாவுக்கு இனிமையாக பிரசாதம் என்றும், உடலுக்கு இனிமையாக நந்தவனக் காற்றும், கண்ணுக்கு இனிமை தர கோவில் சிற்பங்கள், பெரிய கோபுரங்கள், அழாகன மூர்த்தி வடிவங்கள் என்று அந்த சிலைகளுக்கு அலங்காரம் என்று வைத்தார்கள்.
இறைவனை எவ்வளவுக்கெவ்வளவு அலங்காரம் பண்ணுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நம் கண்ணுக்கு இனிமை. உதாரணமாக
நம் குழந்தைகளுக்கு நாம் புதிது புதியதாய் ஆடை அணிகலன்கள் அணிவித்து பார்த்து மகிழ்கிறோம் அல்லவா.? அது போல... அலங்காரம் பண்ணுவது நாம் கண்டு மகிழ. மனைவிக்கு பட்டுச் சேலை வாங்கித் தந்து அழகு பார்ப்பது போல அவளுக்கு நகை அணிவித்து அழகு பார்க்கிறோம்.
இப்படி அழகை இரசிக்கும் போது
மனம் லயிக்கிறது. மனம் ஒன்று படுகிறது. மனதில் ஆவல் எழுகிறது.
ஒன்றை ரசிக்கும் போது ரசிப்பின் உச்சத்தில் கண்ணை மூடி அமர்ந்து கொள்கிறோம். கண்ணை மூடி ரசிக்கிறோம்... அது சிறந்த உணவாக இருக்கட்டும், சிறந்த இசையாக இருக்கட்டும், நல்ல நறுமணமாக இருக்கட்டும், ரசனையின் உச்சம் கண் மூடி உள்ளுக்குள் அதை அனுபவிக்கிறோம்..
அதைப்போல இறைவனை, அவன் உருவத்தை சிங்காரம் பண்ணி பார்க்கும் போது அதில் லயித்து அதை அப்படியே மனதில் காண்போம்.
அது தான் தியானம். உருவத்தில் இருந்து உருவம் இல்லா அந்த சக்தியை அறிவதுதான் தியானம்.
உன்னைச் சிங்காரித்து
உன்னழகைப் பாராமல்....
என்னைச் சிங்காரித்து
இருந்தேன் பராபரமே.....!
உண்மை உணர்ந்தவர்கள்
இறைவா உன்னை சிங்காரித்து அழகு பார்க்காமல் என்னை சிங்காரித்து கொண்டு இருந்து விட்டேனே என்கிறார்.
அன்பர்களே நீங்களே சிந்தியுங்கள்
எது அழகு என்று?
கோயில்களில் இருக்கும் துவாரபாலகர்கள் யார்
அனைத்துக் கோயில்களிலும் கருவறைக்கு முன்பாக துவார பாலகர்கள் அருள்பாலிப்பார்கள். "பாலனம் என்றால் காப்பாற்றுதல் என்று பொருள்.
அந்தக் காலத்தில் அரசர்களுக்கு மெய்க்காப்பாளர்கள் இருந்ததைப் போலவும், தற்போது "Security" என்ற பெயரில் காவலர் இருப்பதைப் போலவும், கோயிலின் சாந்நித்தியத்தைக் காப்பாற்றுவதையே முதன்மையான கடமையாகக் கொண்டவர்கள் துவார பாலகர்கள்.
துவார பாலகர்களின அருள் இருந்தால் தான் நாம் இறைவனின் அருளைப்பெற முடியும்.
கருவறையில் எழுந்தருளியிருக்கும் இறைவன் அனைத்தும் அறிந்தவர். நம்முடைய முன்வினைகள் என்னென்ன, நாம் எதற்காக வந்திருக்கிறோம் என்பதையெல்லாம் அறிந்து, முன்வினைகளுக்கு ஏற்ப சுக-துக்கங்களை அனுபவிக்கச் செய்து, நம்மைப் பக்குவப்படுத்தி, நிறைவாக இறைவனை அடைவதற்கு உரிய நிலையை நாம் பெறச் செய்யும் புனித இடம்தான் கோயில்.
எப்படி ஒரு CCTV Camera மூலம் அது பொருத்தப்பட்டிருக்கும் இடத்தில் நடக்கக்கூடிய காரியங்கள் பதிவு செய்யப் படுகின்றனவோ, அதேபோன்று கோயிலில் நடைபெறக்கூடிய அனைத்து நிகழ்வுகளும், துவாரபாலகர்களினால் கண்காணிக்கப்பட்டு, இறைவனிடம் தெரிவிக்கப்படுகின்றன.
அனைத்து தோஷங்களையும் நீக்கும் இரட்டை பிள்ளையார் வழிபாடு
ஒரு சமயம் சிவபெருமானை பிரிந்து பார்வதி தேவி தனியாகத் தவம் செய்ய நேரிட்டது. அப்போது விநாயகர் தன்னைப் போலவே ஒரு வடிவத்தை தன்னருகே உருவாக்கி, அந்தத் திருவுருவத்தையே அதாவது தன்னையே சங்கல்பம் செய்து கொண்டு, பிரிந்த தன் பெற்றோர் விரைவில் ஒன்று சேர பிரார்த்தித்தார். இதன் அடிப்படையில் மயிலாடுதுறை அருகிலுள்ள திருவேள்விக்குடித் திருத்தலத்தில் சங்கல்ப (இரட்டை) விநாயகர் என்ற பெயரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். ‘ஆதி இரட்டை விநாயகர்’ என்று போற்றப்படுபவரும் இவரே.
அது போலவே திருச்சி பாலக்கரைப் பக்கத்திலும் இரட்டைப் பிள்ளையார் அருள்புரிகிறார். பிள்ளையாருக்கு உரிய தேய்பிறை சதுர்த்தி திதி மட்டுமின்றி திருவோணம், திருவாதிரை, விசாக நட்சத்திரங்களும், திதிகளில் பஞ்சமியும் இவருக்குரியதாகக் கருதப்படுகிறது.
தேய்பிறை சதுர்த்தியில் இவருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து அர்ச்சித்து வழிபட்டால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீமைகள் விலகும். மேலும் கார் அரிசியில் மோதகம் (கொழுக்கட்டை) செய்து நிவேதனம் செய்தால் சந்திரனால் ஏற்படும் தோஷம் விலகும்.
திருவோண நட்சத்திரத்தில் இந்த இரட்டைப் பிள்ளையாருக்கு மாம்பழங்கள் நிவேதனம் செய்து ஏழைத் தம்பதிகளுக்கு அளித்தால், கணவன்-மனைவி உறவு பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
திருவாதிரையன்று வில்வத்தால் மாலை தொடுத்து இவரை வழிபட்டால் நோய் நொடிகள் குணமாகும். ஆரோக்கியமாக வாழலாம். பஞ்சமி திதியில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் பிரச்சினைகள் தீரும். செல்வ வளம் பெருகும். விசாக நட்சத்திரத்தன்று இரட்டை விநாயகருக்கு பூக்களால் தொடுத்த போர்வை போன்ற மலர் ஆடை அணிவித்தால் குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.
பொதுவாக, செவ்வாய்க் கிழமைகளில் வழிபட நாக தோஷம் விலகும், சனிக்கிழமைகளில் கனி வகைகளில் ஏதாவது ஒன்றைச் சம்ர்ப்பித்து வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும்.
தஞ்சை, திருவையாறு, ஐயாறப்பன் கோவிலில் உள்ளார் இரட்டைப் பிள்ளையார். இவர் சந்நிதிமுன் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம். திருமணமாகாத பெண்கள் சந்தான அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். கணவன்-மனைவி ஒற்றுமை பலப்பட சங்கடஹர சதுர்த்தியில் அருகம்புல் மாலை அணிவித்து, மோதகங்கள் படைத்து வழிபட்டால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தங்குதடையின்றி நிறைவேறும்.
மேலும் ஸ்ரீரங்கத்திற்கு அருகிலுள்ள உத்தமர்கோவில், திருச்சி உய்யகொண்டான் திருமலை சிவன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல் அடுத்த ஆறகலூரில் இருக்கும் கோவில், ஊட்டி பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள விநாயகர் கோவில் திருவண்ணாமலை போன்ற இடங்களிலும் இரட்டை விநாயகர் சந்நிதி உள்ளது.
இரட்டை விநாயகரை ஒரே சந்நிதியில் வழிபட்டால் இரு மடங்கு பலன்கள் கிடைக்கும்
புண்ணியம் என்பது என்ன?
நம்மிடம் உள்ளதை நம்மால்முடிந்ததை செய்வது.
மற்றவர்கள் நல்லாயிருக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவன் மட்டுமே புண்ணியத்தைச் செய்ய வேண்டும் என்று நினைப்பான்.
அப்படிப்பட்ட நல்ல மனம் ஒன்றே போதும் புண்ணியம் செய்வதற்கு.
ஆம் புண்ணியம் செய்ய மனம் வேண்டுமே தவிர பணம் தேவையில்லை.
உங்கள் மனம் நல்லதையே நினைக்கட்டும் அதுவும் மற்றவர்களுக்காக இருக்கட்டும்.
இது தான் புண்ணியம்.
மற்றவர்களின் துக்கங்களை உங்களது என்று எண்ணி வருந்துங்கள்.
உங்களுக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை மற்றவர்களுக்காகவாது கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
அனைத்து உயிர்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு உண்டு என்று எண்ணிக் கொள்ளுங்கள்.
உங்களால் அனைவருக்கும் அன்பான ஆதரவான எண்ணங்களை அளிக்க முடியும் என்று எண்ணுங்கள்.
உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று நம்புங்கள்.
இறைவனை துணைக்கு அழையுங்கள்.
மற்றவர்களுக்காக உதவ இறைவனிடம் வேண்டுங்கள்.
தன்னல மற்ற எண்ணத்தை இவ்வுலகில் பரவ விடுங்கள்.
அனைவரும் உங்களுக்கு அன்பானவர்களாக மாறிவிடுவார்கள்.
உங்கள் உள்ளம் மகிழ்ச்சியாகி விடும். அனைவரும் நம்மதியாக வாழ்வார்கள் அந்த மகா புண்ணியம் உங்களை மட்டுமே வந்து சேரும்.
இந்த புண்ணியச் செயலுக்கு நீங்கள் செலவு செய்தது என்ன?
*
ஒன்றுமில்லையே. பைசா கூட செலவு செய்யவில்லை. எங்கும் அலையவில்லை. யாரிடமும் கோபம் கொள்ளவில்லை. பொய் கூறவில்லை. யாரிடமும் எதற்காகவும் கையேந்தவில்லை. யாரும் உங்களை குறைகூறப் போவதில்லை. எதையும் இழக்கவில்லை. எதையும் இழக்காமல் நீங்கள் புண்ணியத்தை மட்டுமே சம்பாதிக்கிறீர்கள்.
சரி,இதை எப்படி செயல் வடிவத்திற்கு கொண்டு வருவது என்பதை பார்ப்போம்.
இதை செயல் வடிவத்திற்கு கொண்டு வருவதுமிக எளிது.
தினமும் ஏதேனும் ஒரு நேரத்தில் யாராவது ஒருவர் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
இதற்காக நேரம் காலம் பார்க்கத் தேவையில்லை.
எந்த நேரத்திலும் யாருக்காகவும் எண்ணிக் கொள்ளலாம்.
ஆரம்பத்தில் சொந்த பந்தங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
நாளடைவில் கண்ணில் படும் அனைவருக்காகவும் வேண்டிக் கொள்வீர்கள்.
நாட்கள் செல்ல செல்ல, நீங்கள் கேள்விப்பட்டவர்களுக்காகவும் அவர்கள் நல்ல முறையில் வாழ நீங்கள் எண்ணத் துவங்குவீர்கள்.
நீங்கள் வேண்டிக்கொள்ளும் நபர் பற்றி கவலைப் படாதீர்கள்.
அவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் அவர் நல்ல முறையில் வாழ நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள்.
ஆம்புலன்ஸ் வண்டிச் சத்தம் கேட்கும் போதல்லாம் அதில் பயணம் செய்பவர் நல்ல முறையில் குணம் அடையஇறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்.
யாரோ ஒருவர் விபத்தில் அடிபட்டுவிட்டார் என்று கேள்விப்பட்டால் அவர் உடல் நலம்பெற எண்ணிக்கொள்ளுங்கள்.
மனிதர்கள் மட்டுமல்ல அனைத்து உயிர்களிடமும் இந்தச் செயலை செய்யுங்கள்.
தெருவோரம் ஒரு மரம் வெட்டப்பட்டிருந்தால் அதற்காகவும் எண்ணிக் கொள்ளுங்கள்.
அந்த மரத்தை வெட்டியவர் மேலும் சில மரங்களை நடட்டும் என்று.
வெட்டப்பட்ட மரம் மற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவட்டும் என்று.
உலகத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்கட்டும் என்று ஒற்றை வரியில் முடித்துக் கொள்ளாதீர்கள்.
ஒவ்வொருவரையும் நினைவில் வைத்து தனிப்பட்ட முறையில் அவர்களுக்காக அவர்கள் நன்மைக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
மிகப் பெரிய புண்ணியம் உங்களை வந்து சேரும்.
இப்படியெல்லாம் செய்ய முடியுமா? என்றால் நிச்சயம் செய்ய முடியும்.
இந்த எண்ணங்களுக்காக நீங்கள் பணமாக செலவு செய்ய வேண்டியது எதுவும் இல்லை.
ஆனால் இதன்மூலம் கிடைப்பதோ மிகப் பெரியபுண்ணியம்.
எனவே புண்ணியம் செய்ய எதுவும் பணம் ஏதும் தேவையில்லை ,நல்ல எண்ணங்களுடன் கூடிய நல்ல செயல்கள் உடன் கூடிய மனம்இருந்தால் போதும்.
THIS 12 THINGS CHANGE YOUR LIFE TO BECOME POSITIVE
Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser? Get up ten minutes earlier at 5.50 and get used t...
-
Transform Your Life: Embracing Positive Every Step of the Way 1. Are you a 6 am riser? Get up ten minutes earlier at 5.50 and get used t...
-
Do you know MINIMALISM ? Do you know Minimalism Fulfilling real life! ------------------ Our father earned less than me. We are four childr...
-
Medicinal properties of Pearl Millet If eaten daily in the morning in the form of porridge or kali, it prevents the accumulation of b...



